Monday, November 29, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 2.......

முதலில் துறவு என்றால் என்ன?

மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை.

எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உயிரோடு இருக்க முடியுமா?. முடியாது. எல்லாவற்றையும் துறந்த நிலை என்றால் மண்,பொன்,பெண்,மது என்று உலக இன்பங்கள் எதிலும் பற்றில்லாமல் இருப்பது.


நீ துணி உடுத்தி இருக்கிறாயே அப்படியென்றால் அதன் மேல் பற்றா? என்று கேட்கக் கூடாது. மனிதனின் மிகவும் அடிப்படைத் தேவைகளைக் கூட பற்றில்லாத மனதுடன் உயிர் வாழ மட்டுமே தெரிவு செய்வதாகும்.

இறைப்பணி செய்வதும் துறவு நிலைக்கான தன்மை.


நீ துறவியா?


இல்லை முழுத்துறவு என்பது மனிதன் இறந்த பின்பு தான் முழுமையடைகிறது. அந்த நிலை நோக்கி செல்கிறோம் அவ்வளவே.


நீ ஏன் துறவியானாய்?

சிறு வயது முதலே இந்நிலை மேல் ஆர்வமிருந்த்து. இருந்தாலும் இல்லறம் எனை இழுத்த்து. ஒரு கட்டத்தில் என்னால் பணம் சம்பாரிக்க முடியாமல் போனபோது நான் அன்பு செலுத்திய என் மனைவி மக்களாலேயே வெறுக்கப்பட்டேன். அது என்னை வருத்தியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சாம இந்நிலைக்கு மாறி விட்டேன்.


வெறுப்புதான் உங்களை இந்நிலைக்கு தள்ளியதென்றால் ஒரு கட்டத்தில் துறவை வெறுத்து இல்லறம் புகுந்து விடுவீர்களா?. ஒரு நிலையின் வெறுப்பு இன்னொரு நிலைக்கு மாற்றினால் அதில் நிலைத்தன்மை இருக்குமா?.

முதலில அப்படிததான் இருந்தது. ஆனால் என் இறுதிப் பயணத்திற்கான தேடலும், இறைநாட்டமும் என் முழுகவனமும் துறவு நிலையிலேயே இருக்கிறது. என் மனதை நான் கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டேன். எனவே என் நிலை மாறாது.


சாமி இல்லறம், துறவறம் எது சிறந்த்து? இருவரின் இறுதி நிலைதான் என்ன?

இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தது தான். வாழ்க்கைத் தராசில் சம்மாய் இருக்கும் இரு தட்டுக்கள் தான் இவை. இல்லற வாழ்க்கையை முடித்து என்னைப்போல துறவு கொள்பவர்களும் உண்டு.

இருவரின் இறுதித்தேடலும் இறை தான். இல்லறவாசிக்கு பக்தி மார்க்கம். துறவறத்திற்கு யோக மார்க்கம், ஞான மார்க்கம்.


சாமி இரு நிலைகளுமே சமம் தான் என்றால் தங்களை தாழ்த்திக்கொண்டு உங்களின் கால்களில் விழும் இல்லறவாசிகளை ஏன் அனுமதிக்கிறீர்கள். அவர்களை விட நீங்கள் எந்த வகையில் உயர்ந்து விட்டீர்கள்?.


ஹ ஹ ஹ ஹ ஹா நல்ல கேள்வி. இல்லறத்தில் உள்ளவன் அந்த இறைநிலை பற்றிய சிந்தனையே இல்லாமல் இல்லறக்கடமைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர்கள். துறவிகளோ ஆன்மீகத்தில் லயித்து இறைவனையே நிணைத்து படித்து அழுது இறைநிலைக்காக ஏங்குபவர்கள். எந்த உண்மையான துறவியும் தன்னை வணங்கும் ஒருவனை அவன் தனக்கு மரியாதை கொடுக்கிறான் என்று எண்ண மாட்டார்கள். அவனுடைய பணிவு, வணக்கம், பக்தி எல்லாமே இறைவனைச்சார்ந்தவை என்று அவனுக்குத் தெரியும். எனவே அந்த வணக்கத்தின் மதிப்பை எப்போதும் தன் உள்ளத்தில் வைத்து கர்வம் கொள்ள மாட்டான் அதை அப்படியே இறைவனுக்கு அனுப்பி விடுவான்.



சரி அப்படியே இருக்கட்டும். தன்னைத் தாழ்த்தி வணங்கும் ஒருவனைத்தான் இறைவன் ஏற்றுக்கொள்வானா? எந்த நேரத்திலும் அவனையே நிணைத்து அவனைப்பாடும் ஒருவனுக்குத்தான் நீங்கள் சொல்லும் மோட்சம் அல்லது இறையை அடையும் பாக்கியம் கிடைக்குமா? சாதாரணமாக தன் இல்லறக் கடமையை சரியாய் முடித்து செத்துப்போகும் இல்லறவாசிக்கு உங்கள் பதில்?. இறைவனும் பாராபட்சம் பார்க்கும் ஒரு வியாபாரியாய்த் தான் இருப்பானா?. நீங்கள் அவனுக்கு ஜால்ரா அடிக்கும் கோஷ்டியாகத்தான் இருப்பீர்களா?





....continue

44 comments:

எல் கே said...

நல்ல கேள்விகள் அதற்கு ஏற்றபதில்களும் கூட,. இறைவன் எதையும் எதிர்ப்பார்ப்பது இல்லை

Anonymous said...

நல்ல பதிவு...

ஹேமா said...

நிறையவே சொல்லிக் கடவுள் என்கிற ஒன்று இருபதாக உறுதிப்படுத்த முயல்கிறீர்கள் வேலு !

VELU.G said...

மிக்க நன்றி LK

மிக்க நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

மிக்க நன்றி ஹேமா
நான் இப்போதைக்கு எதையும் உறுதிப்படுத்த முயலவில்லை.
ஒரு சிந்திக்கும் இளைஞனின் சில பதிலில்லாத கேள்விக்கு ஒரு நல்ல துறவி என்ன பதில் சொல்வார் என்று யோசித்தே சொன்னேன்.

Chitra said...

வித்தியாசமான பதிவு. தொடருங்க.

dheva said...

//நீ ஏன் துறவியானாய்?

சிறு வயது முதலே இந்நிலை மேல் ஆர்வமிருந்த்து. இருந்தாலும் இல்லறம் எனை இழுத்த்து. ஒரு கட்டத்தில் என்னால் பணம் சம்பாரிக்க முடியாமல் போனபோது நான் அன்பு செலுத்திய என் மனைவி மக்களாலேயே வெறுக்கப்பட்டேன். அது என்னை வருத்தியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சாம இந்நிலைக்கு மாறி விட்டேன்.//

வேலு..@ இந்த பதிலை எப்படி எடுத்துக் கொள்ள வேலு..யாரோ ஒரு துறவியின் அவர் மனோ நிலை சார்ந்த பதிலா இல்லை பொது பதிலாகவா?

பொது பதில் என்றால் முரண் இருக்கிறது.

dheva said...

//இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தது தான். வாழ்க்கைத் தராசில் சம்மாய் இருக்கும் இரு தட்டுக்கள் தான் இவை. இல்லற வாழ்க்கையை முடித்து என்னைப்போல துறவு கொள்பவர்களும் உண்டு. //

இரு வேறு வழிமுறைகள்... இதில் சமம் என்ற இடமும் நெருடலாக இருக்கிறது வேலு...! என்ன நீங்க ஒரு பதிவு போட்டுட்டு என்ன இப்டி கேள்வி கேக்க விட்டுட்டீங்க பாஸ்!

Jayadev Das said...

//சாமி இரு நிலைகளுமே சமம் தான் என்றால் தங்களை தாழ்த்திக்கொண்டு உங்களின் கால்களில் விழும் இல்லறவாசிகளை ஏன் அனுமதிக்கிறீர்கள். அவர்களை விட நீங்கள் எந்த வகையில் உயர்ந்து விட்டீர்கள்?.//காசியில் சில விலை மாதர்கள், அவர்களுக்கு நல்ல குழந்தை வேண்டும். தங்களுடைய கஸ்டமர்கள் மூலம் பெற்றால் ஒழுக்கமாக இருக்காது, அங்குதான் நிறைய சந்நியாசிகள் இருக்கிறார்களே அவர்களுக்கு வலை வீசிவார்கள். உண்மையான சந்நியாசி யாரவது இதற்க்கு உடன் படுவாரா? மாட்டார். ஆனாலும் இவர்கள் பிள்ளைகள் பெற்று விடுவார்கள். எப்படி? இந்த மாதிரி பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு சில மன்மத ராசாக்கள் காவி வேடம் பூண்டு அங்கே தவம் செய்வது போல பாவ்லா காட்டிகொண்டிருப்பார்கள் அவர்களிடம் இந்த விலைமாதர்கள் மாட்டிக் கொள்வார்கள். நம்மூரு சாமியார்களிடம் போகும் மக்களுக்கும் புத்தி இது மாதிரிதான் இருக்கிறது. ஆன்மீக வாதி என்பவர் இந்த உலகமே மலம் நிறைந்த ஒரு சாக்கடை என்பதை உணர்த்தி, இதிலிருந்து வெளியேறுவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொடுப்பவராக இருக்க வேண்டும். நம் மக்கள் ஆன்மீக வாதிகளிடம் போவதே தத்தம் பொருளாதாரம் உயர வேண்டும், பிள்ளை குட்டிகள் சுகமாக இருக்க வேண்டும், அதற்க்கு சாமியார் அருள்வார் என்ற இதே சாக்கைடையில் உழலும் நோக்கில்தான். உண்மையான ஆன்மீக வாதி இதைச் செய்ய மாட்டார், அப்புறம் என்ன மேற்சொன்ன மாதிரி போலிகளிடம் மாட்டிக் கொண்டு அவன் சொன்னதை கேட்டுக் கொண்டு அவனிடம் பணம், கற்பை இழந்து விட்டு வர வேண்டியதுதான். புத்திக் கேற்ற சுகம் தானே கிடைக்கும்!

Jayadev Das said...

//சாமி இல்லறம், துறவறம் எது சிறந்த்து? இருவரின் இறுதி நிலைதான் என்ன?// ஆஞ்சநேயர் கட்டை பிரம்மச்சாரி, அவரும் பக்தர்தான், அர்ஜுனன் இல்லறத்தில் இருப்பவன் அவனை தனக்குப் மிக மிகப் பிரியமானவன் என்று சொல்லி, தன்னுடைய கீதையை கேட்பதற்கு தகுதியானவன் என்று பகவானே சொல்லுமளவுக்கு சிறந்த பக்தன்தான். [bhakto 'si me sakha ceti rahasyam hy etad uttamam ப.கீ.4.3] நான் கட்டை பிரமசார்யன் என்று மார்தட்டுவதோ அல்லது கண்ட மேனிக்கு பெண்களுடன் சல்லாபம் செய்வதோ ஒருவனை சிறந்தவன் அல்லது மோசமானவன் என்பதை தீர்மானிக்காது. இறைவனின் விருப்பப் பட்டால் எதையுமே செய்வேன், அவர் விரும்பாத ஒன்றை செய்யவே மாட்டேன் என்ற நிலைதான் சிறந்த நிலை.

Jayadev Das said...

//சாதாரணமாக தன் இல்லறக் கடமையை சரியாய் முடித்து செத்துப்போகும் இல்லறவாசிக்கு உங்கள் பதில்?// இல்லறக் கடமை என்றால் இன்றைய புரிதல் என்ன? தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களும் உன்ன உணவுக்காக ராத்திரி பகலாக கழுதை மாதிரி உழைப்பது, பெண்டாட்டியுடன் புணர்வது, எதிர்காலத்துக்கு பணம் சேர்த்து வைப்பது, தூங்குவது, பிள்ளை குட்டிகளைப் பெறுவது, அவர்கள் எதிகாலத்தில் பெரியவர்களாகி நம்மை மாதிரியே புணர்ச்சி, பிள்ளை குட்டிகள் பெறுவது .......... என்று அவர்களும் அரைத்த மாவையே திரும்பவும் அரைக்க வைப்பது. இதுதான் இல்லறக் கடமை. இது யாராலும் செய்யவே முடியாததா? மலம் தின்னும் பன்றிகள் கூட இவை அத்தைனையுமே பக்காவாகச் செய்கின்றன. ஏன் நாய், பூனை, காகா, குருவி என்று உலகில் எல்லா ஜீவா ராசிகளுமே மேற்ச்சொன்ன அத்தைனையும் அருமையாகச் செய்துகொண்டுதானே இருக்கின்றன? இதையே ஆறறிவு கொடுக்கப் பட்டுள்ள நீயும் செய்துவிட்டு ஏதோ கடைமையைச் செய்து விட்டேன் என்று மார்தட்டிக் கொள்கிறாயே, என்னவென்று சொல்வது? வேண்டியதைக் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான், உனக்கான உணவு, உறக்கம், புனர்ச்சிகொள்ள துணை பாதுகாப்பு எல்லாம் இறைவன் கொடுக்கிறான், இங்கே படும் கஷ்டமெல்லாம் உனக்குக் கொடுப்பதை மட்டும் அனுபவிக்காமல் அடுத்தவனுடையதையும் பிடுங்கிக் கொள்ள நினைக்கும் மனிதனின் கேடுகெட்ட செயலால் தானே தவிர வேறொன்றுமில்லை. மிருகத்தால் முடியாதது உன்னால் ஒன்று முடியும், அது என்ன? அவற்றால் கீதையைப் படிக்க முடியாது, உன்னால் முடியும். அதில் சொல்லவேண்டியதெல்லாம் இறைவன் சொல்லிவிட்டான், அதுபடி நடந்தால் மனித வாழ்வு பயனுல்லாது, இல்லையென்றால் கழுதைக்கும் நாய்க்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லை. [உண்மையை நாசூக்காக சொல்லத் தெரியாது, போட்டு உடைத்து விட்டேன்]

Jayadev Das said...

//முதலில் துறவு என்றால் என்ன?// துறப்பது என்றால் தனக்குச் சொந்தமான ஒன்றை விட்டு விடுவது. இங்கு நமக்குச் சொந்தமானது எது? நம்மால் படைக்கப் பட்டது ஒரு துரும்பு கூடகிடையாது. நாம் பிறப்பதற்கு முபே இவை இங்கே இருந்தன, நாம் போன பின்பும் இவை இங்கேயே இருக்கும். நம்முடைய உடலே நாம் தயார் செய்தது அல்ல. பெண்டாட்டி பிள்ளை குட்டிகள் உட்பட நமக்குச் சொந்தமானது எதுவுமே இல்லை. உனக்குச் சொந்தமானது எதுவுமே இல்லாததனால துறப்பதற்கு ஒண்ணுமே இல்ல. அப்படின்னா எதைத்தான் துறப்பது? ஆண்டவனுக்குச் சொந்தமானது என்னதுன்னு சொல்லி திருடி வச்சுக்கிறேன் பார்த்தீரா? அந்த மனநிலையை நான் துறக்க வேண்டும், இறைவனுடைய பொருளை இறைவன் விருப்பப் படி உபயோகிக்க வேண்டும். அதுதான் துறவு.

Jayadev Das said...

// எந்த நேரத்திலும் அவனையே நிணைத்து அவனைப்பாடும் ஒருவனுக்குத்தான் நீங்கள் சொல்லும் மோட்சம் அல்லது இறையை அடையும் பாக்கியம் கிடைக்குமா?//
man-mana bhava mad-bhakto
mad-yaji mam namaskuru
mam evaisyasi satyam te
pratijane priyo 'si me [BG 18.65]

இந்தக் கேள்விக்கு எங்கேயிருந்து பதிலை எதிர் பார்க்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். பகவத் கீதை படி பார்த்தல், இந்த உலக விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் இறைவனையே எந்நேரமும் எண்ணியிருக்க வேண்டும், அப்படி எந்நேரமும் எண்ணியிருந்தால் இறக்கும் தருவாயிலும் இறைவனையே என்னியிருப்பாய், இறக்கும் தருவாயில் எதை என்னியிருந்தாயோ அதை அடைவாய், ஆதலால் இறைவனை அடைவாய். அல்லாது, பெண்ணையே எந்நேரமும் நினைத்தால் பெண்ணாகப் பிறக்கலாம், சொத்துக்களை பற்றி நினைத்தால் உன் வீட்டிலே பெருச்சாளியாகப் பிறக்கலாம், சதா நீச்சலடித்துக்கொண்டிருந்தால் மீனாகப் பிறக்கலாம், ஓடிக் கொண்டே இருந்தால் சிறுத்தையாகவோ, மாநாகவோ பிறக்கலாம், அம்மணமாய் இருப்பதையே விரும்பியிருந்தால் மரமாகப் பிறக்கலாம்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

Jayadev Das said...

man-mana bhava mad-bhakto
mad-yaji mam namaskuru
mam evaisyasi satyam te
pratijane priyo 'si me

TRANSLATION
Always think of Me and become My devotee. Worship Me and offer your homage unto Me. Thus you will come to Me without fail. I promise you this because you are My very dear friend.

எப்பவுமே என்னையே நினைச்சிகிட்டு இரு, என்னுடைய பக்தனாகு, என்னை வணங்கு எனக்கு உன் பிரார்த்தனைகள் சமர்ப்பி, இதன் மூலமா நீ என்கிட்டே வருவாய். நீ எனக்கு பிரியமான நண்பனானதால் நான் உனக்கு இந்த வாக்குறுதிய குடுக்கிறேன் .

Jayadev Das said...

// சரி அப்படியே இருக்கட்டும். தன்னைத் தாழ்த்தி வணங்கும் ஒருவனைத்தான் இறைவன் ஏற்றுக்கொள்வானா? //
tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah [BG 4.34]

TRANSLATION
Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from him submissively and render service unto him. The self-realized soul can impart knowledge unto you because he has seen the truth.

பகவான் பகவத் கீதையில் இதற்க்கு என்ன சொல்கிறார்? தன்னை நேரிடையாக அடைய முடியும் என்கிறாரா? இல்லவே இல்லை. தன்னைப் பற்றிய விஞ்ஞானத்தை அறிந்த ஒரு ஆன்மீக குருவிடம் செல், அவரிடம் வணங்கி சரணடைந்து பணிவிடை செய்து, பணிவுடன் கேள்விகள் கேட்டு அறிந்துகொள், அவர்களால் உனக்கு என்னைப் பற்றிய ஞானத்தைக் கொடுக்க முடியும் ஏனெனில் அவர்கள் என்னை முற்றிலுமாக அறிந்தவர்கள். [ஆக நீங்க சரியானவர்கிட்ட போனீங்கன்னா இறைவனைப் பற்றி கூறுவார், அதை விடுத்து மார்கெட்டில் கிடைக்கும் ஆனந்தாக்களிடம் போனால் ஆண்கள் உடைமையையும், பெண்கள் கற்பையும் கொடுத்துவிட்டு திரும்பினால் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை].

Jayadev Das said...

நீங்கள் வெவ்வேறு மதத்தவர்களாக இருக்கலாம், கடவுளையே நம்பாதவர்களாகக் கூட இருக்கலாம். உங்களை நானும் இன்னொரு மடத்துக்குச் செல்லுங்கள் என்று கூறவில்லை, உங்க கேள்விக்கு பகவத் கீதையில் சொன்னபடி பதில்களைத் தந்துள்ளேன்.ஏற்பதும் விடுவதும் உங்கள் இஷ்டம்.

VELU.G said...

//
dheva said...
வேலு..@ இந்த பதிலை எப்படி எடுத்துக் கொள்ள வேலு..யாரோ ஒரு துறவியின் அவர் மனோ நிலை சார்ந்த பதிலா இல்லை பொது பதிலாகவா?
//

ஒரு துறவி தன்னுடைய வாழ்க்கையைச் சொல்கிறார்.
அந்த இளைஞன் உங்கள் வாழ்க்கை மூலமாக சொல்லுங்கள் என்று தான் சொல்லியுள்ளான்.
எல்லாத் துறவிகளுமே இதே மாதிரித் தான் துறவியாவார்கள் என்பது இல்லை.

VELU.G said...

அன்பு Jayadeva தங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் ஆவேசமான பதில்கள் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

என்னுடைய தாழ்மையான முதல் பதில் -> "இங்கே இதுதான் சரி என்று சொல்ல இந்த உலகத்தில் யாருக்கும் உரிமையில்லை. ஏனென்றால் உங்களுக்கு சரியான ஒன்று இன்னொருவருக்கு மிகப்பெரும் குற்றமாக இருக்கும்".

மேலே சொன்ன பதில் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நான் சொல்வது தான் சரி என்று நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்.

ஆனால் என்னுடைய சிந்தனையில் கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவற்றை அப்படியே ஒப்புக்கொள்ளமால் தனக்கு பிறக்கும் சந்தேகங்களை ஒரு நேர்மையான துறவியிடம் அவனுடைய தனக்கு உள்ள கோபத்தோடு கேட்டுத்தெரிந்து கொள்கிறான். எனவே இங்கே "ஆனாந்தாக்கள்" பற்றி சிந்தனையே தேவையில்லை. அவர்களைப் பற்றி இந்த கட்டுரை பேசப்போவதும் இல்லை.

நான் கூறும் எந்த பதிலும் கீதையிலிருந்து எடுக்கப்பட்டதில்லை. என்னால் முடிந்த அளவு யோசித்து பதில் சொல்லியுள்ளேன்.

நன்றி நண்பரே

rajasundararajan said...

//ஒரு நல்ல துறவி என்ன பதில் சொல்வார் என்று யோசித்தே சொன்னேன்.//

ஒரு செடி அருகில் உட்கார்ந்து ஒருவன் அழுதானாம். "ஏன் என்னருகில் உட்கார்ந்து அழுகிறாய்?" என்றதாம் செடி. "பிரச்சனைகளை யோசித்துப் பார்க்க உனக்கு மூளையில்லையே, என்ன செய்வாய்?" என்றானாம். "அப்பாலே போ, நகர்வு மூடமே!" என்றதாம் செடி.

/இறக்கும் தருவாயில் எதை எண்ணியிருந்தாயோ அதை அடைவாய், ஆதலால் இறைவனை அடைவாய். அல்லாது, பெண்ணையே எந்நேரமும் நினைத்தால் பெண்ணாகப் பிறக்கலாம், சொத்துக்களை பற்றி நினைத்தால் உன் வீட்டிலே பெருச்சாளியாகப் பிறக்கலாம், சதா நீச்சலடித்துக்கொண்டிருந்தால் மீனாகப் பிறக்கலாம், ஓடிக் கொண்டே இருந்தால் சிறுத்தையாகவோ, மானாகவோ பிறக்கலாம், அம்மணமாய் இருப்பதையே விரும்பியிருந்தால் மரமாகப் பிறக்கலாம்.../

என்று சொன்னவரும் மூளையால் வரும் எண்ணங்களுக்கும் இயக்கங்களுக்கும் மறுபிறவி கற்பித்தார். மறுபிறவி இல்லா வாழ்க்கை வேண்டும் என்றால் மூளை இல்லாமற் பிறக்கவேண்டும் போலும்.

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

வருக நண்பர் rajasundararajan அவர்களே தங்கள் பதிலை மிக ரசித்தேன்

VELU.G said...

//
Blogger dheva said...
இரு வேறு வழிமுறைகள்... இதில் சமம் என்ற இடமும் நெருடலாக இருக்கிறது வேலு...!
//

அன்பு நண்பர் தேவாவிற்கு இரண்டுமே இரு வேறு வழிமுறைகள் என்றாலும் இறுதி நிலை என்ற ஒன்றில் இரண்டையும் எடை போடும் போது இருவரும் தத்தமது கடமைகளை செய்வதால் இருவருமே சமமானவர்கள். இங்கே இல்லறம் இருந்தால் தான் துறவறம். துறவறத்தை அடையாளப்படுத்துவது இல்லறம் தான். இல்லறத்தை சிறப்பாக ஆக்குவது துறவறம் இரண்டுமே வேறு என்றாலும் வாயும் வயிறும் வேறு என்றாலும் இரண்டும் ஒரே பணிக்காகத்தான் உள்ளது

VELU.G said...

//
Blogger Jayadeva said...
இல்லறக் கடமை என்றால் இன்றைய புரிதல் என்ன? தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களும் உன்ன உணவுக்காக ராத்திரி பகலாக கழுதை மாதிரி உழைப்பது, பெண்டாட்டியுடன் புணர்வது, எதிர்காலத்துக்கு பணம் சேர்த்து வைப்பது, தூங்குவது, பிள்ளை குட்டிகளைப் பெறுவது, அவர்கள் எதிகாலத்தில் பெரியவர்களாகி நம்மை மாதிரியே புணர்ச்சி, பிள்ளை குட்டிகள் பெறுவது .......... என்று அவர்களும் அரைத்த மாவையே திரும்பவும் அரைக்க வைப்பது. இதுதான் இல்லறக் கடமை. இது யாராலும் செய்யவே முடியாததா? மலம் தின்னும் பன்றிகள் கூட இவை அத்தைனையுமே பக்காவாகச் செய்கின்றன.
//

ராத்திரிப் பகலாக உழைப்பது, குடும்பத்தை காப்பது எல்லாம் சுலபமான வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?. புணர்வு என்பதை அவ்வளவு கேவலமாக சொல்லிவிட்டீர்கள். இங்கே எல்லோருமே அதிலிருந்தே வந்துள்ளோம். அதுவும் ஒரு நல்ல துறவி ஒரு இல்லறத்திலிருந்தே கிடைக்கிறான்.

அந்தக்காலத்தில் தான் துறவிகள் காடுகளில் வாழ்ந்தார்கள். தானக விளையும் கனிகளை உண்டார்கள்

நீங்கள் சொல்லும் "இன்றைய புரிதலில்" எந்தத் துறவியும் தனது அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்திற்கும் இல்லறத்தானை சார்ந்தே இருக்க வேண்டும்.


சும்மா அமர்ந்து தியானம் செய்து யோகம் செய்து ஆண்டவனை அடைகிறேன் என்று சொல்லும் துறவியை விட

காடுகளில் வேலை செய்து களைத்துப் போய் உறங்குகிறானே ஒரு இல்லறவாசி அவன் களைப்பில் இருக்கிறார் இறைவன்.

துறவறத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை இல்லறம்

அரைத்த மாவை திரும்ப அரைத்தால் தான் இங்கே உயிர் வாழ்தல் சாத்தியம். துறவிகள் மட்டும் புது மாவையா அரைக்கிறார்கள். புது மாவு தான் வேண்டும் என்பவர்களுக்கு அது இறப்பிற்கு பின் கிடைக்குமோ என்னவோ தெரியாது. இங்கே சட்டியில் இவ்வளவுதான் இருக்கிறது.

மலம் தின்னும் பன்றிகள் கூட இங்கே கேவலமில்லை அவைகளும் படைப்பில் அற்புதமான் உயிர்கள் தான். அவைகள் மலம் தின்பதால் தான் நாம் நாறாமல் இருக்கிறோம்.


இதுதான் என் கருத்து நண்பரே

VELU.G said...

//
Jayadeva said...

நீங்கள் வெவ்வேறு மதத்தவர்களாக இருக்கலாம், கடவுளையே நம்பாதவர்களாகக் கூட இருக்கலாம்
//

அன்பு நண்பரே

நான் பிறப்பால் இந்து மதத்தையும் வாழ்வில் மனித மதத்தையும் சார்ந்து இருக்கிறேன்

VELU.G said...

//
Jayadeva said...
ஆன்மீக வாதி என்பவர் இந்த உலகமே மலம் நிறைந்த ஒரு சாக்கடை என்பதை உணர்த்தி, இதிலிருந்து வெளியேறுவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொடுப்பவராக இருக்க வேண்டும்.

//

அன்பு நண்பரே இந்த மலம் நிறைந்த உலகத்தை இறைவன் ஏன் படைக்க வேண்டும் அப்புறம் அதிலிருந்து வெளியேற இன்னொன்றை ஏன் படைக்க வேண்டும்.

தவறான இவ்வளவு பெரிய படைப்பை படைத்தவன் தான் இறைவனா?. இந்த படைப்பில் எதுவுமே (உங்கள் ஆன்மீகவாதிகளைத் தவிர) மற்றெல்லாம் தவறா?. ஒரு தவறான படைப்பை படைத்துவிட்டு இது சரி இது தவறு என்று ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும். எல்லாமே தவறாயிருக்கும் பட்சத்தில்

VELU.G said...

//
Jayadeva said...
இறைவனின் விருப்பப் பட்டால் எதையுமே செய்வேன், அவர் விரும்பாத ஒன்றை செய்யவே மாட்டேன் என்ற நிலைதான் சிறந்த நிலை.

//

நான் சொல்லும் ஜால்ரா கோஷ்டிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்

Jayadev Das said...

//"இங்கே இதுதான் சரி என்று சொல்ல இந்த உலகத்தில் யாருக்கும் உரிமையில்லை. ஏனென்றால் உங்களுக்கு சரியான ஒன்று இன்னொருவருக்கு மிகப்பெரும் குற்றமாக இருக்கும்".// இந்த வாதத்தை நீங்களே நம்புகிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.
அப்படின்னா இப்போது நடிகையோடு மாட்டிக் கொண்ட சாமியார் செய்தது கூட சரியானதுதானோ?
எல்லோருமே அவரவர் மனதளவில் நல்லவர்கள் என்றால் நீங்கள் ஜால்ரா கூட்டம் என்று கூறும் கூட்டமும் நல்லவர்கள் தானே? அவர்களை நீங்கள் வெறுத்து வசை பாடுவது ஏனோ?

Jayadev Das said...

//ஆனால் என்னுடைய சிந்தனையில் கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவற்றை அப்படியே ஒப்புக்கொள்ளமால் தனக்கு பிறக்கும் சந்தேகங்களை ஒரு நேர்மையான துறவியிடம் அவனுடைய தனக்கு உள்ள கோபத்தோடு கேட்டுத்தெரிந்து கொள்கிறான்.// உங்க கட்டுரையில் பார்த்தால் ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த காவி உடையில் வந்த மனிதரை ஒரு போலிச் சாமியார், ஊரை ஏமாற்றப் பார்க்கிறார் என்ற வகையில் நக்கலடித்துள்ளீர்கள். எந்த ஒரு கட்டத்திலும் உங்கள் கேள்விகளில் ஒரு பணிவோ அல்லது அந்த மனிதருக்கு மரியாதையோ கொடுக்கவில்லை. கடைசி கேள்வியில் கூட சவால் விடுமாறுதான் கேட்டுல்லீர்களே தவிர அந்த மனிதரை //ஒரு நேர்மையான துறவி// யாக நீங்கள் கருதிய மாதிரி தெரியவில்லை. அப்படி நேர்மையானவர் என்று நினைத்திருந்தால் அவர் சொல்லிய பதிகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி அவர் பதில்கள் உங்களுக்கு சரியெனப் படவில்லை என்றால் அவர் [உங்கள் கருத்துப்படி] நேர்மையானவர் இல்லை என்று அர்த்தமாகிவிடும். ஆக முன்னுக்குப் பின் முரணான பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் //கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்த ஒருவன்// //நான் பிறப்பால் இந்து மதத்தையும் வாழ்வில் மனித மதத்தையும் சார்ந்து இருக்கிறேன்// என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறீர்கள். இதற்க்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லை. இந்து மதத்தில் பிறந்தவன் என்றால் கீதையையாவது ஏற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்து மதத்தவன் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. மனித மதம் என்றால் எதையுமே ஏற்றுக் கொள்ளாதவன் என்று சொல்லவருகிறீர்களா? அல்லது எல்லாவற்றையும் கலந்து போட்டு கிச்சடி செய்வது தான் மனித மதமா?

Jayadev Das said...

//அன்பு நண்பரே இந்த மலம் நிறைந்த உலகத்தை இறைவன் ஏன் படைக்க வேண்டும் அப்புறம் அதிலிருந்து வெளியேற இன்னொன்றை ஏன் படைக்க வேண்டும். //இவை எல்லாம் பகவத் கீதையில் ஆனா, ஆவன்னா... கேள்விகள். ஆரம்பமே இதுதான். அருமையாக பதிகள் சொல்லப் பட்டுள்ளன. நீங்கள் பதில்களை எங்கேயிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இயற்பியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நியூட்டன் சொன்னது என்ன, ஐன்ஸ்டீன் சொன்னது என்ன என்று அவர்கள் சொன்னதை சொல்லித் தரும் ஆசிரியர்களை அணுகித் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து பீச்சில் சுண்டல் விர்ப்பவனிடம் போய் பதில்களை எதிர்பார்த்தால் அங்கு சரியான பதில் கிடைக்காது. இந்து மத நம்பிக்கையின் படி பகவத் கீதையானது இறைவனால் அருளப் பட்டது, என்பது தான். அதை நீங்கள் நம்பவில்லை என்றால் வேறு யாரை நம்ப வேண்டும் என்று நீங்களேதான் சொல்லுங்களேன்? உங்கள் கூட்ட்றுப் படி யாருக்குமே உண்மை தெரியாது. அவரவர் கருத்துப் படி அவரவர் சொல்வது சரி, மற்றவருக்கு அது சரியோ, தவறோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் உங்கள் கொள்கை என்றால் இந்தப் பதிவில் நீங்கள் மற்றவரை வசை பாடுவதே தேவையில்லை. ஏனெனில் அவர்களும் தங்கள் சிந்தனைப் படி தாங்கள் செய்வது, சொல்வது எல்லாம் சரி என்றுதானே சொல்வார்கள், தவறு என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

VELU.G said...

//
Blogger Jayadeva said...
நீங்கள் ஜால்ரா கூட்டம் என்று கூறும் கூட்டமும் நல்லவர்கள் தானே? அவர்களை நீங்கள் வெறுத்து வசை பாடுவது ஏனோ?
//

அன்பு நன்பரே

அவர் நல்ல துறவி என்பதால் தான் கேள்விகளில் கோபம் கொள்ளாமல் நேர்மையாக பதில் சொல்லிக்கொண்டுள்ளவாறு உருவாக்கியுள்ளேன். அவர் ஒழுக்கமானவர்தான் என்பதை இதன் மூலமே சித்தரிக்கிறேன். ஒரு பாத்திரம் முரணாய் இருக்கும் போது தானே இன்னொன்றின் பெருமை தெரியும்

Jayadev Das said...

//தவறான இவ்வளவு பெரிய படைப்பை படைத்தவன் தான் இறைவனா?. இந்த படைப்பில் எதுவுமே (உங்கள் ஆன்மீகவாதிகளைத் தவிர) மற்றெல்லாம் தவறா?. ஒரு தவறான படைப்பை படைத்துவிட்டு இது சரி இது தவறு என்று ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும். எல்லாமே தவறாயிருக்கும் பட்சத்தில்// இந்தக் கேள்விக்கு கீதையில் பகவான் கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார் என்று வேண்டுமானால் பதில் சொல்ல முடியுமே தவிர, ரோட்டில் போறவன் வருகிறவன் என்ன சொல்கிறான் என்பதற்கெல்லாம் நான் முக்கியத் துவம் கொடுக்க முடியாது. உங்களுக்கு கீதையை ஏற்றுக் கொள்ள விருப்பமா இல்லையா? உங்கள் பதிலை வேறு இடத்தில் எடுத்துக் கொள்கிறீர்களா அல்லது உங்கள் மனம் சொல்வதே நூறு சதவிகிதம் சரி என்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவெல்லாம் போட்டு உங்கள் நேரத்தை வேண்டிக்க வேண்டுமா? [உங்களுக்குத்தான் விடை தெரிந்து விட்டதே]. அடுத்தவர்களை போலி என்று சொல்லும் உங்களை போலி என்று இன்னொருத்தர் சொல்லலாமே? எதை வைத்து யார் நிஜம் போலி என்று எதை வைத்து சொல்வீர்கள்? எல்லோருமே அவரவர் கருத்துப் படி நல்லவர்கள் என்றால் முதலில் நீங்கள் இந்த மாதிரி பதிவு போட்டு வசை பாடுவதையே நிறுத்த வேண்டும், செய்வீர்களா?

VELU.G said...

//
Blogger Jayadeva said...
அப்படி நேர்மையானவர் என்று நினைத்திருந்தால் அவர் சொல்லிய பதிகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி அவர் பதில்கள் உங்களுக்கு சரியெனப் படவில்லை என்றால் அவர் [உங்கள் கருத்துப்படி] நேர்மையானவர் இல்லை என்று அர்த்தமாகிவிடும். ஆக முன்னுக்குப் பின் முரணான பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
//

அவரை முதலிலேயே சரியென்று சொல்லிவிட்டால் அடுத்த கேள்விக்கு பதில் தெரியாமல் போய்விடும். அந்த இளைஞன் அவ்வளவு கோபமாக கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச்சொல்லும் துறவியாகத்தான் அவர் இருக்கிறார்.

முன்னுக்கு பின் முரணாக பேசவில்லை என்றால் எந்த பாத்திரமும் உருவாகாது.

VELU.G said...

//
Blogger Jayadeva said...
ரோட்டில் போறவன் வருகிறவன் என்ன சொல்கிறான் என்பதற்கெல்லாம் நான் முக்கியத் துவம் கொடுக்க முடியாது.
//

கீதையில் கிருஷ்ணர் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். ஒவ்வொரு உயிரையையும் மதிப்பவன் தான் இன்னொரு உயிரை புரிந்து கொள்ள முடியும்.

VELU.G said...

//
Blogger Jayadeva said...
அடுத்தவர்களை போலி என்று சொல்லும் உங்களை போலி என்று இன்னொருத்தர் சொல்லலாமே? எதை வைத்து யார் நிஜம் போலி என்று எதை வைத்து சொல்வீர்கள்? எல்லோருமே அவரவர் கருத்துப் படி நல்லவர்கள் என்றால் முதலில் நீங்கள் இந்த மாதிரி பதிவு போட்டு வசை பாடுவதையே நிறுத்த வேண்டும், செய்வீர்களா?
//

நான் யாரையும் போலி என்று சொல்லவில்லை. அப்படி சொல்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நான் யாரையும் வசைபாடவில்லை. என்னுடைய கேள்விகளுக்கு கோபம் வருகிறதென்றால் உங்கள் மீது தான் தவறு. அந்த சந்நியாசி கூட கோபமில்லாமல் எல்லாவற்றிற்கும் நேர்மையாக பதில் சொல்வதால் தான் அவர் துறவி. இல்லையென்றால் அவரும் சாதாரண மனிதன் தான்

VELU.G said...

//
உங்கள் மனம் சொல்வதே நூறு சதவிகிதம் சரி என்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவெல்லாம் போட்டு உங்கள் நேரத்தை வேண்டிக்க வேண்டுமா?
//

நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் நான் சொல்வதுதான் சரியென்று இப்போதும் சொல்லவில்லை. ஆனால் நான் சொல்லும் பதிலை விட சிறந்த பதில் உங்கள் போன்ற கருத்து வேறுபாடு உள்ள நண்பர்களிடம் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் தெளிவுபடுத்த இந்தப் பதிவில்லை. நான் சரியாக இருக்கிறேனா? எனனுடைய பதிலை விட சிறப்பனவை எங்கே இருக்கின்றன என்று தேடுவதில் கிடைக்கும் என் தெளிவிற்காகத்தான் இந்தப் பதிவு.


இதில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் பாத்திரப்படைப்பை கண்டு கோபம் கொள்ளாமல் அதன் கேள்விகளுக்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

VELU.G said...

அன்பு நண்பர் jayadeva விற்கு

தயவு செய்து கீதையைத் தொடாதீர்கள். கீதையோ, பைபிளோ, குர்ரானோ வேண்டாம்.

உங்கள் சிந்தனையில் உதித்தால், உங்களுக்கு அனுபவமாக கிடைத்திருந்தால் அதிலிருந்து உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

//
மனித மதம் என்றால் எதையுமே ஏற்றுக் கொள்ளாதவன் என்று சொல்லவருகிறீர்களா?
//

எதையாவது ஏற்றுக்கொண்டால் தான் இங்கே இருக்க முடியும் என்றால் அதற்குமேல் நமக்கு வளர்ச்சி இல்லாமல் போய்விடும்

rajasundararajan said...

பகவத் கீதை கவுளால் அருளப் பட்டதோ அல்லது திருக் குர்ஆனோ - இருந்துவிட்டுப் போகட்டும்.

கையில் கிட்டியதொரு கல்லில் எனக்கு நான்கு சொட்டைகள் தெரிந்தால் உங்களுக்குப் பன்னிரண்டு தெரியலாம். நான் நியூட்ரான் எலக்ட்ரான் என்றால் நீங்கள் அலைநீளம் என்கலாம். அப்படி, ஒரு கல்லைக்கூட முழுமையாக அறிய முடியாது. அறியப்படா இருட்டும் கருக்கலும் இருந்துகொண்டே இருக்கும் வரை கடவுட் தேவையும் இருந்துகொண்டே இருக்கும்.

சூரியன், அக்னி என்றிருந்த கடவுள், நம் புறஅறிவு விரிவுபட, ஆத்மா, ப்ருஹ்மா என்று நுணுகிப் பெருகி அகம் வியாபிக்கவில்லையா?

அப்படி, கடவுளை மறுக்க முடியாது. ஏனென்றால் அது அறியாமை என்னும் எல்லைக்கு shift-ஆகிக் கொண்டே இருக்கிறது. அவர் ஒளியாகவே இருக்கிறார் என்று சொல்லும் விவிலியமும் யோபுவின் வாய்வழி நம் அறியாமையைக் குறிவைத்தே வினவுகிறது. 'ஐயுறுவாருக்கு இவ்வுலகும் இல்லை அவ்வுலகும் இல்லை' என்றே கீதையும் சொல்கிறது. எனவே மூளையுள்ள உயிர்களுக்கு உரியதாகத் தெரியவில்லை கடவுட் தேடல்.

மரம் செடி கொடிகளுக்கு?

உங்கள் சாமியாரைக் கேட்டுச் சொல்லுங்களேன்.

Jayadev Das said...

//அவர் நல்ல துறவி என்பதால் தான் கேள்விகளில் கோபம் கொள்ளாமல் நேர்மையாக பதில் சொல்லிக்கொண்டுள்ளவாறு உருவாக்கியுள்ளேன். // அடக் கண்றாவியே, இது நீங்கலாக கர்ப்பனையாக அளந்து விட்ட கதையா! நிஜத்தில் நீங்கள் யாரையும் அணுக வில்லையா? என்ன கொடுமை சார் இது! //உங்கள் சிந்தனையில் உதித்தால், உங்களுக்கு அனுபவமாக கிடைத்திருந்தால் அதிலிருந்து உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்./ நான் ஒரு முட்டாள், ஆகையால் என் அனுபவித்தில் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும்? இந்த்தனை ஆயிரம் வருடம் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர், ஆனால் உங்கள் கேள்விகளுக்கு விடையை இதுவரை ஒரு பயலுடைய அனுபவித்திலிருந்து கற்றுக் கொள்ள முடியவில்லை, அப்படியிருக்க இந்த சில வருடங்களே வாழ்ந்த சராசரி மானிடனிடமிருந்து நீங்கள் என்னத்தை உருப்படியா கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்! //எதையாவது ஏற்றுக்கொண்டால் தான் இங்கே இருக்க முடியும் என்றால் அதற்குமேல் நமக்கு வளர்ச்சி இல்லாமல் போய்விடும்// அப்படியென்றால் உங்களுக்கு எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருக்க வேண்டும், எங்கேயாவது போயன்க் கொண்டே இருக்க வேண்டும், பயன்கள் முடிவதில்லை, உங்களுக்கு ஒரு போதும் விடையும் கிடைக்கப் போவதில்லை, கிடைத்தாலும் அது தேவையில்லை, ஏனென்றால் உங்களுக்கு வேலையில்லாமல் போய் விடும். தேடுங்கள், தேடுங்கள் தேடிகிட்டே இருங்கள்! //சூரியன், அக்னி என்றிருந்த கடவுள், நம் புறஅறிவு விரிவுபட, ஆத்மா, ப்ருஹ்மா என்று நுணுகிப் பெருகி அகம் வியாபிக்கவில்லையா?/ என்ன கருமாந்திரம்டா இது? ஐயோ சாமி ஆளை விடுங்கப்பா நான் எஸ்கேப்.

Unknown said...

நமது பிறவியே நாம் செய்த வினையின் பயனே.பிறப்பின் நோக்கம் செய்த (பாவ-புண்ணியங்களை)வினைகளை அனுபவித்துவிட்டு மீண்டும் இயற்கையை-கடவுளை-சூனியத்தை-அடைவது.அதற்கு வழிகாட்டுபவர்-குரு-வாத்தியார்.நல்ல குரு கிடைப்பதற்கும் நல்வினை செய்திருக்கவேண்டும்-யாரு?குருதான்.

Thenammai Lakshmanan said...

வித்யாசமான கேள்வி பதில் வேலு..

நல்ல தேடல்..

SABARI said...

arumaiyana pathuvu....

VELU.G said...

மிக்க நன்றி thamizhan

மிக்க நன்றி தேனம்மை லெஷ்மணன்

மிக்க நன்றி sabari

சிங்கக்குட்டி said...

மிக அருமை மற்றும் ஒரு பதிவு படித்த திருப்தி :-).

பாராட்டுகள் சகோ.

VELU.G said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி

ரிஷபன் said...

சுவாரசியமாய் போய்க் கொண்டிருக்கிறது..

VELU.G said...

நன்றி ரிஷபன்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...