Thursday, January 20, 2011

மரம் வளர்க்கலாம் வாங்க......

அன்பு நண்பர்களே மரம் வளர்க்கறதினால என்ன பயன் அப்படின்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். அதனால சும்மா பேசிட்டிருக்காமா அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்க ஒரு வாய்ப்பு. வீட்டு பக்கத்தில கொஞ்சம் இடமிருந்தோ அல்லது வீட்டு முன்னாடியோ மரம் நட்டு வளர்க்களாம்னு எண்ணமிருக்கிற ஈரோடு அதை சுத்தி இருக்கிற மக்களுக்கு ஒரு வாய்ப்பு.

ஈரோடு விருட்சம் அறக்கட்டளை சார்ந்த நண்பர்கள் உங்க வீட்டிலேயே வந்து இலவசமா மரத்தை நட்டு தர்றாங்க. அதை பக்குவமா வளர வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அவ்வளவுதான்.

அந்த அமைப்போட விலாசம் மற்றும் போன் நம்பர் கீழே கொடுத்திருக்கறேன்.

ஈரோடு விருட்சம் அறக்கட்டளை
26, சொக்கநாதர் வீதி,
ஈரோடு – 638 001
Ph: 94420 58553

எல்லோரும் பயன்படுத்தி பலனைடைவோம்.












Friday, January 14, 2011

துறவியும்.... திருடனும்....

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். எங்காவது திருடலாம் என்று ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை சந்தித்தான். அவரிடம் எதுவும் இருக்காது என்று தெரிந்தாலும் சரி வந்ததுக்கு எதையாவது பிடுங்கிக்கலாம் என்று கத்தியை காட்டி மிரட்டினான்.

புன்முறுவல் பூத்த துறவி “உனக்கு என்னப்பா வேண்டும்”. என்று கேட்டார்.

அவரை ஏளனமாக பார்த்தபடி திருடன் சொன்னான் “ எனக்கு மூட்டை நிறைய தங்கம் வேண்டும் கொடுப்பாயா” என்றான்.

உடனே துறவி “ இவ்வளவு தானே, இங்கிருந்து அரைக்கல் தொலைவில் ஒரு மரம் இருக்கிறது. அதனடியில் நிறைய தங்கம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்” என்றார்.

அவரை சந்தேகமாக பார்த்தபடி சென்றவன் ஆச்சரியபட்டு போனான். அவர் சொன்னது போலவே அந்த மரத்தடியில் தங்க நாணயங்கள் குவியலாக இருந்தன. உடனே ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்தவன், வரும் வழியில் சாமியாரைப் பார்த்தான்.

அவர் அமைதியாக இவனைப்பார்த்து “என்னப்பா தங்கம் கிடைத்த்தா” என்று சாதாரணமாக கேட்டார்.

உடனே இவனுக்கு மீண்டும் சந்தேகம் இதைவிட பெரிய விஷயம் ஏதோ இவரிடம் இருக்கிறது என நிணைத்து “ ஐயா இதைவிட மேலாக வைரம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான்.

துறவி சொன்னார் “இங்கிருந்து ஒரு கல் தொலைவில் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அங்கே போனால் வைரம் நிறைய இருக்கிறது என்றார்.

பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைரம் ஒரு மூட்டை அள்ளி வந்தான்.

ஆனாலும் திருப்தி ஆகாமல் “ ஐயா இதைவிட வைடுரியம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான் துறவியிடம்.

துறவி சொன்னார் “இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் ஒரு மலை இருக்கிறது. அங்கே போனால் வைடுரியம் நிறைய இருக்கிறது என்றார்.

மீண்டும பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைடுரியத்தையும் அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தியடையாமல் இந்த ஆள் இதெல்லாம் வேண்டாம் என்று அமர்ந்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் என்னவோ இவரிடம் இருக்கிறதென்று அவரிடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி கேட்டான்.

உடனே சிரித்தபடி துறவி அவனுக்கு தவம் செய்து ஆண்டவனை அடைவது தான் இதெல்லாம் விட சிறந்த மகிழ்ச்சியான விஷயம் என்று அவனை அருகில் அமர்த்தி தவம் செய்ய கற்றுக் கொடுத்தார்.

.
.
.
.
.
.

இரண்டு நாள் கழித்து திருடனின் மகன் அந்த வழியாக வந்தவன் இருவரையும் பார்த்தபடி அருகில் சென்றான். துறவியிடம் சென்று நடந்ததை கேட்டான். பின்னர் அருகில் இருந்த மூன்று மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினான்.

உடனே துறவி அவனை அழைத்து “குழந்தாய் இவையெல்லாம் வெறும் கற்கள், இவற்றைவிட மேலான விஷயங்களை நான் உனக்கு சொல்லித்தருகிறேன் கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

திருடனின் மகன் சொன்னான் “ஐயா என் அம்மா வரும்போதே சொல்லிவிட்டார்கள், வேலையில்லாத வெட்டிப்பயலுக எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, உங்கப்பன் அதை உக்காந்து கேட்டுட்டு இருப்பான். நீயாவது பொறுப்பா போனமா, போன வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருன்னு சொல்லிருக்காங்க, நான் வரட்டுங்களா ஐயா”, என்று மூட்டையை தூக்கிய படி நடையை கட்டினான்.

துறவி அவனைப்பார்த்து திகைத்து நின்றார்.


••••••••••••••••••••••

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Thursday, January 13, 2011

மார்கழி காலைகள்

அதிகாலை
ஐந்துமணி அலாரம்...
கடிகாரம் கண்டறிந்தவனை
கண்டபடி திட்டியபின்
கொதிக்கும் வெந்நீர்
குளியல் உடம்புக்கு
வெளியே...
சுடச்சுட காப்பி உடம்புக்கு
உள்ளே...

வழக்கமான உடைகளுக்கு
மேலே ஸ்வெட்டர்
தலைக்கு குல்லா
கைக்கு உறை எனும்
முப்பெரு (தெய்வக்) காவல்

கோவில் பிரகாரம் சுற்றி
குருக்கள் தேவாரம் கேட்க
வீட்டுத் தாழ்வாரக்கதவு
சாத்தினோமாவெனுங் குழப்பம்
தீபாராதனை நடுவே
பையன் எழுந்து
பல் துலக்கினானோ
பெண் எழுந்து
பெட் காப்பி குடித்தாலோ
எனுங்கவலை

திருவாசகத்துக்கு உருகாமல்
சர்க்கரைப் பொங்கலுக்கு உருக
மலங்க மலங்க விடிகிறது
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்நாட்கள்

Thursday, January 6, 2011

இறை..........

அதுதான் என்றால்

அதுதான்

அது இல்லை என்றால்

அது இல்லை


அதுதான் என்று

சொல்வதற்கோ

அது இல்லை என்று

சொல்வதற்கோ

இங்கே ஏதுமில்லை


ஏதுமே இல்லாத

ஒன்று

இருக்குமென்றால்

அதுதான் என்றால்

அதுதான்

அது இல்லை என்றால்

அதுவுமில்லை

Saturday, January 1, 2011

திவ்ய தரிசனம்

கோயில் வாசலில்
கால் வைத்ததும்

பார்த்தாகி விட்டது,

முழுதாகத்தான் இருக்கிறது.


வெளிப்பிரகாரம்

சுற்றுகையில்

பாதியாகி விட்டது

மனம் கொஞ்சம்

படபடத்தது


உள்பிரகாரம்

சுற்றும் போது

ஒருமுறை

எட்டிப் பார்த்த்தில்

கால்வாசியாகி விட்டது.


கருவறைக்குள்

செல்லலாமா? வேண்டாமா?

மனம் சஞ்சலத்தது

தீபாராதனை காட்டும்போது

நெஞ்சுக் கூட்டில்

மேலும் படபடப்பு

முகத்தில் ஒரு கவலை


திருநீறு பூசியதும்

ஓடிச் சென்று

அடித்து பிடித்து

அந்தக் கடைசி தருணத்தில்

வாங்கியாகிவிட்டது

பொங்கல் பிரசாதம்


கடவுளைக் கண்டேன்

இன்னைக்கு

திவ்ய தரிசனம்ங்க

என்று வழியில்

பார்ப்போரிடமெல்லாம்

சொல்ல முடிந்த்து



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...