Thursday, February 24, 2011

தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே....


அம்மா என்பது வார்த்தையில்லை. அது ஒரு உணர்வு. அது எல்லாவுயிர்க்குமான சந்தோஷம், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இன்னும் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்.

என் அம்மா தன் தாய் தந்தைக்கு பிறந்த 5 குழந்தைகளில் இரண்டாவது மகள். எல்லோருக்கும் பிறப்பு நன்றாக அமைவதே ஒரு வரம் தான்.

ஆனால் என் தாயும் அவரின் அடுத்த சகோதரனுக்கும் பிறவியிலேயே கண்பார்வை குறைபாட்டுடன் பிறந்தனர். கண்ணிற்கும் மூளைக்கும் இடையே ஓடும் நரம்பு உறுதியில்லாததால் ரத்தம் சரியாக ஓடுவதில்லை. அதனால் விழிகளை ஆட்டிக்கொண்டே இருந்தால் தான் ஓரளவு நன்றாக கண்பார்வை தெரியும்.

குடும்ப வறுமையின் காரணமாக எல்லோரும் உழைக்க வேண்டியிருந்தது. என் தாய் வெளியே செல்ல முடியாததால் வீட்டு வேலைகள் அனைத்தும் அவரின் தலையில் தான். எல்லாவற்றையும் திறம்பட சமாளித்தார். கூடவே மூன்றாம் வகுப்பு வரையோ ஏதோ படித்தார்.


அந்த காலத்திலேயே கிட்டத்தட்ட எல்லா மருத்துவரிடமும் என் தாத்தா பரிசோதித்த சரிசெய்ய முடியவில்லை.


பருவத்தில் திருமணம் மிக பிரச்சனையானது. நல்ல வரன் அமையவில்லை. அப்போது என் அப்பா தாய் தந்தையை இழந்தவர். ஈரோட்டில் ஒரு திரையரங்கில் டிக்கெட் கிழித்தபடி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தவர். அம்மாவிற்கு தூரத்து உறவினர். எனவே அவரின் உறவினரிடம் பேசி திருமணம் முடித்தனர்.


திருமணம் முடிந்தும் ஒரு நாலைந்து வருடங்கள் தாத்தா வீட்டிலேயே தொழிலுக்கு உதவி செய்து கொண்டு காலத்தை தள்ளினர்.


கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தில் வளர்ந்த என் தாத்தா என் தாய் தந்தைக்கு தனியாக வீடு கட்டி அதில் ஒரு மளிகைக் கடையும் வைத்துக் கொடுத்தார்.


சஷ்டி விரதம் இருந்து ஏழு வருடங்கள் கழித்து நானும் எனக்கு பிறகு 6 வருடங்கள் கழித்து என் தம்பியும் பிறந்தோம்.


நன்றாக ஓடின வாழ்க்கையில் என் தந்தையின் தொழிலில் தொய்வு ஏற்பட நான் வேலை பார்க்க வர சரியாக இருந்த்து. அதிலிருந்து என் தந்தை தொழில் செய்வதையே விட்டு சும்மா இருக்க ஆரம்பித்தார்.


மீண்டும் பொருளாதாரப் பிரச்சனைகள் தலை தூக்கியது. என் தாயின் நகைகள் அனைத்தையும் விற்றார். வீட்டில் எந்த பொருளும் இல்லை என்ற அளவிற்கு எல்லாவற்றையும் விற்றார். எனக்கும் பெரிதாக ஒன்றும் வருமானம் இல்லாத நிலை. நிறைய தொந்தரவுகளுக்கு இடையே என் தாயின் கண்பார்வை குறைவு அதிகரித்தது.


என் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் பதினொன்றாம் பனிரென்டாம் வகுப்புகள். காலையில் 4 மணிக்கு எழுந்து இருட்டில் தடுமாறியபடி ஸ்டவ்வில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு 7 மணிக்குள் கொண்டு போக சாப்பிட எல்லாம் தயார் செய்து விடுவார். எனக்கு 7,30 க்கு பஸ். ஒருநாள் இரண்டு நாட்கள் இல்லை. இது இரண்டு வருடங்களாக செய்தார் துளி சங்கடமில்லாமல்.


ஒருமுறை என் தந்தைக்கும் தாய்க்கும் ஒரு சின்ன பிரச்சனை. இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் பூரி சுட வைத்திருந்த எண்ணெய் என் அம்மாவின் வயிற்றில் கொட்டி வயிறெங்கும் புண். தனியாக மருத்துவரிடம் செல்ல முடியாமலும் அப்பாவிடம் பேசமுடியாமலும் அதை அப்படியே விட்டு விட்டார். இரண்டு நாள் கழித்து தான் யத்தோசையாக அதைப்பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கும் சரியான விவரம் இல்லாத வயது. எண்ணை வைத்தால் சரியாகி விடுமென்று என்னிடம் கூறிவிட்டார். பின்னர் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.


ஒருநாள் சிறுக சிறுக தனியாக சேர்த்து வைத்திருந்த பணத்தை என்னிடம் கொடுத்து எண்ணச் சொன்னார். கண் சரியாக தெரியாத என் தாயிடம் ஒரு துளி கூட ஏமாற்றக் கூடாது என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து அம்மாவிடம் சொல்லி அப்படியே கொடுத்தேன்.


இதை வைத்து ஒரு கேஸ் ஸ்டவ் வாங்கிக் கொள்ளாலம்டா என்னால ஸ்டவ்வை சரி பண்ணி பண்ணி சமைக்க முடியவில்லை என்று அவர் பரிதாபமாக சொல்லும் போது எனக்கு வலித்த்து. அப்போதெல்லாம் கேஸ் வாங்க எழுதி வைக்க வேண்டும். பின்னர் ஒரு வருடம் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் காத்திருக்கவில்லை. உடனே தட்கால் கோட்டாவில் Rs.10000 கட்டி வாங்கிக் கொடுத்தேன். எனக்கு வேலை செய்யும் இடத்தில் பணம் கொடுத்தார்கள் என்று என் தந்தையிடம் கூறி அந்த பணத்தை என் சம்பளத்தில் பிடித்து என் தாயிடமே திருப்பி கொடுத்தேன்.


ஒரு துளி நகை கூட இல்லாமல் இருந்த என் அம்மாவிற்கு ஒரு செயினாவது செய்ய வேண்டுமென்று ஆசை. திரும்பவும் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தார். நான்கு பவுனில் ஒரு நகை செய்து தந்தேன். அதை அதிகபட்சம் ஒரு இரண்டு மாதங்கள் போட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். என் தந்தைக்கு எப்படி உறுத்தியதோ தெரியவில்லை, வாடகைக்கு விட்டிருந்த கடைக்கு பந்தல் போடவேண்டும் என்று நகையை விற்று பந்தல் போட்டு விட்டார்.


எத்தனை பிரச்சனை இருந்தாலும் வந்தவரை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். என் வீட்டிற்கு வந்து குறைந்த பட்சம் ஒரு காப்பி குடிக்காமல் நீங்கள் வெளியேற முடியாது. இன்று வந்தால், நீங்கள் வாங்கிக் கொடுத்தாலும் என்னால் குடிக்க முடியாது.


எனக்கு திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஒரே வீட்டில் இருந்தேன். பின்னர் சில பிரச்சனைகளுக்காக தனிக்குடித்தனம் போக வேண்டி வந்த்போது என் தாய் தந்தையின் சம்மதத்துடன் அருகிலேயே குடியேறினேன். அதற்கு பிறகு மூன்று வருடங்கள் வரை அதே ஊரில் இருந்து பார்த்துக் கொண்டேன்.


இடையில் சிக்கன்குனியா காய்ச்சலால் அம்மாவிற்கு கொஞ்சம் இருந்த பார்வையும் முழுதாய் பறிபோனது.


மேலும் சில காரணங்களுக்காக ஈரோட்டில் குடியேற நேர்ந்த போது என் தம்பியின் திருமணமும் நடந்த்து. என் தம்பி சில பொருளாதாரப்பிரச்சனைகளால் திருப்பூர் செல்ல நேர்ந்த போது தான் என் அம்மா தன் தனிமை வாழ்க்கையை உணர்ந்தார்.


என் அப்பாவும் அடிக்கடி வெளியே சென்று விட அந்த வீட்டிற்குள்ளேயே வெளியே வர முடியாமல் காலந்தள்ள நேரிட்டது. என்னிடமிருந்து தினமும் மூன்று நான்கு முறை செல்லும் போன் அழைப்புகள் கூட அவரை சமாதானப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.


சென்ற ஜனவரியில்(2010) ஆரம்பித்தது ஒரு பிரச்சனை. வாயில் உமிழ்நீர் கெட்டியாக வருகிறது அல்லது கசப்பாக இருக்கிறது என்று. உமிழ்நீரை விழுங்க முடியாமல் தடுமாறினார். பல் சொத்தை இருப்பதால் இருக்கலாம் என்று பல் பிடுங்கினோம். மௌத் வாஷர் லிக்கிவுட் உபயோகித்தும் போகவில்லை. இது சம்பந்தமாக நிறைய பல் டாக்டரை சந்தித்தோம். பாலசி மூலமாக நம் பதிவர் ரோஹிணி சிவா மேடமிடம் ஆலோசனைகளைப் பெற்றேன்.


ஒரு கட்டத்தில் பல் டாக்டரை விடுத்து ENT டாக்டரிடம் செல்ல ஆரம்பித்தோம். அது சம்பந்தமாக ஸ்கேன் செய்து பார்த்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்டர்நெட் மூலமாக pathology டாக்டர் ஈரோட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து அவரிடமும் சென்றோம்.


நடுவில் ஹோமியாபதியில் நிவாரணம் கிடைக்குமா என்று அதிலும் தேடினோம், சிலசமயம் எனக்கு சந்தேகம் இவர்கள் உமிழ்நீர் அப்படி வருவதாக நினைத்துக் கொள்வார்களோ என்று? ஒரு சைக்காலஜி டாக்டரையும் பார்த்தேன்.


பிரச்சனை சரியாகவில்லை.


நடுவில் ஒரு மருத்துவர் யூரியா டெஸ்ட் செய்து கிட்னி பிராப்ளம் இருக்கும் செக் செய்ய வேண்டும் என்றார். ஆனால் அம்மா அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் வாய் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றார்.


நானும் அதை சரியாக கவனிக்காமல் மறுபடியும் டாக்டர்களிடம் படையெடுத்தோம். கோவையிலும் சென்று பார்த்தோம். அதில் ஒரு டாக்டர் முதலில் நீங்கள் கிட்னி மற்றும் கல்லீரலை செக் செய்யவேண்டும் பெட்டில் உடனே அட்மிட் ஆகுங்கள் என்றவுடன் நிலமையின் விபரீதம் உரைத்த்து.


கிட்னி டாக்டர் ஒருவரிடம் கோவையில் சென்றோம். அவர் டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றார். மீண்டும் ஈரோடு வந்து ஈரோட்டில் பிரபலமான கிட்னி டாக்டரை அனுகினோம். அவர் இப்போது டயாலிஸிஸ் வேண்டாம். ஆனால் உணவு நீர் கட்டுப்பாட்டுடன் ரத்தம் ஊற ஊசியை போட்டுக்கொண்டே வாருங்கள் என்றார். உணவு சம்பந்தமான ஆலோசனைகளை நம் பதிவர் தேவன் மாயம் அவர்களிடம் பெற்றேன். மூன்று மாதங்களாக பல ஊசிகள் போட்டும் ரத்தம் ஊறாமல் குறைந்து கொண்டே வந்த்து. டாக்டர் யாராவது ஒரு HEMATOLOGY மருத்துவரை சந்திக்கும் படி பரிந்துரைத்து விட்டார்.


HEMATOLOGY, ONCOLOGY, RADIOTHERAPHY CUM GENERAL MEDICINE முறையில் கோவையில் சிறப்பான மருத்துவர் ஒருவரை அனுகினோம். அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து பிளட் 5 யூனிட் ரத்தம் கொடுத்தார். கொஞ்சம் நிலமை சீரானவுடன் போய் ஒரு மாதம் கழித்து வரும்படி கூறி விட்டார்.


அம்மாவிற்கு உடலில் என்ன பிரச்சனை என்று கேட்டபோது cancer சம்பந்தமாக எதுவும் இல்லை ஆனால் சில பிரச்சனைகள், எலும்பு மஜ்ஜையிலும சில பிரச்சனைகள் என்றார்.


வீட்டிற்கு வந்து சரியாக 20 நாட்கள் மயக்கமடைந்து விட்டார். மறுபடியும் தூக்கிக் கொண்டு கோவை அதே மருத்துவரிடம் சென்றோம். இப்போது பிளட் மறுபடியும் குறைந்திருந்தது. மயக்கம் தெளிந்து சுயநிணைவு வந்தாலும் யூரின், மலம் போவதில்லை, INTAKE மிக குறைவாக நீர்ம்மாகத் தான் இருந்த்து.


அம்மா நன்றாக பேசினார்கள். டாக்டர் முடியாது கூட்டிச் செல்லுங்கள் என்றார்.


அம்மாவை மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்த போது தாள முடியவில்லை, கண்களில் நீர் மாளாமல் வந்து கொண்டே இருந்த்து.


சிகிச்சையளித்த டாக்டரின் மீதே சந்தேகம் வந்த்து. மருத்துவரின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு கோவையில் தெரிந்த டாக்டரிடம் எல்லோம் ஓடினோம் நானும் என் தம்பியும். முடியவில்லை.


சனிக்கிழமை (12,02,11) அன்று அம்மாவிடம் பேசினேன் முதல் முதலாக ஒரு பொய். கண் தெரியாத அம்மாவை ஏமாற்றக் கூடாது என்று இதுநாள் வரையில் கட்டிக் காத்து வந்த்தையெல்லாம் உடைத்தெறிந்தேன்.


அவர்களுக்கு நன்றாக வாழ ஆசை. சின்ன வயதிலிருந்து அவர்கள் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காமல் எல்லா ஆசைகளையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தவர். இப்போது தான் பிறந்திருக்கும் என் ஆண் குழந்தையையும் தம்பியின் பெண் குழந்தையும் கொஞ்ச வேண்டும் என்று நிறைய ஆசை. கொஞ்ச நாள் போனால் சரியாகிவிடும். ஏதோ கெட்ட நேரம் அது விலகினால் சரியாகிவிடும் என்று மனதில் எத்தனையோ ஆசைகளை பூட்டி வைத்திருந்தவருக்கு அந்த நல்ல நாள் வராமலே போய் விடும் என்று தெரியவில்லை.


ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்க நான் தயாராக இல்லை. முதன் முதலாக அம்மாவிடம் பொய் சொன்னேன். அம்மா கிட்னி ப்ராப்ளம் தான் மட்டும் தான் இப்போதைய பிரச்சனை, அது ஈரோட்டிற்கு சென்றே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார் அதனால் ஈரோடு செல்ல்லாம் என்று சொன்னேன். நான் சொன்னதை அப்படியே நம்பும் என் தாயும் அதற்கு ‘சரி’ என்றார்கள்.


உடனே வீட்டிற்கு சென்றால் அம்மாவின் நிலை கண்டு ஊரில் வருபவர்களெல்லாம் கண்ணீர் விட்டு அழுதால், தான் மரணம் அடையப்போகிறோம் என்பதை உணர்ந்து நொந்து விடுவார்கள். அதனால் ஈரோட்டில் ஓரிடத்தில் (ஒரு ஆஸ்பிட்டல் மாதிரி) கொண்டு வந்து சேர்த்தோம். அங்கே சரியாக மூன்று நாட்கள் இரவு பகல் என்று பாராமல் வலியிலும் வேதனையிலும் ஐயோ அம்மா என்று கதறினார்கள்.


ஐயோ அம்மா என்று சொல்லாதே அம்மா, நீ விரதமிருந்து வணங்கும் முருகனை நிணைத்து முருகா முருகா என் வேதனைகளைக் குறை என்று சொல் அம்மா என்றேன்.



அரை மயக்க நிலையிலும், நீ என்ன சொல்கிறாயோ அப்படியே சொல்கிறேன் என்று முருகா முருகா என்று கூவினார்கள்.


ஆயிற்று அந்த நாளும் வந்தது. செவ்வாய்கிழமை(15,02,11) காலை தன் முழநிணைவை இழந்தார்கள். ஆனால் உயிர் பிரியவில்லை. மணி 8, 9, 10, 11, 12 ஆகிக்கொண்டே இருந்த்து. மூச்சு வந்து கொண்டேதான் இருந்தது வலியின் வேதனையான அரற்றலோடு. மூன்று மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்து வீட்டை அடையும் போது மணி 4.00. வீட்டை அடைந்தவுடன் வேதனை முனகல்கள் குறைந்தது. சரியாக ஒரு மணிநேரம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்த போது மணி 5.00.


மனதில் தாங்க முடியாது வலி. என்னையே முழுதாக நம்பி இருந்த என் தாயை, தன் மகன் எப்படியும் பிரச்சனைகளை சரி செய்து விடுவான் என்று ஒரு கடவுளைப் போல என்னை நம்பிய ஒரு குருட்டு அன்னையை, உன் கண்களைப்போல உன் எண்ணங்களும் குருடம்மா என்று நானே ஏமாற்றி விட்டேன்.


இன்னமும் சரியாக செய்திருக்கலாமே என்று மனம் என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறது. நானே நிறைய தவறு செய்திருக்கிறேன். அவர்கள் தனிமையை குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனித்து பார்த்து இருந்திருக்கலாம். கடைசியாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன்.


எந்த தவறுக்கும் நான் என் அன்னையிடம் மன்னிப்புக் கோரப்போவதில்லை அதற்கான தண்டனையும்
பெறத் தயாராகவே இருக்கிறேன்.

என் அன்னையின் ஆன்மா சாந்தியடைய மனதார விரும்புகிறேன்.









Monday, February 7, 2011

அவதார் ............

பள்ளியில்
எல்லோரையும் விட

குள்ளமானவன் என்பதால்

கொஞ்சம்

செல்லமானவன் கூட

வாமணன் என்பது

என் பெயர்.


தோட்டக்கலை ஆசிரியர்

தோட்டவேலை செய்ய

எல்லோருக்கும்

இடம் ஒதுக்கும்போது

என்னையும் கேட்டார்

உனக்கு
எவ்வளவு இடம்

வேண்டுமென்று?


சார் என் காலில்

மூன்றடி போதுமென்றேன்

வழக்கம் போல.


பின் பெஞ்ச்

சுக்கிரன் கத்தினான்

சார், அவன் உங்களை

ஏமாற்றிவிடுவானென்று.


சுண்டுவிரலால்

அவன் கண்ணில்

குத்தவும்

அமைதியாய் அகன்றான்


ஆசிரியரோ

எடுத்துக்கொள் என்றார்.


முதல் அடியை அளக்க

காலை உயர்த்தினேன்

உலகத்தை ஏற்கனவே

அளந்து விட்டனர்

196936481 சதுர மைல்

விண்ணை அளக்கலாம்

என்றால்

அது வளர்ந்து கொண்டே

போகிறது.

நேரமாகி விடும்

பெல்லடித்து விடுவார்கள்


காலை மடக்கி

மூன்றடி அளந்தேன்

நிலத்திலேயே.


ஆசிரியர் புன்னகைத்தார்

அவர் தலை தப்பியது

எல்லோருக்கும்

இடம் கொடுத்தாகிவிட்டது,


சுக்கிரனுக்கோ

கண்ணில் வலி.

நமக்கோ நெஞ்சில்

அவதார் சினிமா தானோ?

Thursday, February 3, 2011

கல்கி வரட்டும்.....

ராமனும் சீதையும்
காட்டிற்கு சென்று
தேடியும்
விறகு கிடைக்கவில்லை

பிருந்தாவன்
பூங்கவானதிலிருந்து
கிருஷ்ணனும் வருவதில்லை

அக்னி முறுக்கு கம்பிகளால்
தூண்கள்
கெட்டியாகிவிட்டதால்
நரசிம்மராலும்
ஒளிய முடிவதில்லை

கோடாரியை
பழைய இரும்பிற்கு
போட்ட பரசுராமனுக்கும்
கதையை
பாதி விலைக்கு விற்ற
பலராமனுக்கும்
தொழில்களில்லை

மற்றபடி
கல்கி வந்தால்தான்
எல்லோருக்கும் நிம்மதி
அவனுக்கு
ஐ,டி கம்பெனியில்
பெரிய வேலையாம்
சம்பளமே பெரியதொகை
ஆனால்
குதிரையில் தான்
வருவானாம்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...