Friday, December 17, 2010

மனிதர்களுக்குத்தான் எல்லாமே.....

மறுபடியும்
பாற்கடலைக் கடைந்தபோது

வெண்ணைதான் வந்ததாம்.


கோபத்தில்

சிவன் தொண்டையில்

இருந்த விஷத்தை கக்கியதும்

இருமல் சரியானது.

பெனடிரில் சிரப்

ஒத்துக்கொள்வதில்லை

இப்போதெல்லாம்.


பிரம்மச்சுவடி

தொலைந்த வருத்தத்தில்

அரிச்சுவடி படிக்க

ஆரம்பித்து விட்டார் பிரம்மா.

எட்டாம் வாய்ப்பாட்டிற்குமேல்

வரவில்லையாம்


சிவன், பிரம்மா, விஷ்னு
மூவரும்
ஒன்றாம் வகுப்பிலிருந்தே
நண்பர்கள்தான் என்றாலும்
அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
தொழில்கள் வேறு வேறு.

நடுத்தரக் குடும்பங்கள் தான்

என்றாலும்

குகை மலைகள் தான்

வீடு என்பதால்

வாடகை தொல்லை இல்லை.


சூரியன் சந்திரனென்று

பவர்கட் எப்போதுமில்லை.


வாகனங்களுக்கு

பெட்ரோல் பிரச்சனையுமில்லை.


மனிதர்களுக்குத் தான்

எல்லாமே.

Monday, December 13, 2010

சரியோ தவறோ....

இதுசரி இதுதவறு
என்று

அம்மா சொன்னாள்

அப்பாவும் அதையே

சொன்னார்.


மாமாவும் அத்தையும்

வேறு மாதிரி

சொன்னார்கள்


நண்பர்கள் இன்னும்

வேறு மாதிரி

சொன்னார்கள்.


எல்லாவற்றையும் குழப்பி

நானொன்றை செய்தால்

தவறென்றனர்

எல்லோருமே.


எல்லோருக்கும் சரி

என்று

இங்கே ஏதுமில்லை.


சரியோ தவறோ.....

நேரே செய்துகொண்டிருப்பதால்

உணரப்படுகிறது

என் இருப்பு

ஒரு கடவுளைப்

போலில்லாமல்.

Monday, December 6, 2010

இன்டலிஜன்ட் பெர்ஷன்.....

இந்த வருட
இன்டலிஜன்ட் பெர்ஷன் விருது

எங்கள் நிறுவனத்தில்

எனக்கு கிடைத்த்து.


விற்பனை சம்பந்தமாய்

நான் வகுத்த

விதிமுறைகளில்

அள்ளிய லாபம்


அலுவலக நிமித்தம்

நான் செய்த

மாற்றங்களில்

கிடைத்த பலன்கள்


கிளை மேலாளருக்கோ

பெருமை

சக ஊழியர்களுக்கோ

மகிழ்ச்சி


நான் போடும் கணக்குகள்

எப்போதும் தப்பாதென

என்னைத்தெரிந்த

எல்லோருக்கும்

தெரியுமென்றாலும்

குழம்பி விடுகிறது மனது


முத்தின முருங்கை

மூன்று ரூபாய்

அழுகின தக்காளி
பத்து ரூபாய்க்கு வாங்கி

மானத்தை வாங்குகிறாரே

எனும் என் மனைவியிடமும்


நீ போட்ட கணக்கெல்லாம் தப்பு

மிஸ் திட்றாங்கப்பா

இனி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்

எனும் என் மகனிடமும்.
Wednesday, December 1, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 3.......

நரேன் உன் வார்த்தைகள் மிகக் கடுமையாக உள்ளன. உனக்கு யார் மீது கோபம்?

தவறிருந்தால் மன்னியுங்கள் சாமி. எனக்கு யார்மீது கோபம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து என் ஆத்திரத்தை அப்படியே கொட்டிவிட அனுமதியுங்கள். பிழையிருந்தால் பொறுத்துக்கொள்ளவும் சாமி.

சரி கேள் நரேன். கடமையைச் சரிவரச் செய்யும் எல்லா ஆன்மாக்களுக்குமே அதன் பலன் உண்டு. நீ கடவுளை நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அவரவர் வினைகளின் படி அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியத்தை பெறுவர் என்று நான் கற்ற வேதங்கள் சொல்கின்றன.

அப்புறம் நீங்கள் ஏன் அந்த இல்லறவாசியை உங்கள் ஆன்மிக உரைகளுக்கு இழுக்கிறீர்கள். விட்டு விடுங்களேன் உங்கள் போதனைகளை. அவன் பாட்டுக்கு அவன் பலனை அனுபவித்து விட்டு போகிறான்?.

ஹா அது அப்படி இல்லை நரேன். நான் கற்ற வேதங்கள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்னதான் கடமைகளைச் செய்தாலும் நம்மை படைத்த கடவுள் நமக்கு வாழும் வழிவகையும் செய்து இப்புவியில் நமக்கு துணையாக இருக்க பல உயிர்கள், தாவரங்கள் என பலவற்றை படைத்து நமக்கு பக்க பலமாக இருக்கச் செய்தவனுக்கு நம் ஒரு நன்றியாவது செலுத்த வேண்டாமா?.

சரி இல்லறவாசியை விடுங்கள் சாமி ஒரு துறவி எதை நோக்கிச்செல்கிறான். அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன?

ஓரு துறவி இறைநிலை நோக்கியே பயணிக்கிறான். அவன் அதற்காக பல யோகங்கள், தியானங்கள் என்று சதா இறையையே நினைத்துப் பயணிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் தன்னுள்ளே கலந்து தன்னையே இறையாக கானவும்தான்என்ற எதுவும் இல்லை என உணரவும் செய்கிறான்.

ஞானமடைதல் என்கிறார்களே அது இதுதானா சாமி?

இருக்கலாம். நான் அதைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்க முடியவில்லை.

சிலர் நான் ஞானமடைந்து விட்டேன் என்று மக்களுக்கு போதனை செய்யக் கிளம்பி விடுகிறார்களே சாமி இது சரியா? .

ஹா என்னை விடமாட்டாய் போலிருக்கிறது?. எனக்குத் தெரிந்து ஒரு துறவி தன் ஞானமடைதலுக்கு பின்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு பின் சிந்தனைகளுக்கு வேலை இல்லை. சிந்தனையை நிறுத்திய பிறகு தான் அனைத்துமே சித்தியாகும்.


சாமி புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள், இந்து மதத்தில் நிறைய ஞானிகள் என்று இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தோன்றி இந்த உலக மக்களுக்கு எத்தனையோ விதமான நல்ல கருத்துக்களைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள்.

உனக்கு அதிலென்ன சந்தேகம்?.

எல்லா ஞானிகளுமே இறைவனைப்பற்றி ஒருமித்த கருத்து ஏதும் சொல்லவில்லை. எல்லாருமே அவரவர் காலங்களில் அந்தந்த நிலையில் இருந்தே தங்கள் கருத்துக்களை சொல்லயுள்ளனர். அவர்கள் எல்லோரையும் தவறு சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும்.....


என்றாலும்?!!!!!!!!!!!!!!!!!!!!!!.....

நாம் இன்னும் கடவுள் என்ற த்த்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று சந்தேகம் வருகிறது?


ஹா நரேன் மிக சமார்த்தியசாலி நீ கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று என்னிடமே கேட்கிறாய்?. இல்லையா ஹா..............


நரேன் நீ மற்றவர்களைப் போல அல்ல. உன்னுடைய கேள்விகள் அடுத்த தலைமுறைக்கு நிறைய செய்திகளை சொல்ல வேண்டும். நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த மனிதர்களிலிருந்தோ, இப்போது வாழும் மனிதர்களிடமிருந்தோ, என்னிடமிருந்தோ எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது இனி ஏதுமில்லை. நீ உனக்குள் தேடு. உன்னிடமே எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும். நீ உன்னையே கேள். இங்கே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள எல்லாருக்கும் சம வாய்ப்புகள் தான். ஒரு துறவிக்கு ஒரு ஞானிக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளனவோ அதுவே எல்லா மனிதர்களுக்கும். உன் கேள்வி என்கிற பூட்டிற்கு நீயே தான் சாவி. உன்னையே அதற்குள் நுழைத்து தெரிந்து கொள். இருக்கும் போதே உணர்ந்து கொள் அப்போது தான் இல்லாமல் போவதில் அர்த்தம் இருக்கும்.

கடவுள் இருக்கிறாரா?, இல்லையா? அவர் வியாபாரியா?, பஜனை கோஷ்டிகளின் தலைவனா? எல்லாம உனக்கே தெரியும் வகையில் தான் இங்கே எல்லாமே இருக்கிறது. நானும் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதால் காலத்தின் கட்டாயம் இருந்தால் மீண்டும் சந்திப்போம். வருகிறேன்.

கிளம்பி விட்டார்.

Monday, November 29, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 2.......

முதலில் துறவு என்றால் என்ன?

மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை.

எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உயிரோடு இருக்க முடியுமா?. முடியாது. எல்லாவற்றையும் துறந்த நிலை என்றால் மண்,பொன்,பெண்,மது என்று உலக இன்பங்கள் எதிலும் பற்றில்லாமல் இருப்பது.


நீ துணி உடுத்தி இருக்கிறாயே அப்படியென்றால் அதன் மேல் பற்றா? என்று கேட்கக் கூடாது. மனிதனின் மிகவும் அடிப்படைத் தேவைகளைக் கூட பற்றில்லாத மனதுடன் உயிர் வாழ மட்டுமே தெரிவு செய்வதாகும்.

இறைப்பணி செய்வதும் துறவு நிலைக்கான தன்மை.


நீ துறவியா?


இல்லை முழுத்துறவு என்பது மனிதன் இறந்த பின்பு தான் முழுமையடைகிறது. அந்த நிலை நோக்கி செல்கிறோம் அவ்வளவே.


நீ ஏன் துறவியானாய்?

சிறு வயது முதலே இந்நிலை மேல் ஆர்வமிருந்த்து. இருந்தாலும் இல்லறம் எனை இழுத்த்து. ஒரு கட்டத்தில் என்னால் பணம் சம்பாரிக்க முடியாமல் போனபோது நான் அன்பு செலுத்திய என் மனைவி மக்களாலேயே வெறுக்கப்பட்டேன். அது என்னை வருத்தியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சாம இந்நிலைக்கு மாறி விட்டேன்.


வெறுப்புதான் உங்களை இந்நிலைக்கு தள்ளியதென்றால் ஒரு கட்டத்தில் துறவை வெறுத்து இல்லறம் புகுந்து விடுவீர்களா?. ஒரு நிலையின் வெறுப்பு இன்னொரு நிலைக்கு மாற்றினால் அதில் நிலைத்தன்மை இருக்குமா?.

முதலில அப்படிததான் இருந்தது. ஆனால் என் இறுதிப் பயணத்திற்கான தேடலும், இறைநாட்டமும் என் முழுகவனமும் துறவு நிலையிலேயே இருக்கிறது. என் மனதை நான் கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டேன். எனவே என் நிலை மாறாது.


சாமி இல்லறம், துறவறம் எது சிறந்த்து? இருவரின் இறுதி நிலைதான் என்ன?

இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தது தான். வாழ்க்கைத் தராசில் சம்மாய் இருக்கும் இரு தட்டுக்கள் தான் இவை. இல்லற வாழ்க்கையை முடித்து என்னைப்போல துறவு கொள்பவர்களும் உண்டு.

இருவரின் இறுதித்தேடலும் இறை தான். இல்லறவாசிக்கு பக்தி மார்க்கம். துறவறத்திற்கு யோக மார்க்கம், ஞான மார்க்கம்.


சாமி இரு நிலைகளுமே சமம் தான் என்றால் தங்களை தாழ்த்திக்கொண்டு உங்களின் கால்களில் விழும் இல்லறவாசிகளை ஏன் அனுமதிக்கிறீர்கள். அவர்களை விட நீங்கள் எந்த வகையில் உயர்ந்து விட்டீர்கள்?.


ஹ ஹ ஹ ஹ ஹா நல்ல கேள்வி. இல்லறத்தில் உள்ளவன் அந்த இறைநிலை பற்றிய சிந்தனையே இல்லாமல் இல்லறக்கடமைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர்கள். துறவிகளோ ஆன்மீகத்தில் லயித்து இறைவனையே நிணைத்து படித்து அழுது இறைநிலைக்காக ஏங்குபவர்கள். எந்த உண்மையான துறவியும் தன்னை வணங்கும் ஒருவனை அவன் தனக்கு மரியாதை கொடுக்கிறான் என்று எண்ண மாட்டார்கள். அவனுடைய பணிவு, வணக்கம், பக்தி எல்லாமே இறைவனைச்சார்ந்தவை என்று அவனுக்குத் தெரியும். எனவே அந்த வணக்கத்தின் மதிப்பை எப்போதும் தன் உள்ளத்தில் வைத்து கர்வம் கொள்ள மாட்டான் அதை அப்படியே இறைவனுக்கு அனுப்பி விடுவான்.சரி அப்படியே இருக்கட்டும். தன்னைத் தாழ்த்தி வணங்கும் ஒருவனைத்தான் இறைவன் ஏற்றுக்கொள்வானா? எந்த நேரத்திலும் அவனையே நிணைத்து அவனைப்பாடும் ஒருவனுக்குத்தான் நீங்கள் சொல்லும் மோட்சம் அல்லது இறையை அடையும் பாக்கியம் கிடைக்குமா? சாதாரணமாக தன் இல்லறக் கடமையை சரியாய் முடித்து செத்துப்போகும் இல்லறவாசிக்கு உங்கள் பதில்?. இறைவனும் பாராபட்சம் பார்க்கும் ஒரு வியாபாரியாய்த் தான் இருப்பானா?. நீங்கள் அவனுக்கு ஜால்ரா அடிக்கும் கோஷ்டியாகத்தான் இருப்பீர்களா?

....continue

Saturday, November 27, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள்.......

எங்கள் ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார்.

ஒரு 60 வயதிற்கு மேல் மதிப்பிடலாம். நல்ல பொலிவான முகம். சாந்தமாய் நோக்கும் கண்கள். கொஞசம் தளர்ந்த நடை. காவி உடை, கையில் ருத்ராட்சம் இன்னொரு கையில் ஊன்றுகோல். கூடவே நாலைந்து சீடர்கள் என்று வந்திருந்தார். அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையாருடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

மக்கள் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருந்தனர். பெண்கள், பிள்ளைகள், ஆண்கள், முதியோர், இளைஞர் என வரிசையாய் ஆசிர்வாதம் பெறுவதும் பழம் கனிகளை அவருக்கு காணிக்கை கொடுப்பதுமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தன் ஆன்மீக உரையை தொடங்கினார்.

குரல் அப்படி ஒரு கணீர் குரல். அவரின் ஆன்மீக உரை கேட்பவர் நெஞ்சங்களை கொள்ளை கொண்டது. நடுவே பாசுரங்கள், பிரபந்த்த்திலிருந்து எடுத்துக்காட்டுகள் என எல்லோரையும் ஒரு மூன்று மணி நேரம் கட்டிப்போட்டு வைத்து விட்டார். பின்னர் ஓரு வாழ்த்துப்பாடலுடன் முடிக்க மக்கள் கூட்டம் அமைதியாய் கலைந்து சென்றது.

ஓய்வில் இருந்த மாலை நேரத்தில் நான் தனியாக அவரை அனுகினேன். வணக்கம் சாமி என்றேன். வா அப்பா இப்படி உட்கார் என்று சொன்னார்.

சாமி எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. அதை கேட்டு தெளிவு பெறலாம் என்று வந்தேன். தங்களுக்கு நேரம் இருக்குமா? என்றேன்.

இந்த காலத்து இளைஞர்கள் என்னைப்போன்ற துறவிகளை அனுகி சந்தேகம் என்று கேட்பதே பெரிய விஷயம். தாராளமாக கேள் அப்பா. முதலில் உன்னைப்பற்றி விவரங்களைக் கூறு என்றார்.

சாமி என் பெயர் நரேன். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறேன். என் குடும்பம் பாரம்பரியம் மிக்க இந்து குடும்பம். நாள் தவறாது பூஜை செய்யும் என் தாய் மற்றும் கோவில் காரியங்களை முன்னின்று நடத்தும் என் தந்தை என்று எனது குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம். இருந்தாலும் என்னை குடைந்து கொண்டே இருக்கும் சில கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை, தாங்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் என்று வந்தேன்.

சரி சொல்லப்பா எனக்கு தெரிந்த விவரங்களை அவசியம் கூறுகிறேன் என்றார்.

நீங்கள் துறவியா? துறவியென்றால் ஏன் துறவியானீர்கள்? துறவு என்றால் என்ன?

ஒரு நிமிடம் திடுக்கிட்டார். பின்னர் மெதுவாக சிரித்தார்.

ஹ ஹ ஹ ஹ ஹா என்னப்பா இது ஆன்மீக கேள்விகள் அல்லது பொதுவான கேள்விகள் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன். நீயோ என் சுயசரிதையை கேட்கிறாயே? என்றார்.

சாமி தாங்கள் என்னை தவறாக எண்ண வேண்டாம்? இதுவும் பொதுவான கேள்விதான். அதாவது மனிதர்கள் ஏன் துறவியாகிறார்கள். அதையே கொஞ்சம் மாற்றி உங்கள் அனுபவமாக கேட்டேன் அவ்வளவு தான் என்றேன்.

என்னை உற்றுப்பார்த்தார் “நீ நாத்திகனா?” என்றார்.

இப்போது நான் புன்னகைத்தேன் “சாமி நாத்திகமோ ஆத்திகமோ எல்லாமே ஒரு நிலைதானே தவிர அது தனிமனிதனை அடையாளப்படுத்துவதற்கு தேவையில்லாதது.

நான் ஆத்திகம் பற்றியோ நாத்திகம் பற்றியோ பேசவில்லை சாமி. எனக்குள் எழும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். அதை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அவ்வளவுதான்?” என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தார்.

தம்பி உன்னுடைய எண்ணங்கள் புரிகறது. நீ நான் நினைத்தது போல் விளையாட்டுப் பையன் அல்ல. எனவே எனக்கு தெரிந்த விவரங்களை உனக்கு விளக்குகிறேன் என்று ஆரம்பித்தார்...
.sorry continue