Tuesday, July 27, 2010

எனக்குத்தான் பிடிக்கவில்லை

இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அணிய வேண்டியிருக்கிறது. அவர்களும் இதை விரும்பி எடுத்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் எடுத்ததை விரும்பி விட்டனர். எனக்குத்தான் பிடிக்கவில்லை.

தம்பியும் தங்கையும் தனக்கு கிடைத்த உடைபற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கொடுத்ததை அணிந்து கொண்டு சந்தோஷமாய் திரிகின்றனர். விளையாடிவிட்டு வரும்போது அழுக்காக்கி விடுகின்றனர். எனக்கு என் உடை எப்போதுமே அழுக்காய்த்தான் தெரிகிறது. எத்தனை முறை நீரில் முக்கினாலும் இந்த அழுக்கு ஒரு கறையைப்போல ஒட்டிக்கொண்டு போகவே மறுக்கிறது.

குப்பைகளும், தூசிகளும் நிறைந்த இந்த உலகில் என் உடை மட்டும் எப்படி சுத்தமாக இருந்து விட முடியுமென்று மனம் தன்னையே சமாதானப்படுத்திக் கொள்கிறது.

பெரும்பாலும் என் எதிர்படுபவர் யாருக்கும் தங்கள் உடையைப்பற்றி கவலையில்லாமல் இருக்கின்றனர். எளிதில் அழுக்காகிவிடுகிறது. ஒரு நாளைக்கு தூக்கி எறிந்துவிடுவோமென்ற எண்ணம் இருந்தாலும் நிறையப்பேர் அதை அழகுபடுத்தி கொள்கின்றனர். பலருக்கு தங்கள் உடைபற்றிய பெருமை, பலருக்கு அடுத்தவர் உடை பற்றிய பொறாமை. சிலர் தங்கள் உடையையே ரசிக்கின்றனர். நிறையப்பேர் அடுத்தவர் உடையை ரசிக்கின்றனர்.

எனக்குத்தான் பிடிக்கவில்லை. பொத்தல் பொத்தலாய் இருக்கும் இந்த உடையை எத்தனை நாளைக்கு வைத்திருப்பது. ஏதாவது பட்டால் சிலநேரம் கிழிந்து விடுகிறது. சில இடங்களில் புடைத்துக்கொண்டு, சில இடங்களில் உள்ளே போயும் பார்க்க சகிக்க வில்லை.

எல்லோருமே சில நேரங்களில் தையற்காரனிடம் சென்று விடுகின்றனர். அது சரியில்லை, இது சரியில்லை என்று தங்கள் உடையில் எத்தனை குறைகள் வைத்திருக்கின்றனர். இதுதான் சமயம் என்று தையற்காரர்கள் பெருகிவிட்டனர். எனக்கு அவர்களையும் சுத்தமாக பிடிப்பதில்லை. ஒன்றை சரிசெய்து இன்னொன்றை கோனையாக்கி விடுகின்றனர்.

கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிகூட கூறுவாள் உடையை சுத்தமாக வைத்திரு. உடை நல்ல சுகாதாரத்தோடு இருந்தால் தான் நீண்டநாட்கள் இங்கே தங்க முடியுமென்று.

தாத்தாவும் அப்படித்தான். அவர் எப்போதும் தன் உடையை சுத்தமாக வைத்திருப்பார். தினமும் தன் உடையை சிரமப்பட்டு பராமரித்து வந்தார். என் தாத்தாவும் பாட்டியும் நீண்ட நாட்கள் கிராமத்திலேயே தங்கிவிட்டனர்.

இருந்தாலும் ஒருநாள் இரண்டுபேருமே தங்கள் உடை பிடிக்கவில்லை என்று முகம் சுழித்து தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டனர். பின்னர் அவர்களை நான் பார்க்கவே முடியவில்லை.

என் தாயும் தந்தையும் கூட அவர்கள் உடைகள் கொஞ்ச நாட்களாக பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சலவைக்காரன் வந்தால் கொடுத்து விடலாம் அவனையும் காணோம் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

என் மனைவியும் குழந்தைகளோ தங்கள் உடையை பொக்கிஷம் போல வைத்திருக்கின்றனர். தினமும் அதை சுத்தப்படுத்துகின்றனர். பக்கத்து வீட்டுக்காரனை விட நம் உடைகள் தான் சிறந்தவை என்று நம்புகின்றனர்.

எனக்குத்தான் பிடிக்கவில்லை. ஒரே புழுக்கமாக இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இதை அணிவது. வெயில் காலத்தில் உள்ளே அப்படியே வெந்து விடுகிறது. குளிர்காலத்தில் நடுங்க வைத்து விடுகிறது. எந்த பருவத்தையும் தாக்குபிடிக்க முடியாத இந்த உடை எதற்கு? பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் கழற்றி எறிந்து விட்டேன்.

ஆஹா எவ்வளவு சுகமாக இருக்கிறது. காற்று, வெயில், மழை என்று எதுவும் பாதிக்காமல் இதமாக இருக்கிறதே.

என் மனைவியும், குழந்தைகளும் ஏன்தான் நான் கழற்றிப்போட்ட உடையைச் சுற்றி நின்று அழுகின்றனர் என்றே தெரியவில்லை. . அவர்களும் ஒருநாள் கழற்றித்தானே ஆக வேண்டும்!.

Tuesday, July 20, 2010

நீ...நான் மற்றும் இயற்கை

ஒரு மழைநாளில்

அறிமுகமானோம்

நதி நணைக்கும்

கோவில் வாசலில்...


மழையை ரசித்தபடி

இருந்த நீ

மழையில் நனைந்தபடி

இருந்த என்னை

நோக்கினாய் வியப்புடன்...


விழிகளில் பேசி

மொழிகளில் கலந்தோம்


உனக்கும் எனக்கும்

இலக்கியம் தத்துவமென

ஒரே சிந்தனை

ஒரே வகை எண்ணங்கள்


பரிமாறிக் கொண்டோம்

நம் சிந்தனைகளை...

இரவு பகல் எல்லையற்று

இடம் பொருள் தடையின்றி

பேசினோம்.....பேசினோம்....


ஞானிகள் அறிஞர்கள்

சிந்தனையாளர்கள்

ஸ்தம்பிக்க.....

இயற்கை அதிர....

பிறந்தன

புதிய சிந்தனைகள்

புதிய தத்துவங்கள்

புதிய கோட்பாடுகள்...


கணம் தாமதியாமல்

கலந்தாலோசித்த நம் பெற்றோர்

மணமுடித்தனர் நம்மை

இல்வாழ்க்கை துணைவர்களாய்..


காலங்கள் உருண்டன

நமக்கான

புதிய சிந்தனைகள்

புதிய தத்துவங்கள்

புதிய கோட்பாடுகள்...

ஸ்தம்பிக்க.....

பிறந்தன

குழந்தைகள்.... குழந்தைகள்...

இயற்கை சிரித்தது.

Wednesday, July 14, 2010

வட்டங்கள்


பறவைக்கென்று ஒரு வட்டம்

அதற்குள் அதன் வாழ்க்கை

வானமும்

இருத்தலுக்காய் ஒரு கூடும்...


விலங்குக்கென்று ஒரு வட்டம்

அதற்குள் அதன் வாழ்க்கை

காடும் அது சார்ந்ததுமாய்..


மீன்களுக்கென்று ஒரு வட்டம்

நீரும் நீர் சார்ந்த இடமும்...


மனிதர்களுக்கென்று ஒரு வட்டம்

புவியும் புவிசார்ந்த இடமும்...


அதனதன் பாஷை

அதனதற்கு

அதனதன் வாழ்க்கை

அதனதற்கு..


ஒன்றன் பாஷை

இன்னொன்றறிவதும்

ஒன்றன் வாழ்க்கை

இன்னொன்று வாழ்வதும்

சாத்தியமில்லை...


அதனதன் வட்டங்கள்

விரிகின்றன சுருங்குகின்றன

ஆனால் உடைவதில்லை...


எதுவும் எதையும்

உருவாக்கவுமில்லை

அழிக்கவுமில்லை

கடவுளை நெருங்கிவிட்டேன்

என்று அடிக்கடி பீற்றும்

மனிதன் தவிர

அதனதன் வாழ்க்கை

அதனதற்கு.



  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...