Saturday, August 28, 2010

என்னவளே அடி என்னவளே

யோசித்து வைத்திருக்கிறேன்

உன்னைப் பற்றி

ஒரு கவிதை எழுத....


ஒரு கவிதையை மறுபடியும்

கவிதையாய் வடிக்கமுடியுமா

தெரியவில்லை......


நீ அழகு என்பதை

நான் சொல்வதை விட

உன் தெருவில் நடந்த

சாலை விபத்துக்கள்

நிறைய சொல்கின்றன...


நீ அறிவு என்பதை

நான் சொல்வதை விட

உன் பல்கலைக்கழகப் பட்டங்கள்

நிறைய சொல்கின்றன....


உன் புன்னகையில்

பல இதயங்கள் நின்றுவிட்டன

என்பதை நான் சொல்வதை விட

இடுகாட்டுத் தகவல்கள்

நிறைய சொல்கின்றன....


உன் மலர்ப்பாதம் படும் பூமி

ஒரு மெல்லிய பனித்துளி

கண்ணத்தில் விழுந்ததைப்

போல் சிலிர்ப்பதை

நான் சொல்வதை விட

நீ நடந்த இப்பூமி

நிறைய சொல்கின்றன...


ஒரு நாளைக்கு

ஐந்து பொய்கள் தான்

என்பதால்

நாளை மீண்டும்

யோசித்து வைக்கிறேன்.

Monday, August 23, 2010

கடலை வியாபாரம்

அஞ்சாம் வகுப்பில்

அருந்ததியை சைட் அடித்ததோ.....

பத்தாம் வகுப்பில்

பவித்ராவின் பார்வைக்கு அலைந்ததோ....

பன்னிரெண்டாம் வகுப்பில்

வருஷம்16 படம்

பதினாறு முறை பார்த்துவிட்டு

குஷ்பு புகழ் பாடியதோ....

கல்லூரி வளாகத்தில்

அடுத்த டிபார்ட்மெண்ட்

அனிதாவிற்கு நூல்விட்டதோ...

வேலையில் சேர்ந்து

கிளார்க் கிருஷ்ணவேணி

வீட்டுக்கு வேலை செய்ததோ...

எதுவென்று தெரியவில்லை

பெண்ணேதும் அமையவில்லை

அருந்ததியோ பவித்ராவோ குஷ்புவோ

அனிதாவோ கிருஷ்ணவேணியோ

ஓகே சொல்லியிருந்தால்

வாழ்க்கை பிரகாசமாகியிருக்குமா

தெரியவில்லை!!!

Wednesday, August 18, 2010

நானும் எனது தேடல்களும்

எனக்கு தேடல் பற்றி அதிகம் ஞானம் இல்லை. தேடல்கள் பற்றி முழுவதுமாக தெரிந்திருக்கவும் இல்லை. பின் ஏன் என் கதையை எழுதுகிறேன் என்று ஆச்சரியமாகதான் இருக்கிறது.


எனது முதல் தேடல் ஏழுவயதில் ஆரம்பித்தது. அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். (எல்லோருமே ஏழுவயதில் இரண்டாவது தான் படிப்பார்கள் என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. சத்தியமாக நானும் இரண்டாவதுதான் படித்தேன்). தொலைந்து போன சிலேட் பென்சிலை கண்டுபிடிக்காமல் வந்தால் இனி உனக்கு பென்சிலே கிடையாது என்று என் அம்மா சொன்னபிறகு எனது பென்சில் தேடல் அவசியமானது. உட்கார்ந்திருந்த இடம், விளையாடிய இடம், நண்பனின் பை என்று எந்த இடத்திலும் அது இல்லை.


என்னால் பார்க்க முடியவில்லை, எனக்குத் தெரியவில்லை, என்னால் உணரமுடியவில்லை என்பதால் அது அங்கே இல்லை என்று சொல்ல முடியவில்லை. அது அங்கேதான் இருக்கிறது என்றும் அறிய முடியவில்லை.


இந்த குழப்பமான நிலையில் வீட்டிலேயே ஒரு இடத்தில் கண்டறிந்தபின் தான் நிம்மதியடைந்தேன்.



பின்னர் எனது பதினேழு வயதில் நான் ஓட்டிக்கொண்டிருந்த மிதிவண்டியை தொலைத்து விட்டேன். தேடலின் இரண்டாவது கட்டம் கொஞ்சம் அபாயகரமானதாய் இருந்தது. வீட்டில் உருவிய பெல்ட்டோடு நிற்கும் என் அப்பாவை நினைத்து பார்க்கவே முடியவில்லை. பழகின இடங்களுக்கெல்லாம் பாதயாத்திரையாக சென்று தேடினேன். இருந்தாலும் அது ஒரு முடிவில்லாமலேயே இருந்தது. கடைசிவரை அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.


இல்லாத ஒன்றை எத்தனை நாளைக்கு எப்படித் தேடினாலும் கிடைக்கவா போகிறது? இருக்கிற என்னையே தேடமுடியாதபோது?.


பின்னர் என் தேடல் பொருள்களுக்கானதாய் இல்லாமல் வாழ்க்கைக்கானதாக மாறியது.


அவளுக்கு அழகிய முகம், சிவந்த விழிகள் (மெட்ராஸ் ஐ அல்ல). புருவத்திற்கிடையே மெல்ல எட்டிப்பார்க்கும் ஒரு மச்சம் மேகத்திற்கிடையே மறையும் முழுநிலவு போல்(இது மச்சத்திற்கான தேடல் இல்லை). அவள் சிரித்தால் அருவியின் ஓசை( அருவியை பார்த்த்தில்லை, குழாய் தண்ணியையே அப்படி கற்பனை செய்து கொள்வேன்). மொத்தத்தில் அவளிடம் ஏதோ எனக்கான தேடல் மிச்சமிருப்பதாய் தெரிந்தது. பார்த்து பழகி, பேசி மகிழ்ந்து, ஊர் சுற்றி, அவளைக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக்கொடுத்து (சுரண்டி சுரண்டி பாக்கெட் ஓட்டையாகி அதில் கிணறு தோண்டி நீரெடுத்து விட்டாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்) என்ன செய்தும் அவளுக்கான எனது தேடல் நிறைவு பெறாமலேயே காலம் கடந்தது.


இது ஒரு வித்தியாசத்தேடல். நான் தேடும் பொருள் எதிரிலிருந்தும் அதில் நான் தேடுவது எது என்று புரியவில்லை.


முடிவில்லாமல் சென்ற அந்தத் தேடலும் ஒரு முடிவுக்கு வந்தது அவள் கல்யாணப்பத்திரிக்கை வடிவில்.




வாழ்க்கை வெறுத்துப்போய் சாமியாராகும் முடிவுக்கு வந்து விட்டேன் (என்ன ஒருமாதிரி பார்க்கிறீர்கள். சத்தியமாக அப்படியெல்லாம் இல்லை. இது உண்மையிலேயே சாமியார் நம்புங்கள்), என்னுடைய ஆண்மீகத் தேடல் (சாரி.. ஆன்மீகத் தேடல் திருத்தி வாசிக்கவும்) ஆரம்பமானது (இப்போது தான் உண்மையான தேடல் ஆரம்பிக்கறது. கைதட்டுங்கள் ஏனென்றால் கடவுளைத் தேடுவது தான் தேடல் என்று எனக்குச் சொன்னார்கள்), கோயில், குளம், குட்டையெல்லாம் அலைந்தேன். கையில் திருவோடு, கழுத்தில் உத்திராட்சம், இடுப்பில் காவி.


காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்தப்பையடா


என்று பாடித்திரிந்தேன். இதற்காகவே பட்டிணத்தார், அழுகனி சித்தர், பத்திரகிரியார், இடைக்காடர் என்று எல்லோருடைய பாடல்களையும் முன்பே வாங்கி மனப்பாடம் செய்து கொண்டேன். சாமியார் உடை அணியும் முன்பே இதை prepare செய்து விட்டேன் (பரிட்சைக்கு படித்திருந்தால் கூட IAS. IPS மாதிரி ஏதாவது ஆகியிருப்பேன்).


காசி முதல் ராமேஸ்வரம் வரை நடந்தேன். பல திருத்தலங்களை தரிசித்தேன். எல்லா இடங்களிலும் அதற்கென்று பிரத்யேகமாக உள்ள சந்நியாசிகள், ஞானிகளை சந்தித்து தெளிவு பெற்றேன்.(அடுத்தநாளே என்ன சொன்னார்கள் என்று புரியாமல் குழம்பினேன்). என்ன செய்தும் என் தேடல் முடிவடையவில்லை. கடைசியில் கடவுளையாவது தரிசித்து விடலாம் என்று நம்பினேன். நீ தான் கடவுள் என்று சொல்லிவிட்டனர் (முகம் பார்க்கும் கண்ணாடி வாங்கி வைத்திருக்கிறேன். கடவுளை அடிக்கடி பார்க்க).


இந்த்த் தேடலில் முடிவும் இல்லை, பொருளும் இல்லை என்று நான் முடிவு செய்த போது என் பெற்றோர் என்னை கண்டுபிடித்து கூட்டிச் சென்று விட்டனர். உடனே ஒரு கல்யாணமும் செய்து வைத்து விட்டனர். ஒரு வழியாக இந்தத் தேடல் முடிவிற்கு வந்தது.


என் மனைவி சொன்னாள் உங்கள் தேடல்களையெல்லாம் கேள்விப்பட்டேன். நீங்கள் தேடியது எதுவும் கிடைக்காமல் எவ்வளவு வேதனைப்பட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன். இனி உங்களுக்கென்று எதுவும் தேடலே இருக்காது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.


அன்றிலிருந்து எனக்கான தேடல்கள் நின்று போனது.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...