Saturday, September 25, 2010

நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.....

நான்முப்பது நாளில் செத்துப்போய்விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

அதிர்ச்சியாய் இருந்த அந்த செய்தியில் உறைந்து போனேன். துக்கம் தொண்டையை அடைத்த்து, மீண்டும இந்த உலகை பார்க்கவே முடியாதா? . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ? என்ற பயம் ஆட்டிப் படைத்தது.

விடுபடவே முடியாத துக்கம் நீண்டு கொண்டே சென்றது. கண்ணீர் விட்டு அழுதேன். காட்சிகள் வெறுமையாய் இருந்த்து. எதைப்பார்த்தாலும் இனி மறுபடியும் இதைப்பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது.

அப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது. இப்போது தான் என்மகனின் குழந்தை பள்ளிக்கு செல்கிறான். மகளின் பெண் பூபெய்தி 10 நாட்கள் தான் ஆகிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் முடியும் வரையாவது இருக்கலாம் என்றால் இந்த பாழாய்ப்போன வியாதி வந்து எல்லாம் கெட்டது. ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் பற்றி என்ன நினைப்பான்? வயதாகி முடியாமல் தளர்ந்து போனபின்பே இறப்பு வரும் என்று தானே நிணைக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டி, வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி நாளைக்கு செத்து விடுவாய் என்று என்னமோ நாளைக்கு பஸ் பிடித்து ஊருக்கு போய்விடு என்பது போல சொல்லி விடுகிறார்கள்.

என் வாழ்க்கை இப்படி ஒரு சின்ன வட்டத்திலேயே முடிந்து விடுமா?. எந்த ஊரையும் முழுதாக்க்கூட பார்க்க முடியவில்லையே. டில்லியில் தாஜ்மஹால் அற்புதமாய் இருக்கிறதாம். என்னால் சென்னையைக்கூட சுற்றிப்பார்க்க முடியவில்லை.

கடவுளே எனக்கு கடலைபருப்பி என்றால் கொள்ளை பிரியம். அதையாவது அடிக்கடி சாப்பிடலாமா என்னவோ தெரியவில்லை.

ஐயோ ரோட்டில் போகும் இந்த நாய்கூட என்னை பரிதாபமாக பார்க்கிறதே. என்ன கொடுமை எனைப்படைத்த இறைவனே இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டு வைக்கமாட்டாயா?. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா?.

மனிதனுக்கு ஆசைகள் அதிகம் தான். எனக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஏதுமில்லையே? மனம் துக்கப்பட்டு துக்கப்பட்டு வெம்பிப் போயிருக்கிறது. யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருக்க ஆசைப்படுகிறது.

கடந்த பத்து நாட்களாய் உள்ளேயே புளுங்கிக்கொண்டிருந்த என்னை கட்டாயப்படுத்தி வெளியே சென்று காலர நடந்துவிட்டு வரும்படி என் மகன் அனுப்பினான்.

ஒரே இடத்தில் புலம்பி கொண்டிருப்பதை விட வீதியில் கொஞ்சம் போய் வேடிக்கை பாருங்கள் அப்பா மனம் இலேசாகும் என்று என் மகளும் சொன்னபிறகு தனியே வெளியே வந்தேன்.

சில்லென்று மழைக்காற்று அடித்துக் கொண்டிருந்த்து. மாலை நேரம் வீதிகளில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடக்க நடக்க இறப்பு குறித்தான பயம் மறந்து போனது.

ஒரு பைத்தியக்காரன் வழியில் கிடந்த பேப்பரை பொறுக்கிய படியும் அதை தூக்கி எறிந்தும் யாரையோ திட்டினான். பின்னர் சிரித்தான். அன்று ஏனோ அவன் என்னைக் கவர்ந்தான். அவனையே கவனித்தபடி சாலை ஓரபெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.

குதித்து குதித்து சிரித்தபடி ஓடினான். பின்னாலேயே ஒடிவந்தான். எதையோ கீழே இருந்து எடுப்பது தூக்கி எறிவது, யாரையோ பார்த்து சிரிப்பது என கொண்டாட்டமாய் இருந்த்து அவன் வாழ்க்கை.

அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பைக், குறுக்கே ஓடிவந்த அந்த பைத்தியத்தின் மீது மோதி துக்கி எறிந்தது. பைக்கில் வந்தவன் கீழே விழுந்தான். கூட்டம் கூடிவிட பைக்கை தூக்கி அவனை எழுப்பி விட்டனர். மெதுவாக எழுந்தவன் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்த பைத்தியத்தை நோக்கி கத்தத் தொடங்கினான். சாவு கிராக்கி, எங்கேயோ போய் பஸ்ல கார்ல விழாம என் பைக்தான் கிடைச்சுதா பொறம்போக்கு, என்று வசைபாட என்கவனம் பைத்தியத்தின் மீது சென்றது.

அதுவரை அமைதியாக படுத்திருந்த பைத்தியம் மெதுவாக எழுந்து பைக்கையும், பைக்காரனையும் பார்த்த்து. மெதுவாக சிரித்தது. பின் வாய்விட்டு வேகமாக சிரித்தபடி கீழே கிடந்த பேப்பரை தூக்கி போட்டபடி குதித்து ஓட ஆரம்பித்தது.

ஒரு கணம் அதிர்ந்தேன். மரணத்தை எதிர்நோக்கிய சிரிப்பு. அகங்கராமாய் ஒரு பார்வை. திடீரென உலகம் சுழன்றது போல இருந்த்து எனக்கு. முன்பிருந்த உலகம் இப்போது அப்படியே மாறிவிட்டதோ என்று தோன்றியது.

மரணத்தை மேலே பட்ட குப்பையை தட்டுவது போல தட்டிவிடும் தைரியம். இறப்பு, இருப்பு என்பது பற்றின நிணைவு அகற்றி தைரியம். இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும் தைரியம். என்ன விந்தை இது. எனக்கு முன் போவோர் வருவோரெல்லாம் சிநேகமாய் பார்க்கிறேன். ஒருவரிடமும் எனக்கு போட்டியில்லை. இனி போட்டிபோட்டு அடையும் உச்சநிலை எனக்கு என்ன இருக்கிறது.

பஸ்ஸில் என்னைத்தள்ளி ஏறமுயன்றவனுக்கு ஒதுங்கி வழிவிட்டேன். சில்லறை இல்லையா என்று திட்டிய கண்டக்டரை சிநேகமாக பார்க்கமுடிந்த்து. எந்த வரிசையிலும் பொறுமையாக நிற்க முடிந்த்து. இந்த காத்திருத்தல் ஒவ்வொன்றையும் அனுபவித்தேன். என் குழந்தை, என் பேரன் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாரட்டும் மனம் வந்த்து.

முடிவாகிவிட்டது. இனி புலம்பினாலும் புலம்பாவிட்டாலும் அதுதான் எனும்போது எதுவும் எனதில்லை, எதையும் தூக்கி செல்ல வேண்டியதில்லை எனும் போது இனி நான் எதை காக்க போரட வேண்டும்?. மனதில் ஒரு நிரந்தர அமைதி தோன்றியது.

உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.

அந்த அதிசய நிலை எனக்கு இனி இல்லை.

ஒரு நண்பரை சந்திப்பதைப்போல என் மரணத்தை சந்திக்க, வரிசையில் என் முறைக்காக காத்திருக்கிறேன்.

எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?
Friday, September 17, 2010

விழிப்புணர்வு என்பது ஒரு மந்திரச் சொல்லா?

தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தர் முழக்கம்.

ஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வு தான் என்ன?

ஆதிநாட்களில் மனிதன் குகைகளில் வாழ்ந்தான். விலங்குகளை வேட்டையாடி உண்டான். விலங்குகளின் குகைகளை ஆக்ரமித்தான். விலங்குகள் மனிதனை எதிரியாக பார்த்தன. மனிதனுக்கு ஆபத்து எப்போதுமிருந்தது. குகை பாதுகாப்பனதாக இல்லை. இரவில் விலங்குகள் மனிதனை வேட்டையாடின. பகலிலும் பயம், இடி, மின்னல், மழை, வெய்யில் எதுவும் என்னவென்று தெரியாத காலம். எதன்மூலமும் ஆபத்து வரலாம் என்ற பயம். எனவே எந்த நேரத்திலும் விழிப்புடன் இருந்தான்.

ஒவ்வொன்றாக புரிந்து கொண்டான். இயற்கையை புரிந்தான். விலங்குகளின் தாக்குதல் முறைகளை அறிந்தான். இருந்தாலும் விழிப்புடன் இருந்தான். இப்போது இருப்பவனை அடுத்த நிமிடம் ஏதோ ஒரு விலங்கு அடித்துக் கொன்று விடுகிறது. பயம்.... பயம் காரணமாக வந்த விழிப்புணர்வு.

எச்சரிக்கையாக இருந்தான். அவன் ஒவ்வொரு செல்லும் எச்சரிக்கையாக இருந்தது. கால்கள், கைகள் எல்லாம் உணர்வுடன் இருந்தது. ஒரு இலை பட்டாலும் அது இலையென்று கண் பார்க்கும் முன் மூளை தெரிந்து கொண்டது. ஒவ்வொரு செல்லும் கண்ணாக எல்லாவற்றையும் மூளைக்கு காட்டிக் கொடுத்தது. மூளை யோசித்து செயல்பட்டது. அதிரும் பூமியை, திடீர் வெள்ளத்தை, கொளுத்தும் வெயிலை, புயல் மழையை எல்லாவற்றையும் கவனித்தான். சூரியன், சந்திரன், அமாவாசை, பௌர்ணமி எனப் பிரித்தான். தீயின் பயன் உணர்ந்தான், சக்கரத்தை கண்டறிந்தான். அறிவு வளர்ந்த்து மனிதன் பெருகினான். மற்றவை சிறுகத் தொடங்கின.

காலங்கள் சென்றன...........................................................

இன்று..................................

பதினெட்டு x பதினாறு என்ன என்று கணக்கிட கால்குலேட்டர், கம்ப்யூட்டர், சிம்ப்யூட்டர் என்று பல கருவிகள் வந்து விட்டன. நடக்க வேண்டியதில்லை சைக்கிள் பைக்காகி, பைக் காராகி, கார் விமானமாகி, விமானம் ராக்கெட்டாகி விட்டது. துவைக்க, சமைக்க எல்லாம் கருவிகள். வீடுகள், அலுவலகங்கள், நடைபாதைகள் எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.

அறிவியல் பல மடங்கு முன்னேறி விட்டது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை இன்னும் எங்கெங்கு வேண்டுமோ எல்லா இடங்களிலும் அறிவியல் முன்னேறி விட்டது.

ஆனால் எல்லாம் சரியான திசை நோக்கி செல்கிறதா?

என் வீட்டில் இருக்கும் அறிவியல் சாதனங்கள் டீ.வி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், நான் ஓட்டும் பைக் ஏதேனும் பழதாகிவிட்டால் எனக்கு சரி செய்யத் தெரியாது. அவை எந்த முறையில் இயங்குகின்றன தெரியாது. அதற்கு மின்சாரம் எந்த ஏரியாவிலிருந்து நம் வீட்டிற்கு வருகிறது தெரியாது. நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியாது. வீடு கட்டும் போது பயன்படுத்தும் செங்கல், சிமெண்ட், கம்பி எங்கு தயாரிக்கிறார்கள், அதன் மூலப்பொருள் என்ன, எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியாது. பேனாவில் ஊற்றும் மை எதிலிருந்து தயாரிக்கிறார்கள், தெரியாது. என் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் கேஸ் என்ன, அது எதிலிருந்து தயாரிக்கிறார்கள், அதன் அதிகபட்ச அபாய அளவு என்ன.......தெரியாது. நம் பார்க்கும் தொலைக்காட்சியில் காட்சிகள் எந்த அலைவரிசையில் எங்கிருந்து எப்படி வருகின்றன, அலைவரிசை என்றால் என்ன...... தெரியாது. நாம் துவைக்கும் துணிக்கு, உடலுக்குப்போட பயன்படுத்தும் சோப்பில் என்ன என்ன கெமிக்கல் கலக்கிறார்கள், அதனால் அதிகபட்சம் நம் உடலுக்கு என்ன தீங்கு விளையும்..... தெரியாது.

எவருக்குமே எதுவுமே தெரியாது.................. இருப்பதை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் வெறும் முட்டாள்களாக.....

ஆனால் கேளுங்கள்........ அறிவியலில் மனிதன் கொடிகட்டி பறக்கிறான்.

ஆதி நாட்களில் இருந்த விழிப்புணர்வு இப்போது இல்லவே இல்லை.

ஏன் கால், கை, முகம் எல்லாஇடத்திலும் இருக்கும் செல்கள் செத்தே இருக்கின்றன. பக்கத்தில் ஒருவர் தொட்டால் கூட உணர 5 நிமிடம் ஆகிறது.

எங்கே போயிற்று அந்த விழிப்புணர்வு.

ஒட்டு மொத்தமாய் ஒரு பேரழிவு ஏற்பட்டால் மனித குலம் இருக்குமா? அப்படி இருக்கும் மனிதரிடத்தில் ஏற்கனவே இருந்த அறிவியலைப் பற்றி என்ன பேச முடியும்?.

ஆதி நாட்களில் மனிதன் தான் கற்றுணர்ந்த எல்லாவற்றையும் அனுபவமாய் அடுத்தவருக்கு புரிய வைத்தான்.

இன்று கல்வி என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்டனின் விதிகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கிறோம்.

அறிஞர்கள் மூத்தோர் சொன்ன விழிப்புணர்வு, நம் ஒவ்வொரு செல்லையும் தயாராய் வைத்திருக்கும் விழிப்புணர்வு, ஆதி மனிதனிடம் இருந்த பயம் நீக்கிய விழிப்புணர்வு, நம் முன்னே, பின்னே, மேலே எங்கும் அசையும் ஒவ்வொரு மிக மெல்லிய அசைவையும், சத்தத்தையும் உணரும் விழிப்புணர்வு, நம் மனித இனம் தழைக்க வழிவகுத்த அந்த விழிப்புணர்வு, விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?.

இல்லை இயல்பாக நம்மால் பழக, உணர முடிந்த அந்த விழிப்புணர்வை ஒரு மந்திரச் சொல்லாக மட்டுமே பயன்படுத்துவோமா?.

Tuesday, September 14, 2010

கடவுள்..... மனிதன்......


புரபெஃஷர் ஆஷ் தன் எதிரிலிருக்கும் எல்லாரவை கவலையுடன் பார்த்தார்.

எல்லாரா இந்த அகடமிக்கில் புரபெஃஷரின் உதவியாளராக சேர்ந்திருந்தாள். புரபெஃஷர் எதிர்பார்க்கும் எல்லாத் திறமைகளும் இருந்தாலும் அவருக்கு தன்ஆய்வில் முழுக்க எல்லாராவை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்றகவலை இருந்தது.

அவர் மனதில் இருப்பதை படித்தது போல பேச ஆரம்பித்தாள் எல்லாரா. “சார்நீங்கள் நினைப்பது புரிகிறது, எல்லா ஆய்வுகளுக்கும் என்னைப் போலபெண்ணை பயன்படுத்த முடியுமா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். என்னுடைய முழு ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதும் உண்டு. சிறப்பாகசொல்ல வேண்டுமென்றால் உங்கள் ப்ளாட் நெ.55 ஆய்வில் எனக்கு மிகுந்தஆர்வம் இருக்கிறது. அந்த ப்ளாட்டில் சொந்தமாக சிந்தனை செய்யக்கூடியஉயிரிகளை உருவாக்கி சாதித்து உள்ளீர்கள். அந்த உயிரிகளின் ஆற்றல் மிகசிறப்பானதாக இருக்கிறது. அங்கே சென்று ஆய்வு செய்யவும் நான் தயாராகஉள்ளேன்” என்று அவள் முடிக்கும் போது கண்களில் இருக்கும் அதீதஆர்வத்தை கவனித்தபடி பேசினார் ஆஷ்.

“எல்லாரா நான் கவலைப்படுவதெல்லாம் அந்த உயிரிகளைப்பற்றித்தான். 25 நாட்டிகல் ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் மேம்படுத்தபட்ட ஜீன்கள் மூலம்வளர்ந்த அந்த உயிரிகள் தங்களைத் தாங்களே சுயமாக காத்துக்கொள்ள, உணவுதயாரிக்க என்று பல வகைகளில் முன்னேறி விட்டன. அவைகளின் அந்த அதீதசிந்தனைத்திறன் தங்களை காத்துக்கொள்ள மட்டுமில்லாமல் தங்கள்அழிவிற்கும் காரணமாக அமைந்து விடுமோ என்ற பயம் தான்”.

“அந்த உயிரிகளின் கட்டமைப்பை எப்படி அமைத்துள்ளீர்கள்” என்றாள்எல்லாரா.

“நம் இனத்தைப் போலவே ஆண், பெண் என்ற இரு அமைப்பு, அவற்றின் மூலம்இனப்பெருக்கம் மற்றும் சுயசிந்தனை 450 டெசிபல் அதிகபட்ச அளவாகநிர்ணயிக்கப்பட்ட மூளத் என்ற அமைப்பு அதன் கண்ட்ரோலில் மற்ற உறுப்புகள்என்று அமைக்கப்பட்ட இதன் கட்டமைப்பு அது உருவாகும் விதம் பற்றியஅனைத்து ரகசியங்களும் என் உடலில் இவாஷ் மெமரியில் பதித்துள்ளேன்”. அந்த உயிரிகள் செய்யும் தவறுகள் மூலமாக அவைகள் அழிந்து விடாமல்இருக்க அங்கேயே சென்று அவற்றின் ஜீன்களில் அடிக்கடி மாற்றம் செய்துகொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அழிந்து விடுவோம் என்று தெரிந்தும்மீண்டும் மீண்டும் நிறைய தவறுகள் செய்கின்றன”.

“இந்த உயிரிகளை உருவாக்கியதின் நோக்கம் என்ன சார்”

நம் இனத்தின் மொத்த சிந்தனைத் திறன் அளவு 475000 டெசிபல் அளவு. இந்தஅளவிற்கு மேல் நம்முடைய சிந்தனைத் திறனை மாற்ற முடியவில்லை. நம்மை உருவாக்கிய கடவுள் எவ்வளவு அதீத சக்தி வாய்ந்தவராக இருந்தால்இவ்வளவு விஷயங்களை நாமே செய்தாலும் நம்முடைய சிந்தனைத் திறன்அளவு மட்டும் மாற்ற முடியாத்தாகவே உள்ளது. இந்த திறனை நாம்மேம்படுத்து வேண்டுமென்றால் சிந்தனைத் திறன் அதிகரிப்பது பற்றி அறிவுமேலும் வளர வேண்டும். அதற்காக இந்த உயிரிகளை பயன்படுத்துகிறேன். இந்த உயிரிகளுக்கு கிடைத்த சிந்தனைத்திறன் மூலம் எப்படி தங்களைவளர்த்துக் கொள்கிறது என்று கவனித்து வந்தேன். 10 டெசிபலிலிருந்து 450 டெசிபல் தன் சொந்த முயற்சியால் அதிகரித்துள்ள இந்த உயிரிகள் இன்னும் 15 நாட்டிகல் ஆண்டிற்குள் நம்முடைய அளவிற்கு வளர்ந்து விடும்” என்றார்.

“இந்த உயிரிகளின் வளரும் சிந்தனைத்திறன் நம் இனத்தைப் பாதிக்காதாபுரபெஃஷர்?” என்றாள் கவலையுடன் எல்லாரா.

‘” இல்லை, அதற்குள் இவற்றின் முயற்சிகளை பின்பற்றி சில மாடுலேஷன்கள்செய்து நம் சிந்தனையை பெருக்கிக் கொள்ள முடியும்”

“அதனால் என்ன பயன்?" என்றாள்.

கண்கள் அகல விரிய ஆதீத சந்தோஷத்துடன் எல்லாராவைப் பார்த்தார்புரபெஃஷர் “ நம்மை உருவாக்கி நம்மை தன் சொந்த விருப்பு வெறுப்பக்களைநம் மேல் திணித்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்தக் கடவுளை நெருங்கிவிடுவோம். அப்புறம் நாமும் படைபாளிகள் நமக்கென்று ஒரு தனிபிரபஞ்சத்தை படைக்க உருவாக்க அழிக்க என்று தனி சாம்ராஜ்யத்தையேபடைப்போம்.

“கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது புரபெஃஷர், இது உங்களுக்கு இருக்கும்பேராசையோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றாள்.

“பயப்படாதே பெண்ணே இது எல்லாம் நடக்கும், எனக்கு என்ன பயமென்றால்இப்போது பிளாட் நெ.55ல் காப்ட் வாயுவை அந்த உயிரிகள் அதிகம் உற்பத்திசெய்து கொண்டிருக்கின்றன. இது அந்த பிளாட்டையே நாசம் செய்து விடும், நான் மறைமுகமாக பல எச்சரிக்கைகள் அந்த உயிரிகளுக்கு உணர்த்தியும்அவை கண்டுகொள்ளாமல் தங்கள் அழிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன”. என்றார் புரபெஃஷர்

“இந்த வாயுவை நீங்கள் கட்டுபடுத்த முடியாதா?” எல்லாரா கேட்டாள்.

“நான் கட்டுபடுத்தும் அளவைத் தாண்டி அவை சென்று விட்டன. இப்போதுஎன்னால் செய்ய முடிவது அதன் ஜீன்களில் அந்த வாயுவை ஏற்றுக்கொள்ளும்வகையில் மாற்றம் செய்வது தான். ஆனால் இருக்கும் எல்லா உயிரிகளிளும்அந்த மாற்றத்தைச் செய்ய எனக்கும் 5 நாட்டிகள் ஆண்டுகள் ஆகும். இதில்உன்னுடைய பங்கு அந்த காலம் வரை அந்த வாயுவை ஒரு கட்டிற்குள் வைத்துஇருக்க வேண்டியது, அது எப்படி என்று உனக்கு பின்னால் விளக்குகிறேன். இதுதான் எனக்கு நீ செய்யும் முதல் வேலை” என்று முடித்தார் புரபெஃஷர்.

“மிக சந்தோஷம் சார் இந்த பிரபஞ்ச ரகசியத்தின் ஒரு பகுதியை அறியும்சோதனையில் ஒரு துளியில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதில் எனக்குபெருமைதான். ஆனால் பிளாட் நெ,55ற்கு நாம் இந்த உடலுடன் செல்லமுடியுமா? அப்படிச் சென்றால் நம்மை அடையாளப்படுத்தி விடமாட்டார்களா? எல்லாரா வீசினாள் ஒரு சிக்கலான கேள்வியை.

புரபெஃஷர் புன்னகைத்தார். “கவலைப்படாதே எல்லாரா அங்கே இந்தஉடலோடு சென்றால் நாம் எரிந்து விடுவோம். அந்த மாதிரி ஒரு அமைப்பைஉருவாக்கி வைத்திருக்கிறேன். நம் உடலை மிக மிக சுருக்கி ஒரு நுண்ணியஉருவமாகத்தான் அங்கே செல்ல முடியும். இந்த ரகசியத்தை நம் எதிரிகள் சிலபேர் தெரிந்து கொண்டு அவர்களும் இதே முறையில் அந்த பிளாட்டிற்கு சென்றுஅவற்றை அழிக்கப் பார்த்தனர். ஆனால் முதலில் தடுமாறிய அழிந்து போனஅந்த உயிரிகள் பின்னர் சுதாகரித்துக் கொண்டு நம்மவர்களையே அழிக்கும்திறன்களை பெற்று விட்டன.” என்றார் புரபெஃஷர்.

“இதே முறையில் நம்மையும் அழித்து விட்டால் என்ன செய்வது” என்றாள்எல்லாரா கவலையுடன்.

“கவலைப்படாதே எல்லாரா இப்போது இருக்கும் திறனை வைத்து நம்மைஅழிக்க முடியாதபடி சில மாற்றங்களை நம் உடலில் செய்து விடலாம். அதேபோல் அந்த ப்ளாட்டில் நம்மை போன்ற உருவத்தில் நம் எதிரிகள் கூடஇருக்கலாம் அதனால் நம் உடலில் x என்ற குறியீடு இருக்குமாறுஅமைக்கப்போகிறேன். அதை வைத்து நம்மை நாம் அடையாளம் காணமுடியும்” என்று முடித்தார் புரபெஃஷர்.

“எப்போது கிளம்புகிறோம் புரபெஃஷர்” என்றாள் எல்லாரா.

“இன்னும் 5 நாட்களில் அதற்கான பயிற்சிகள் எல்லாம் உனக்கு முடிந்த பின்னர்ஆம் நாள் காலையில் கிளம்புகிறோம்” . இப்போது நான் கிளம்புகிறேன்எல்லாரா. உன்னுடைய எல்லா சந்தேகத்தையும் இந்த 5 நாட்களில்தெளிவுபடுத்திக் கொள்ளலாம், இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் இந்தஉயிர்களின் உருவாக்கம் பற்றிய ரகசியங்களை உனக்கு கற்றுத் தருவேன்அதுவரை அந்த ரகசியங்கள் என் உடலில் உள்ள இவாஷ் மெமரியிலேயேஇருக்கும்” என்று கூறியபடி அறையை விட்டு வெளியேறினார் புரபெஃஷர்.

ஆறாம் நாள் காலை மிக நுண்ணிய உயிரியாக ப்ளாட் நெ,55வை நோக்கிவானில் பறந்தபடி இருந்த புரபெஷர் ஆஷ் எல்லாரவிடம் சொன்னார் “ஒருஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த பிளாட் உயிரிகள் தங்களுக்குள்பெயர் வைத்து அழைத்துக் கொண்டு இருக்கின்றன” .
விழி விரிய பார்த்த எல்லாரா “அப்படியா! ரொம்ப ஆச்சரியமாக உள்ளது, அப்படியென்றால் இந்த சிந்தனை மிக்க உயிரிகள் தங்களுக்கு என்ன பெயர்வைத்துக்கொண்டுள்ளன புரபெஷர்” என்றாள்.

“மனிதர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்றார் ஒற்றை வரியில்

“அவைகள் நமக்கு என்ன பெயர் வைத்துள்ளன”, என்று கேள்வியைதொடர்ந்தாள்.

“வைரஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்றார்.

அவைகள் அந்த பிளாட் நெ.55க்கு என்ன பெயர் வைத்துள்ளன என்றுவினவினாள்.

“பூமி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்றார் பறந்தபடி.

••••••
டிஸ்கி: 1) உலகின் அனைத்து பேப்பர்களிலும் அன்று காலை மிக பரபரப்பானசெய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ஜீன்களையே தாக்கும் மிகக்கொடியவைரஸ் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது மனித குல வரலாற்றின் மிகப்பெரும்சாதனையாக கருதப்படுகிறது. அதன் உடலில் X என்ற அடையாளம்காணப்பட்டது.

2) உங்களைப்படைத்த கடவுளையே கொன்றுவிட்டு எந்தக் கடவுளை தேடிக்கொண்டிருக்கீறீர்கள் மனிதர்களே, இனி உங்களை காப்பாற்ற யார் வருவார்என்று வருத்தத்துடன் எல்லாரா பிளாட் நெ.55 விட்டு தன்னுலகம் நோக்கிகிளம்பினாள்.

3) மேலும் 15 நாட்டிகள் ஆண்டுகளுக்குப் பிறகு படிமமாயிருந்த x அடையாளமிட்டிருந்த வைரஸ்ஸின் மெமரியை ஆராய்ந்த ஒரு விஞ்ஞானிஅலறினார் ”நாம் ஒரு கருனை மிக்க கடவுளால் உருவாக்கப்பட்டுள்ளோம்என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாமெல்லம் வெறும்சோதனை எலிகளாகத்தான் இருந்தோமா??????????????????????”

•••••••

Friday, September 3, 2010

யார் யாரோ வந்தார்கள்.....யார் யாரோ....யார் யாரோ வந்தார்கள்

யார் யாரோ போனார்கள்

யார் யாரோ....

யார் யாரோ....


உலகே எதிர்த்தாலும்

உன்னுடனே வருவேனென்று

ஊர்மெச்ச வாழ்ந்தவன்

பாதியிலே விட்டுவிட்டு

நடுவீட்டில் கிடக்கின்றான்


பேர் சொல்ல ஒரு பிள்ளை

ஊர் சிறக்க ஒரு பெண்ணென்று

வாயாடிச் சென்றவனை

கண்மூடி உடல்போர்த்தி

பாயோடு போட்டார்கள்

பார்ப்போரே கேளுங்களேன்


வேலைக்குப் போகாத

வெறும் மனைவி போதுமென்று

வீட்டிலேயே எனை விட்டு

காட்டுக்குப் போகிறானே

கேட்பாரே இல்லையா


நீரெடுக்கப் போனாலே

கைகால்கள் வலிக்குமென்று

தைலமிட்டு சீராட்டி........


தலைகுளித்து வந்தாளோ

சளிபிடித்து தொலைக்குமென்று

புகைபோட்டு தாலட்டி....


நான் உறங்கி அவன் பார்த்த

காலம் போய்

அவன் உறங்கி நான்பார்க்க

வைத்தானே.......


பெற்றோர் உற்றார் வராதவீடு

வெறும் வீடென்று சொல்வானே

எழுந்து பார்க்கச்சொல்லுங்களேன்

வீடே நிரம்பி இங்கே

யார் யாரோ வருகிறார்கள்

யார் யாரோ போகிறார்கள்

யார் யாரோ.....

யார் யாரோ.....


கால்தடுக்கி நின்றாளே

மனம்பதறிப் போவானே

உயிர் பதறி நிற்கிறேன்

உணர்வில்லாமல் உறங்குகிறானே


ராணியென்ற ஒருத்தியை

கதைகளில்தான் கேட்டோம்

இப்போதுதான் பார்க்கிறோம்

நேரிலென்று.......

பலரை சொல்ல வைத்துவிட்டு

பார்க்காமலே உறங்குகிறான்

பார்த்தோரே கேளுங்களேன்


பெண்ணெத்தனை பிறந்தாலும்

நீதான் என்முதல் பெண்ணென்று

பெற்றோரும் காட்டாத

பேரின்பம் தந்தானே

ஒருபெண்ணே போதுமென்று

ஏன் விட்டு சென்றானோ


யார் யாரோ வருவார்கள்

யார் யாரோ போவார்கள்

நீயில்லா இவ்வீட்டில்

நிச்சயமாய் நானில்லை

உன்னுடனே வருகிறேன்

எப்போதும் உன்வீட்டின்

ராணி நான்.