Wednesday, December 1, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 3.......

நரேன் உன் வார்த்தைகள் மிகக் கடுமையாக உள்ளன. உனக்கு யார் மீது கோபம்?

தவறிருந்தால் மன்னியுங்கள் சாமி. எனக்கு யார்மீது கோபம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து என் ஆத்திரத்தை அப்படியே கொட்டிவிட அனுமதியுங்கள். பிழையிருந்தால் பொறுத்துக்கொள்ளவும் சாமி.

சரி கேள் நரேன். கடமையைச் சரிவரச் செய்யும் எல்லா ஆன்மாக்களுக்குமே அதன் பலன் உண்டு. நீ கடவுளை நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அவரவர் வினைகளின் படி அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியத்தை பெறுவர் என்று நான் கற்ற வேதங்கள் சொல்கின்றன.

அப்புறம் நீங்கள் ஏன் அந்த இல்லறவாசியை உங்கள் ஆன்மிக உரைகளுக்கு இழுக்கிறீர்கள். விட்டு விடுங்களேன் உங்கள் போதனைகளை. அவன் பாட்டுக்கு அவன் பலனை அனுபவித்து விட்டு போகிறான்?.

ஹா அது அப்படி இல்லை நரேன். நான் கற்ற வேதங்கள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்னதான் கடமைகளைச் செய்தாலும் நம்மை படைத்த கடவுள் நமக்கு வாழும் வழிவகையும் செய்து இப்புவியில் நமக்கு துணையாக இருக்க பல உயிர்கள், தாவரங்கள் என பலவற்றை படைத்து நமக்கு பக்க பலமாக இருக்கச் செய்தவனுக்கு நம் ஒரு நன்றியாவது செலுத்த வேண்டாமா?.

சரி இல்லறவாசியை விடுங்கள் சாமி ஒரு துறவி எதை நோக்கிச்செல்கிறான். அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன?

ஓரு துறவி இறைநிலை நோக்கியே பயணிக்கிறான். அவன் அதற்காக பல யோகங்கள், தியானங்கள் என்று சதா இறையையே நினைத்துப் பயணிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் தன்னுள்ளே கலந்து தன்னையே இறையாக கானவும்தான்என்ற எதுவும் இல்லை என உணரவும் செய்கிறான்.

ஞானமடைதல் என்கிறார்களே அது இதுதானா சாமி?

இருக்கலாம். நான் அதைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்க முடியவில்லை.

சிலர் நான் ஞானமடைந்து விட்டேன் என்று மக்களுக்கு போதனை செய்யக் கிளம்பி விடுகிறார்களே சாமி இது சரியா? .

ஹா என்னை விடமாட்டாய் போலிருக்கிறது?. எனக்குத் தெரிந்து ஒரு துறவி தன் ஞானமடைதலுக்கு பின்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு பின் சிந்தனைகளுக்கு வேலை இல்லை. சிந்தனையை நிறுத்திய பிறகு தான் அனைத்துமே சித்தியாகும்.


சாமி புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள், இந்து மதத்தில் நிறைய ஞானிகள் என்று இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தோன்றி இந்த உலக மக்களுக்கு எத்தனையோ விதமான நல்ல கருத்துக்களைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள்.

உனக்கு அதிலென்ன சந்தேகம்?.

எல்லா ஞானிகளுமே இறைவனைப்பற்றி ஒருமித்த கருத்து ஏதும் சொல்லவில்லை. எல்லாருமே அவரவர் காலங்களில் அந்தந்த நிலையில் இருந்தே தங்கள் கருத்துக்களை சொல்லயுள்ளனர். அவர்கள் எல்லோரையும் தவறு சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும்.....


என்றாலும்?!!!!!!!!!!!!!!!!!!!!!!.....

நாம் இன்னும் கடவுள் என்ற த்த்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று சந்தேகம் வருகிறது?


ஹா நரேன் மிக சமார்த்தியசாலி நீ கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று என்னிடமே கேட்கிறாய்?. இல்லையா ஹா..............


நரேன் நீ மற்றவர்களைப் போல அல்ல. உன்னுடைய கேள்விகள் அடுத்த தலைமுறைக்கு நிறைய செய்திகளை சொல்ல வேண்டும். நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த மனிதர்களிலிருந்தோ, இப்போது வாழும் மனிதர்களிடமிருந்தோ, என்னிடமிருந்தோ எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது இனி ஏதுமில்லை. நீ உனக்குள் தேடு. உன்னிடமே எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும். நீ உன்னையே கேள். இங்கே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள எல்லாருக்கும் சம வாய்ப்புகள் தான். ஒரு துறவிக்கு ஒரு ஞானிக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளனவோ அதுவே எல்லா மனிதர்களுக்கும். உன் கேள்வி என்கிற பூட்டிற்கு நீயே தான் சாவி. உன்னையே அதற்குள் நுழைத்து தெரிந்து கொள். இருக்கும் போதே உணர்ந்து கொள் அப்போது தான் இல்லாமல் போவதில் அர்த்தம் இருக்கும்.

கடவுள் இருக்கிறாரா?, இல்லையா? அவர் வியாபாரியா?, பஜனை கோஷ்டிகளின் தலைவனா? எல்லாம உனக்கே தெரியும் வகையில் தான் இங்கே எல்லாமே இருக்கிறது. நானும் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதால் காலத்தின் கட்டாயம் இருந்தால் மீண்டும் சந்திப்போம். வருகிறேன்.

கிளம்பி விட்டார்.

9 comments:

rajasundararajan said...

என்ன, இப்படி எஸ்கேப் ஆகிவிட்டார்!

மரம் செடிகொடிகளுக்கு மறுபிறவி உண்டா? அவற்றின் வாசனை (ப்ராரப்த கர்மா) எதுவழி எஞ்சுகிறது? ஆன்மாவிற் கறைபடியாது என்கிறார்களே, என்றால் கர்ம எச்சத்தின் இடவெளி அல்லது காலவெளி எது? அந்த storage உடம்புக்கு உள்ளிலா வெளியிலா?

உனக்குள் தேடு... இது மூளையில்லாத உயிர்களுக்குமா? ஒரு குருவின் அவசியம் அதுகளுக்கும் உண்டா?

என் அறியாமை இருள் அகற்றலாம் என நம்பி இருந்தேன். இனி, வழி வேறு உண்டா?

அகல்விளக்கு said...

அதற்குள்ளாகவே கிளம்பிவிட்டாரே....

இன்னும் எதிர்பார்த்தேன் அண்ணா...

Chitra said...

நாம் இன்னும் கடவுள் என்ற த்த்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று சந்தேகம் வருகிறது?


....கேள்விகளில் இருக்கும் தெளிவையும் குறும்பையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஹேமா said...

என்ன....ஒண்ணுமே முடிவாச் சொல்லலியே !

VELU.G said...

அன்பு நண்பர் ராஜாசுந்தர்ராஜனுக்கு

இனி வேறுவழி இல்லை போல்தான் தெரிகிறது. இனி அவர் எப்போது வருவார் என்று தெரியவில்லை.

எதற்கும் நாமும் நமக்குள் தேடிப்பார்த்தால் என்ன?

ஏன் அடுத்தவரையே நம்பிக்கொண்டிருக்க வேண்டும்

VELU.G said...

அன்பு ராஜாவிற்கு

அவருக்கு என்ன அவசர வேலையோ தெரியவில்லை. கிளம்பி விட்டார்.

VELU.G said...

மிக்க நன்றி சித்ரா

அன்பு சகோதரி ஹேமாவிற்கு முடிவாக எதையும் சொல்லும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை பித்தன் said...

//நீ உனக்குள் தேடு. உன்னிடமே எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும். நீ உன்னையே கேள்.//
உண்மைதான்.ஆனால் அப்பாதை மிக நீளமல்லவா?
//இருக்கும் போதே உணர்ந்து கொள் அப்போது தான் இல்லாமல் போவதில் அர்த்தம் இருக்கும்//
துறவில் கூட அதுதான் முக்கியம்.எல்லப் பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.
’ வேண்டின் உண்டாகத் துறக்க’ என்கிறது குறள்.
இக்கடலில் மூழ்கி மேலும் சில முத்துக்களை எடுத்து வாருங்கள் நண்பரே!

VELU.G said...

மிக்க நன்றி சென்னை பித்தன்