Thursday, February 24, 2011

தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே....


அம்மா என்பது வார்த்தையில்லை. அது ஒரு உணர்வு. அது எல்லாவுயிர்க்குமான சந்தோஷம், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இன்னும் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்.

என் அம்மா தன் தாய் தந்தைக்கு பிறந்த 5 குழந்தைகளில் இரண்டாவது மகள். எல்லோருக்கும் பிறப்பு நன்றாக அமைவதே ஒரு வரம் தான்.

ஆனால் என் தாயும் அவரின் அடுத்த சகோதரனுக்கும் பிறவியிலேயே கண்பார்வை குறைபாட்டுடன் பிறந்தனர். கண்ணிற்கும் மூளைக்கும் இடையே ஓடும் நரம்பு உறுதியில்லாததால் ரத்தம் சரியாக ஓடுவதில்லை. அதனால் விழிகளை ஆட்டிக்கொண்டே இருந்தால் தான் ஓரளவு நன்றாக கண்பார்வை தெரியும்.

குடும்ப வறுமையின் காரணமாக எல்லோரும் உழைக்க வேண்டியிருந்தது. என் தாய் வெளியே செல்ல முடியாததால் வீட்டு வேலைகள் அனைத்தும் அவரின் தலையில் தான். எல்லாவற்றையும் திறம்பட சமாளித்தார். கூடவே மூன்றாம் வகுப்பு வரையோ ஏதோ படித்தார்.


அந்த காலத்திலேயே கிட்டத்தட்ட எல்லா மருத்துவரிடமும் என் தாத்தா பரிசோதித்த சரிசெய்ய முடியவில்லை.


பருவத்தில் திருமணம் மிக பிரச்சனையானது. நல்ல வரன் அமையவில்லை. அப்போது என் அப்பா தாய் தந்தையை இழந்தவர். ஈரோட்டில் ஒரு திரையரங்கில் டிக்கெட் கிழித்தபடி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தவர். அம்மாவிற்கு தூரத்து உறவினர். எனவே அவரின் உறவினரிடம் பேசி திருமணம் முடித்தனர்.


திருமணம் முடிந்தும் ஒரு நாலைந்து வருடங்கள் தாத்தா வீட்டிலேயே தொழிலுக்கு உதவி செய்து கொண்டு காலத்தை தள்ளினர்.


கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தில் வளர்ந்த என் தாத்தா என் தாய் தந்தைக்கு தனியாக வீடு கட்டி அதில் ஒரு மளிகைக் கடையும் வைத்துக் கொடுத்தார்.


சஷ்டி விரதம் இருந்து ஏழு வருடங்கள் கழித்து நானும் எனக்கு பிறகு 6 வருடங்கள் கழித்து என் தம்பியும் பிறந்தோம்.


நன்றாக ஓடின வாழ்க்கையில் என் தந்தையின் தொழிலில் தொய்வு ஏற்பட நான் வேலை பார்க்க வர சரியாக இருந்த்து. அதிலிருந்து என் தந்தை தொழில் செய்வதையே விட்டு சும்மா இருக்க ஆரம்பித்தார்.


மீண்டும் பொருளாதாரப் பிரச்சனைகள் தலை தூக்கியது. என் தாயின் நகைகள் அனைத்தையும் விற்றார். வீட்டில் எந்த பொருளும் இல்லை என்ற அளவிற்கு எல்லாவற்றையும் விற்றார். எனக்கும் பெரிதாக ஒன்றும் வருமானம் இல்லாத நிலை. நிறைய தொந்தரவுகளுக்கு இடையே என் தாயின் கண்பார்வை குறைவு அதிகரித்தது.


என் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் பதினொன்றாம் பனிரென்டாம் வகுப்புகள். காலையில் 4 மணிக்கு எழுந்து இருட்டில் தடுமாறியபடி ஸ்டவ்வில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு 7 மணிக்குள் கொண்டு போக சாப்பிட எல்லாம் தயார் செய்து விடுவார். எனக்கு 7,30 க்கு பஸ். ஒருநாள் இரண்டு நாட்கள் இல்லை. இது இரண்டு வருடங்களாக செய்தார் துளி சங்கடமில்லாமல்.


ஒருமுறை என் தந்தைக்கும் தாய்க்கும் ஒரு சின்ன பிரச்சனை. இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் பூரி சுட வைத்திருந்த எண்ணெய் என் அம்மாவின் வயிற்றில் கொட்டி வயிறெங்கும் புண். தனியாக மருத்துவரிடம் செல்ல முடியாமலும் அப்பாவிடம் பேசமுடியாமலும் அதை அப்படியே விட்டு விட்டார். இரண்டு நாள் கழித்து தான் யத்தோசையாக அதைப்பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கும் சரியான விவரம் இல்லாத வயது. எண்ணை வைத்தால் சரியாகி விடுமென்று என்னிடம் கூறிவிட்டார். பின்னர் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.


ஒருநாள் சிறுக சிறுக தனியாக சேர்த்து வைத்திருந்த பணத்தை என்னிடம் கொடுத்து எண்ணச் சொன்னார். கண் சரியாக தெரியாத என் தாயிடம் ஒரு துளி கூட ஏமாற்றக் கூடாது என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து அம்மாவிடம் சொல்லி அப்படியே கொடுத்தேன்.


இதை வைத்து ஒரு கேஸ் ஸ்டவ் வாங்கிக் கொள்ளாலம்டா என்னால ஸ்டவ்வை சரி பண்ணி பண்ணி சமைக்க முடியவில்லை என்று அவர் பரிதாபமாக சொல்லும் போது எனக்கு வலித்த்து. அப்போதெல்லாம் கேஸ் வாங்க எழுதி வைக்க வேண்டும். பின்னர் ஒரு வருடம் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் காத்திருக்கவில்லை. உடனே தட்கால் கோட்டாவில் Rs.10000 கட்டி வாங்கிக் கொடுத்தேன். எனக்கு வேலை செய்யும் இடத்தில் பணம் கொடுத்தார்கள் என்று என் தந்தையிடம் கூறி அந்த பணத்தை என் சம்பளத்தில் பிடித்து என் தாயிடமே திருப்பி கொடுத்தேன்.


ஒரு துளி நகை கூட இல்லாமல் இருந்த என் அம்மாவிற்கு ஒரு செயினாவது செய்ய வேண்டுமென்று ஆசை. திரும்பவும் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தார். நான்கு பவுனில் ஒரு நகை செய்து தந்தேன். அதை அதிகபட்சம் ஒரு இரண்டு மாதங்கள் போட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். என் தந்தைக்கு எப்படி உறுத்தியதோ தெரியவில்லை, வாடகைக்கு விட்டிருந்த கடைக்கு பந்தல் போடவேண்டும் என்று நகையை விற்று பந்தல் போட்டு விட்டார்.


எத்தனை பிரச்சனை இருந்தாலும் வந்தவரை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். என் வீட்டிற்கு வந்து குறைந்த பட்சம் ஒரு காப்பி குடிக்காமல் நீங்கள் வெளியேற முடியாது. இன்று வந்தால், நீங்கள் வாங்கிக் கொடுத்தாலும் என்னால் குடிக்க முடியாது.


எனக்கு திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஒரே வீட்டில் இருந்தேன். பின்னர் சில பிரச்சனைகளுக்காக தனிக்குடித்தனம் போக வேண்டி வந்த்போது என் தாய் தந்தையின் சம்மதத்துடன் அருகிலேயே குடியேறினேன். அதற்கு பிறகு மூன்று வருடங்கள் வரை அதே ஊரில் இருந்து பார்த்துக் கொண்டேன்.


இடையில் சிக்கன்குனியா காய்ச்சலால் அம்மாவிற்கு கொஞ்சம் இருந்த பார்வையும் முழுதாய் பறிபோனது.


மேலும் சில காரணங்களுக்காக ஈரோட்டில் குடியேற நேர்ந்த போது என் தம்பியின் திருமணமும் நடந்த்து. என் தம்பி சில பொருளாதாரப்பிரச்சனைகளால் திருப்பூர் செல்ல நேர்ந்த போது தான் என் அம்மா தன் தனிமை வாழ்க்கையை உணர்ந்தார்.


என் அப்பாவும் அடிக்கடி வெளியே சென்று விட அந்த வீட்டிற்குள்ளேயே வெளியே வர முடியாமல் காலந்தள்ள நேரிட்டது. என்னிடமிருந்து தினமும் மூன்று நான்கு முறை செல்லும் போன் அழைப்புகள் கூட அவரை சமாதானப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.


சென்ற ஜனவரியில்(2010) ஆரம்பித்தது ஒரு பிரச்சனை. வாயில் உமிழ்நீர் கெட்டியாக வருகிறது அல்லது கசப்பாக இருக்கிறது என்று. உமிழ்நீரை விழுங்க முடியாமல் தடுமாறினார். பல் சொத்தை இருப்பதால் இருக்கலாம் என்று பல் பிடுங்கினோம். மௌத் வாஷர் லிக்கிவுட் உபயோகித்தும் போகவில்லை. இது சம்பந்தமாக நிறைய பல் டாக்டரை சந்தித்தோம். பாலசி மூலமாக நம் பதிவர் ரோஹிணி சிவா மேடமிடம் ஆலோசனைகளைப் பெற்றேன்.


ஒரு கட்டத்தில் பல் டாக்டரை விடுத்து ENT டாக்டரிடம் செல்ல ஆரம்பித்தோம். அது சம்பந்தமாக ஸ்கேன் செய்து பார்த்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்டர்நெட் மூலமாக pathology டாக்டர் ஈரோட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து அவரிடமும் சென்றோம்.


நடுவில் ஹோமியாபதியில் நிவாரணம் கிடைக்குமா என்று அதிலும் தேடினோம், சிலசமயம் எனக்கு சந்தேகம் இவர்கள் உமிழ்நீர் அப்படி வருவதாக நினைத்துக் கொள்வார்களோ என்று? ஒரு சைக்காலஜி டாக்டரையும் பார்த்தேன்.


பிரச்சனை சரியாகவில்லை.


நடுவில் ஒரு மருத்துவர் யூரியா டெஸ்ட் செய்து கிட்னி பிராப்ளம் இருக்கும் செக் செய்ய வேண்டும் என்றார். ஆனால் அம்மா அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் வாய் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றார்.


நானும் அதை சரியாக கவனிக்காமல் மறுபடியும் டாக்டர்களிடம் படையெடுத்தோம். கோவையிலும் சென்று பார்த்தோம். அதில் ஒரு டாக்டர் முதலில் நீங்கள் கிட்னி மற்றும் கல்லீரலை செக் செய்யவேண்டும் பெட்டில் உடனே அட்மிட் ஆகுங்கள் என்றவுடன் நிலமையின் விபரீதம் உரைத்த்து.


கிட்னி டாக்டர் ஒருவரிடம் கோவையில் சென்றோம். அவர் டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றார். மீண்டும் ஈரோடு வந்து ஈரோட்டில் பிரபலமான கிட்னி டாக்டரை அனுகினோம். அவர் இப்போது டயாலிஸிஸ் வேண்டாம். ஆனால் உணவு நீர் கட்டுப்பாட்டுடன் ரத்தம் ஊற ஊசியை போட்டுக்கொண்டே வாருங்கள் என்றார். உணவு சம்பந்தமான ஆலோசனைகளை நம் பதிவர் தேவன் மாயம் அவர்களிடம் பெற்றேன். மூன்று மாதங்களாக பல ஊசிகள் போட்டும் ரத்தம் ஊறாமல் குறைந்து கொண்டே வந்த்து. டாக்டர் யாராவது ஒரு HEMATOLOGY மருத்துவரை சந்திக்கும் படி பரிந்துரைத்து விட்டார்.


HEMATOLOGY, ONCOLOGY, RADIOTHERAPHY CUM GENERAL MEDICINE முறையில் கோவையில் சிறப்பான மருத்துவர் ஒருவரை அனுகினோம். அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து பிளட் 5 யூனிட் ரத்தம் கொடுத்தார். கொஞ்சம் நிலமை சீரானவுடன் போய் ஒரு மாதம் கழித்து வரும்படி கூறி விட்டார்.


அம்மாவிற்கு உடலில் என்ன பிரச்சனை என்று கேட்டபோது cancer சம்பந்தமாக எதுவும் இல்லை ஆனால் சில பிரச்சனைகள், எலும்பு மஜ்ஜையிலும சில பிரச்சனைகள் என்றார்.


வீட்டிற்கு வந்து சரியாக 20 நாட்கள் மயக்கமடைந்து விட்டார். மறுபடியும் தூக்கிக் கொண்டு கோவை அதே மருத்துவரிடம் சென்றோம். இப்போது பிளட் மறுபடியும் குறைந்திருந்தது. மயக்கம் தெளிந்து சுயநிணைவு வந்தாலும் யூரின், மலம் போவதில்லை, INTAKE மிக குறைவாக நீர்ம்மாகத் தான் இருந்த்து.


அம்மா நன்றாக பேசினார்கள். டாக்டர் முடியாது கூட்டிச் செல்லுங்கள் என்றார்.


அம்மாவை மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்த போது தாள முடியவில்லை, கண்களில் நீர் மாளாமல் வந்து கொண்டே இருந்த்து.


சிகிச்சையளித்த டாக்டரின் மீதே சந்தேகம் வந்த்து. மருத்துவரின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு கோவையில் தெரிந்த டாக்டரிடம் எல்லோம் ஓடினோம் நானும் என் தம்பியும். முடியவில்லை.


சனிக்கிழமை (12,02,11) அன்று அம்மாவிடம் பேசினேன் முதல் முதலாக ஒரு பொய். கண் தெரியாத அம்மாவை ஏமாற்றக் கூடாது என்று இதுநாள் வரையில் கட்டிக் காத்து வந்த்தையெல்லாம் உடைத்தெறிந்தேன்.


அவர்களுக்கு நன்றாக வாழ ஆசை. சின்ன வயதிலிருந்து அவர்கள் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காமல் எல்லா ஆசைகளையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தவர். இப்போது தான் பிறந்திருக்கும் என் ஆண் குழந்தையையும் தம்பியின் பெண் குழந்தையும் கொஞ்ச வேண்டும் என்று நிறைய ஆசை. கொஞ்ச நாள் போனால் சரியாகிவிடும். ஏதோ கெட்ட நேரம் அது விலகினால் சரியாகிவிடும் என்று மனதில் எத்தனையோ ஆசைகளை பூட்டி வைத்திருந்தவருக்கு அந்த நல்ல நாள் வராமலே போய் விடும் என்று தெரியவில்லை.


ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்க நான் தயாராக இல்லை. முதன் முதலாக அம்மாவிடம் பொய் சொன்னேன். அம்மா கிட்னி ப்ராப்ளம் தான் மட்டும் தான் இப்போதைய பிரச்சனை, அது ஈரோட்டிற்கு சென்றே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார் அதனால் ஈரோடு செல்ல்லாம் என்று சொன்னேன். நான் சொன்னதை அப்படியே நம்பும் என் தாயும் அதற்கு ‘சரி’ என்றார்கள்.


உடனே வீட்டிற்கு சென்றால் அம்மாவின் நிலை கண்டு ஊரில் வருபவர்களெல்லாம் கண்ணீர் விட்டு அழுதால், தான் மரணம் அடையப்போகிறோம் என்பதை உணர்ந்து நொந்து விடுவார்கள். அதனால் ஈரோட்டில் ஓரிடத்தில் (ஒரு ஆஸ்பிட்டல் மாதிரி) கொண்டு வந்து சேர்த்தோம். அங்கே சரியாக மூன்று நாட்கள் இரவு பகல் என்று பாராமல் வலியிலும் வேதனையிலும் ஐயோ அம்மா என்று கதறினார்கள்.


ஐயோ அம்மா என்று சொல்லாதே அம்மா, நீ விரதமிருந்து வணங்கும் முருகனை நிணைத்து முருகா முருகா என் வேதனைகளைக் குறை என்று சொல் அம்மா என்றேன்.அரை மயக்க நிலையிலும், நீ என்ன சொல்கிறாயோ அப்படியே சொல்கிறேன் என்று முருகா முருகா என்று கூவினார்கள்.


ஆயிற்று அந்த நாளும் வந்தது. செவ்வாய்கிழமை(15,02,11) காலை தன் முழநிணைவை இழந்தார்கள். ஆனால் உயிர் பிரியவில்லை. மணி 8, 9, 10, 11, 12 ஆகிக்கொண்டே இருந்த்து. மூச்சு வந்து கொண்டேதான் இருந்தது வலியின் வேதனையான அரற்றலோடு. மூன்று மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்து வீட்டை அடையும் போது மணி 4.00. வீட்டை அடைந்தவுடன் வேதனை முனகல்கள் குறைந்தது. சரியாக ஒரு மணிநேரம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்த போது மணி 5.00.


மனதில் தாங்க முடியாது வலி. என்னையே முழுதாக நம்பி இருந்த என் தாயை, தன் மகன் எப்படியும் பிரச்சனைகளை சரி செய்து விடுவான் என்று ஒரு கடவுளைப் போல என்னை நம்பிய ஒரு குருட்டு அன்னையை, உன் கண்களைப்போல உன் எண்ணங்களும் குருடம்மா என்று நானே ஏமாற்றி விட்டேன்.


இன்னமும் சரியாக செய்திருக்கலாமே என்று மனம் என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறது. நானே நிறைய தவறு செய்திருக்கிறேன். அவர்கள் தனிமையை குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனித்து பார்த்து இருந்திருக்கலாம். கடைசியாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன்.


எந்த தவறுக்கும் நான் என் அன்னையிடம் மன்னிப்புக் கோரப்போவதில்லை அதற்கான தண்டனையும்
பெறத் தயாராகவே இருக்கிறேன்.

என் அன்னையின் ஆன்மா சாந்தியடைய மனதார விரும்புகிறேன்.

45 comments:

சங்கவி said...

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Kathir said...

கலங்கடிச்சிட்டீங்க வேலு!

எல்லாவற்றையும் நேர்த்தியாக, சரியாக மனிதனாய் செய்துவிட முடிவதில்லை. சிலவற்றை மனிதனால் கட்டுப்படுத்தவோ, மடை மாற்றவோ முடிவதில்லை...

உங்கள் வலி புரிகிறது

மீண்டு வாருங்கள், மீண்டு வந்துதான் தீர வேண்டும்.
இன்னும் வாழ்க்கை மிச்சம் இருக்கிறதே.. வெறென்ன செய்ய!!!

((((:

வானம்பாடிகள் said...

சிலருக்கு கஷ்டம் மட்டுமே வாழ்க்கையாய் அமைந்து விடுகிறது:(. அவர் ஆன்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கிறேன். கதிர் சொன்னது போல் மீண்டு வாருங்கள் வேலு.

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////எந்த தவறுக்கும் நான் என் அன்னையிடம் மன்னிப்புக் கோரப்போவதில்லை அதற்கான தண்டனையும் பெறத் தயாராகவே இருக்கிறேன்.
/////


உள்ளம் தூய்மையான பிறகு எல்லாம் தூய்மையாகும்...

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

தொடர்ந்து இருப்போம்..
தொடர்பில் இருப்போம்..

பிரதீபா said...

முழுதாகப் படிக்க முடியாத அளவுக்கு கண்ணீர் நிறைத்துக் கொண்டது. பிரிவினை முன்கூட்டியே அறிந்து அதை எதிர்கொள்ளும் நாட்கள் தான் எத்தனை வேதனையானவை !! அம்மாவின் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

அகல்விளக்கு said...

அனைத்திற்குமான தீர்வையும், பதிலையும் மனிதனால் என்றுமே கொடுக்க முடிவதில்லை...

அவர் என்றும் உடனிருப்பதாய் பாவித்துக் கொள்ளுங்கள் அண்ணா...

அம்மாவின் ஆன்மா நிறைவடையட்டும்...

மீண்டு வாருங்கள்...

ஷர்புதீன் said...

பட்டுகோட்டை பிரபாகர் கடந்த தீபாவளி விகடன் மலரில் எழுதி இருந்த சிறுகதைதான் ஞாபகத்திற்கு வருகிறது!

அந்த ஆன்மா அமைதி பெற பிராத்திக்கிறேன்

அன்பரசன் said...

//இன்னமும் சரியாக செய்திருக்கலாமே என்று மனம் என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறது. நானே நிறைய தவறு செய்திருக்கிறேன். அவர்கள் தனிமையை குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனித்து பார்த்து இருந்திருக்கலாம். கடைசியாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன்.//

உருக்கமான வரிகள்.

ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்...

dheva said...

உலுக்கிப் போட்டு விட்டது வேலு.....வார்த்தைகள் எல்லாம் தொலைத்து விட்டு கண்ணீரோடு ஒரு பின்னூட்டம் இட மனம் இடம் கொடுக்கவில்லை...

அம்மாவின ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லா ஏக இறையிடம் என் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன் மேலும் நீங்கல் இந்த சூழலில் இருந்து தெளிவோடு வலுவாக மீண்டு வரவுமெனது அன்பும், பிரார்த்தனைகளும் செய்வதோடு உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளவும் ப்ரியப்படுகிறேன்....

மற்றபடி...நான் கை பேசியில் அழைக்கிறேன் வேலு......

Chitra said...

உங்களால் இயன்ற அளவுக்கு, பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். பிரிவு துயரம் இருக்கலாம். Guilty consciousness க்கு இடம் கொடுத்து விடாதீர்கள். அதில் இருந்து மீண்டு வருவது கடினம்.
இந்த பதிவை வாசித்து முடிக்கும் முன், மனதில் பெரிய பாரம் தான். உங்கள் அன்பு அன்னையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம். மேலும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்காகவும் ப்ரார்த்தித்திக் கொள்கிறோம்.

ILA(@)இளா said...

அன்னையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்களும் எவ்வளவோ கஷ்டப்பட்டு உங்க அம்மாவுக்கு உதவி பண்ணியிருக்கீங்க.

பா.ராஜாராம் said...

மூச்சு விட முடியாத ஒரு நெருக்கடியான அனுபவமாக இருக்கிறது, இதை படிக்கையில். பல நேரங்கள் வார்த்தைகள் பற்றாமல் போய் விடுகிறதே வேலுஜி...

அம்மா சாந்தியடையட்டும் வேலுஜி.

Rathnavel said...

தங்கள் பதிவை படித்ததும் கண் கலங்குகிறது. தங்கள் தாயின் ஆத்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

அமைதி...

சி.பி.செந்தில்குமார் said...

ரிலாக்ஸ் ப்ளீஸ்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Recover from the strain.. My wishes!

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சை உருக மருக வச்சிட்டீரேய்யா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது போன்ற ஒரு சில துயரங்கள் காலப் போக்கில் தான் மறையக்கூடும்.
அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் மற்ற வேலைகளில் கவனத்தைத் திருப்புங்கள்.

வேடந்தாங்கல் - கருன் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

நீங்கள் மனம் தேறுங்கள் வேலு..

பழமைபேசி said...

ப்ச்... அன்னையின் ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நீங்கள் பொய் சொன்னது ஏமாற்ற அல்ல .. பிரிவின் துயர் கொடுமையானதுதான். என்ன செய்ய..

Kishore B said...

தங்கள் தாயாரின் ஆதம் சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Anonymous said...

"....பிறப்பு நன்றாக அமைவதே ஒரு வரம் தான்..". உண்மை. அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் சகோதரரே!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்னையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...

என்னை அறியாமல் எந்தன் கண்ணிலிருந்து கண்ணீர்துளிகள் படிக்கும் சமயம் அம்மாவின் பால் கொண்ட அன்பால்....

thirumathi bs sridhar said...

சகோதரரே! நானும் இதே வேதனையில்தான் உள்ளேன்,என் அன்னையின் நினைவிற்காகவும்,மற்றவர்கள் தங்கள் பெற்றோரின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்,நல்ல மருத்துவமும்,மருத்துவரும் கிடைக்க வேண்டும்.என் நிலைமை யாருக்கும் வந்து விடக் கூடாதென்று அம்மாவிற்காக பதிவும் வெளியிட்டேன்.தற்போது தங்கள் பதிவைக் கண்டும் மனம் பாரமாகிறது.காலம்தான் நமக்கு பதில்.

Anonymous said...

I cannot control my tears.....i am pray for your ammaa and your families....

DrPKandaswamyPhD said...

உங்கள் அன்னையின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

அன்னையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

பாரத்... பாரதி... said...

// உங்கள் அன்பு அன்னையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம்.//

பாரத்... பாரதி... said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கோம்..
நேரமிருப்பின் இந்த பதிவை பார்க்க வாங்க..
http://bharathbharathi.blogspot.com/2011/02/blog-post_28.html

கார்த்திக் said...

:-((((((

Nagendra Bharathi said...

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

சி.கருணாகரசு said...

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.

சி.கருணாகரசு said...

நீங்க உங்க அம்மாவை ஏமாற்றவில்லை.... சூழ்நிலையை... அப்படிதான் கையாள வேண்டிய சூழல்.

அனைத்திலிருந்தும் விடுப்பட்டு..... வாங்க....

வல்லிசிம்ஹன் said...

திரு.வேலு, வருத்தப் படாதீர்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. எங்களாலயே கலங்காமல் இருக்க முடியவில்லை. வாழ்க்கையின் பல்வேறு திருப்பங்களுக்கும் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையில் தான் எல்லோரும் இருக்கிறோம். உங்கள் மனம் அமைதியடைய நான் பிரார்த்திக்கிறேன். அம்மா அவரது அவஸ்தைகளிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் நிம்மதியாக இருப்பார்.

Anonymous said...

பிள்ளையை
உயிர் கொடுத்து காப்பாற்றுவள்
"பெற்றோர்கள்" அல்ல
தாய் மட்டுமே...

பாரத்... பாரதி... said...

///வார்த்தைகள் எல்லாம் தொலைத்து விட்டு கண்ணீரோடு ஒரு பின்னூட்டம் இட மனம் இடம் கொடுக்கவில்லை...//

rajasundararajan said...

இதற்கு மேலும் செய்திருக்கலாம் என்றெல்லாம் உறுதியாகச் சொல்ல முடியாது. வாழ்க்கை வளைவு, இன்று நாளை என்று நம்பிக்கை காட்டி ஏமாற்றும் இயல்பினது. மேலும், நாம் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்று எண்ணுவதும் தன்னை முன்னிருத்தும் இயல்பினால் நிகழ்வதே. மாறாக, ஒரு காரியம் தனக்கு வேண்டப்பட்ட ஆட்களை, கருவிகளை, காலநீட்சியைத் தேர்ந்து, தானே முடித்துக்கொள்கிறது.

உங்களுக்கென வந்துநேர்ந்த பணிகளை உங்களால் முடிந்த அளவில் செய்ய முடிந்தது, அவ்வளவுதான்.

விரும்பினால் (ஆன்மீக, அத்வைத, த்வைத இத்யாதி அலப்பரையாகித் தடிக்காமல்) நுண்ணுணர்வோடு அணுகுங்கள் - அவர்களோடு வாழ முடியும் இனியும்.

தவறு said...

வார்த்தைகள் இல்லை வேலு.மன உறுதி கொள்க..

சுல்தான் said...

படித்த பின் என் கண்களில் ஈரம்.

தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

நம்மால் இயன்ற வரை செய்தோம். இறப்பு பொதுவானதுதானே!
உங்கள் மனம் அமைதியடையட்டும்.

VELU.G said...

தங்களின் இதமான வார்த்தைகள் மூலம் எனக்கு ஆறுதலளித்த

சங்கவி

Kathir

வானம்பாடிகள்

கவிதைவீதி சௌந்தர்

பிரதீபா

அகல்விளக்கு

ஷர்புதீன்

அன்பரசன்

தேவா

சித்ரா

இளா

பா.ராஜாராம்

தாராபுரத்தான்

சி.பி.செந்தில்குமார்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi

நாஞ்சில் மனோ

வை.கோபாலகிருஷ்ணன்

வேடந்தாங்கல் - கருன்

முத்துலட்சுமி

பழமைபேசி

தேனம்மை லெக்ஷ்மணன்

Kishore B

kovaikkavi

தஞ்சை வாசன்

thirumathi bs sridhar

Anonymous

DrPKandaswamyPhD

இராஜராஜேஸ்வரி

பாரத்... பாரதி.

கார்த்திக்

Nagendra Bharathi

சி.கருணாகரசு

வல்லிசிம்ஹன்

"குறட்டை " புலி

rajasundararajan

தவறு மற்றும்

சுல்தான்

ஆகிய எல்லா நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்

உங்கள் ஆறுதல் வார்த்தைகள் என்னை இந்த நிலையை மாற்றித்தரும் என்ற நம்பிக்கையுடன்

வேலு.G

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் பதிவைப் படித்து என் கண்களிலும், நீர்.. எப்படி உங்களுக்கு ஆறுதல் சொல்லவென்று தெரியவில்லை..

அன்னையின் இழப்பு.. ஈடு செய்ய முடியாதது தான்.. அதேசமயம், உங்களால் இயன்ற வரையில் இறுதி வரை கூட இருந்து செய்திருக்கிறீங்க...

கவலை வேண்டாம்.. உங்கள் தாயின் பரிபூரண ஆசிகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என்றும் துணை இருக்கும்...

உங்கள் அம்மாவின், ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

மனம் தளராதீங்க..!

இளம் தூயவன் said...

எந்த தாயுக்கும் இந்த நிலை வர வேண்டாம் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். உங்களுடைய கடமையை சரியாக செய்து உள்ளீர்கள். இதை படித்து முடிக்கும் பொழுது என் கண்கள் மட்டும் அல்ல என் மனமும் கலங்கி விட்டது.

ரிஷபன் said...

இன்னமும் சரியாக செய்திருக்கலாமே என்று மனம் என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறது. நானே நிறைய தவறு செய்திருக்கிறேன். அவர்கள் தனிமையை குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனித்து பார்த்து இருந்திருக்கலாம். கடைசியாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன்.

எந்த தவறுக்கும் நான் என் அன்னையிடம் மன்னிப்புக் கோரப்போவதில்லை அதற்கான தண்டனையும் பெறத் தயாராகவே இருக்கிறேன்.


இதே மனநிலையில் நான் 2 வருடங்களுக்கு முன்.. இன்னமும் மளுக்கென்று கண்ணீருடன்..
அதனால் இந்தப் பதிவு குறித்து ஏதும் சொல்லும் தகுதி எனக்கில்லை..