
வக்ரம்
சீப்பெடுத்து தலைவார
படிந்து போகும் முடிகள்....
கண்ணாடி முகம்
விட்டகன்றதும்
முடிதூக்கி உறுத்தும்
மூளைக்குள்.....
வணங்காமுடிகள்.....
சமூகத்தின் பிடிவிடத்
தனிமையில்
தலைதூக்கும் வக்ரங்கள்
இருக்கத்தானே செய்கின்றன
மனசுள்...

பஸ் திருப்தி
முகூர்த்த நாட்களில்
மூச்சுத் திணறும் பஸ்கள்....
உள்விடும்
அந்நிய சுவாசங்களின்
உச்ச வெப்பத்தில்
புளுங்கித் தவிக்கும்....
மித வேகமோ.....
மிஞ்சிய வேகமோ....
தள்ளாடும் பஸ்ஸினுள்
கரையும்
மண்டபத்தில் மிளிர
போட்டுவரும்
சாயங்களும் பவுடர்களும்...
மண்டப நிறுத்தத்தில்
மனுஷம் இறங்கும்
இயல்பு முகத்துடன்....
பஸ்கள் செல்லும்
வர்ண திருப்திகளுடன்....