Showing posts with label கவிதை....நகைச்சுவை. Show all posts
Showing posts with label கவிதை....நகைச்சுவை. Show all posts

Thursday, January 13, 2011

மார்கழி காலைகள்

அதிகாலை
ஐந்துமணி அலாரம்...
கடிகாரம் கண்டறிந்தவனை
கண்டபடி திட்டியபின்
கொதிக்கும் வெந்நீர்
குளியல் உடம்புக்கு
வெளியே...
சுடச்சுட காப்பி உடம்புக்கு
உள்ளே...

வழக்கமான உடைகளுக்கு
மேலே ஸ்வெட்டர்
தலைக்கு குல்லா
கைக்கு உறை எனும்
முப்பெரு (தெய்வக்) காவல்

கோவில் பிரகாரம் சுற்றி
குருக்கள் தேவாரம் கேட்க
வீட்டுத் தாழ்வாரக்கதவு
சாத்தினோமாவெனுங் குழப்பம்
தீபாராதனை நடுவே
பையன் எழுந்து
பல் துலக்கினானோ
பெண் எழுந்து
பெட் காப்பி குடித்தாலோ
எனுங்கவலை

திருவாசகத்துக்கு உருகாமல்
சர்க்கரைப் பொங்கலுக்கு உருக
மலங்க மலங்க விடிகிறது
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்நாட்கள்

Saturday, January 1, 2011

திவ்ய தரிசனம்

கோயில் வாசலில்
கால் வைத்ததும்

பார்த்தாகி விட்டது,

முழுதாகத்தான் இருக்கிறது.


வெளிப்பிரகாரம்

சுற்றுகையில்

பாதியாகி விட்டது

மனம் கொஞ்சம்

படபடத்தது


உள்பிரகாரம்

சுற்றும் போது

ஒருமுறை

எட்டிப் பார்த்த்தில்

கால்வாசியாகி விட்டது.


கருவறைக்குள்

செல்லலாமா? வேண்டாமா?

மனம் சஞ்சலத்தது

தீபாராதனை காட்டும்போது

நெஞ்சுக் கூட்டில்

மேலும் படபடப்பு

முகத்தில் ஒரு கவலை


திருநீறு பூசியதும்

ஓடிச் சென்று

அடித்து பிடித்து

அந்தக் கடைசி தருணத்தில்

வாங்கியாகிவிட்டது

பொங்கல் பிரசாதம்


கடவுளைக் கண்டேன்

இன்னைக்கு

திவ்ய தரிசனம்ங்க

என்று வழியில்

பார்ப்போரிடமெல்லாம்

சொல்ல முடிந்த்து



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Friday, December 17, 2010

மனிதர்களுக்குத்தான் எல்லாமே.....

மறுபடியும்
பாற்கடலைக் கடைந்தபோது

வெண்ணைதான் வந்ததாம்.


கோபத்தில்

சிவன் தொண்டையில்

இருந்த விஷத்தை கக்கியதும்

இருமல் சரியானது.

பெனடிரில் சிரப்

ஒத்துக்கொள்வதில்லை

இப்போதெல்லாம்.


பிரம்மச்சுவடி

தொலைந்த வருத்தத்தில்

அரிச்சுவடி படிக்க

ஆரம்பித்து விட்டார் பிரம்மா.

எட்டாம் வாய்ப்பாட்டிற்குமேல்

வரவில்லையாம்


சிவன், பிரம்மா, விஷ்னு
மூவரும்
ஒன்றாம் வகுப்பிலிருந்தே
நண்பர்கள்தான் என்றாலும்
அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
தொழில்கள் வேறு வேறு.

நடுத்தரக் குடும்பங்கள் தான்

என்றாலும்

குகை மலைகள் தான்

வீடு என்பதால்

வாடகை தொல்லை இல்லை.


சூரியன் சந்திரனென்று

பவர்கட் எப்போதுமில்லை.


வாகனங்களுக்கு

பெட்ரோல் பிரச்சனையுமில்லை.


மனிதர்களுக்குத் தான்

எல்லாமே.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...