Showing posts with label கதை .... கட்டுரை..புணைவு. Show all posts
Showing posts with label கதை .... கட்டுரை..புணைவு. Show all posts

Wednesday, December 1, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 3.......

நரேன் உன் வார்த்தைகள் மிகக் கடுமையாக உள்ளன. உனக்கு யார் மீது கோபம்?

தவறிருந்தால் மன்னியுங்கள் சாமி. எனக்கு யார்மீது கோபம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து என் ஆத்திரத்தை அப்படியே கொட்டிவிட அனுமதியுங்கள். பிழையிருந்தால் பொறுத்துக்கொள்ளவும் சாமி.

சரி கேள் நரேன். கடமையைச் சரிவரச் செய்யும் எல்லா ஆன்மாக்களுக்குமே அதன் பலன் உண்டு. நீ கடவுளை நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அவரவர் வினைகளின் படி அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியத்தை பெறுவர் என்று நான் கற்ற வேதங்கள் சொல்கின்றன.

அப்புறம் நீங்கள் ஏன் அந்த இல்லறவாசியை உங்கள் ஆன்மிக உரைகளுக்கு இழுக்கிறீர்கள். விட்டு விடுங்களேன் உங்கள் போதனைகளை. அவன் பாட்டுக்கு அவன் பலனை அனுபவித்து விட்டு போகிறான்?.

ஹா அது அப்படி இல்லை நரேன். நான் கற்ற வேதங்கள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்னதான் கடமைகளைச் செய்தாலும் நம்மை படைத்த கடவுள் நமக்கு வாழும் வழிவகையும் செய்து இப்புவியில் நமக்கு துணையாக இருக்க பல உயிர்கள், தாவரங்கள் என பலவற்றை படைத்து நமக்கு பக்க பலமாக இருக்கச் செய்தவனுக்கு நம் ஒரு நன்றியாவது செலுத்த வேண்டாமா?.

சரி இல்லறவாசியை விடுங்கள் சாமி ஒரு துறவி எதை நோக்கிச்செல்கிறான். அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன?

ஓரு துறவி இறைநிலை நோக்கியே பயணிக்கிறான். அவன் அதற்காக பல யோகங்கள், தியானங்கள் என்று சதா இறையையே நினைத்துப் பயணிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் தன்னுள்ளே கலந்து தன்னையே இறையாக கானவும்தான்என்ற எதுவும் இல்லை என உணரவும் செய்கிறான்.

ஞானமடைதல் என்கிறார்களே அது இதுதானா சாமி?

இருக்கலாம். நான் அதைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்க முடியவில்லை.

சிலர் நான் ஞானமடைந்து விட்டேன் என்று மக்களுக்கு போதனை செய்யக் கிளம்பி விடுகிறார்களே சாமி இது சரியா? .

ஹா என்னை விடமாட்டாய் போலிருக்கிறது?. எனக்குத் தெரிந்து ஒரு துறவி தன் ஞானமடைதலுக்கு பின்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு பின் சிந்தனைகளுக்கு வேலை இல்லை. சிந்தனையை நிறுத்திய பிறகு தான் அனைத்துமே சித்தியாகும்.


சாமி புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள், இந்து மதத்தில் நிறைய ஞானிகள் என்று இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தோன்றி இந்த உலக மக்களுக்கு எத்தனையோ விதமான நல்ல கருத்துக்களைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள்.

உனக்கு அதிலென்ன சந்தேகம்?.

எல்லா ஞானிகளுமே இறைவனைப்பற்றி ஒருமித்த கருத்து ஏதும் சொல்லவில்லை. எல்லாருமே அவரவர் காலங்களில் அந்தந்த நிலையில் இருந்தே தங்கள் கருத்துக்களை சொல்லயுள்ளனர். அவர்கள் எல்லோரையும் தவறு சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும்.....


என்றாலும்?!!!!!!!!!!!!!!!!!!!!!!.....

நாம் இன்னும் கடவுள் என்ற த்த்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று சந்தேகம் வருகிறது?


ஹா நரேன் மிக சமார்த்தியசாலி நீ கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று என்னிடமே கேட்கிறாய்?. இல்லையா ஹா..............


நரேன் நீ மற்றவர்களைப் போல அல்ல. உன்னுடைய கேள்விகள் அடுத்த தலைமுறைக்கு நிறைய செய்திகளை சொல்ல வேண்டும். நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த மனிதர்களிலிருந்தோ, இப்போது வாழும் மனிதர்களிடமிருந்தோ, என்னிடமிருந்தோ எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது இனி ஏதுமில்லை. நீ உனக்குள் தேடு. உன்னிடமே எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும். நீ உன்னையே கேள். இங்கே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள எல்லாருக்கும் சம வாய்ப்புகள் தான். ஒரு துறவிக்கு ஒரு ஞானிக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளனவோ அதுவே எல்லா மனிதர்களுக்கும். உன் கேள்வி என்கிற பூட்டிற்கு நீயே தான் சாவி. உன்னையே அதற்குள் நுழைத்து தெரிந்து கொள். இருக்கும் போதே உணர்ந்து கொள் அப்போது தான் இல்லாமல் போவதில் அர்த்தம் இருக்கும்.

கடவுள் இருக்கிறாரா?, இல்லையா? அவர் வியாபாரியா?, பஜனை கோஷ்டிகளின் தலைவனா? எல்லாம உனக்கே தெரியும் வகையில் தான் இங்கே எல்லாமே இருக்கிறது. நானும் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதால் காலத்தின் கட்டாயம் இருந்தால் மீண்டும் சந்திப்போம். வருகிறேன்.

கிளம்பி விட்டார்.

Monday, November 29, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 2.......

முதலில் துறவு என்றால் என்ன?

மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை.

எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உயிரோடு இருக்க முடியுமா?. முடியாது. எல்லாவற்றையும் துறந்த நிலை என்றால் மண்,பொன்,பெண்,மது என்று உலக இன்பங்கள் எதிலும் பற்றில்லாமல் இருப்பது.


நீ துணி உடுத்தி இருக்கிறாயே அப்படியென்றால் அதன் மேல் பற்றா? என்று கேட்கக் கூடாது. மனிதனின் மிகவும் அடிப்படைத் தேவைகளைக் கூட பற்றில்லாத மனதுடன் உயிர் வாழ மட்டுமே தெரிவு செய்வதாகும்.

இறைப்பணி செய்வதும் துறவு நிலைக்கான தன்மை.


நீ துறவியா?


இல்லை முழுத்துறவு என்பது மனிதன் இறந்த பின்பு தான் முழுமையடைகிறது. அந்த நிலை நோக்கி செல்கிறோம் அவ்வளவே.


நீ ஏன் துறவியானாய்?

சிறு வயது முதலே இந்நிலை மேல் ஆர்வமிருந்த்து. இருந்தாலும் இல்லறம் எனை இழுத்த்து. ஒரு கட்டத்தில் என்னால் பணம் சம்பாரிக்க முடியாமல் போனபோது நான் அன்பு செலுத்திய என் மனைவி மக்களாலேயே வெறுக்கப்பட்டேன். அது என்னை வருத்தியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சாம இந்நிலைக்கு மாறி விட்டேன்.


வெறுப்புதான் உங்களை இந்நிலைக்கு தள்ளியதென்றால் ஒரு கட்டத்தில் துறவை வெறுத்து இல்லறம் புகுந்து விடுவீர்களா?. ஒரு நிலையின் வெறுப்பு இன்னொரு நிலைக்கு மாற்றினால் அதில் நிலைத்தன்மை இருக்குமா?.

முதலில அப்படிததான் இருந்தது. ஆனால் என் இறுதிப் பயணத்திற்கான தேடலும், இறைநாட்டமும் என் முழுகவனமும் துறவு நிலையிலேயே இருக்கிறது. என் மனதை நான் கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டேன். எனவே என் நிலை மாறாது.


சாமி இல்லறம், துறவறம் எது சிறந்த்து? இருவரின் இறுதி நிலைதான் என்ன?

இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தது தான். வாழ்க்கைத் தராசில் சம்மாய் இருக்கும் இரு தட்டுக்கள் தான் இவை. இல்லற வாழ்க்கையை முடித்து என்னைப்போல துறவு கொள்பவர்களும் உண்டு.

இருவரின் இறுதித்தேடலும் இறை தான். இல்லறவாசிக்கு பக்தி மார்க்கம். துறவறத்திற்கு யோக மார்க்கம், ஞான மார்க்கம்.


சாமி இரு நிலைகளுமே சமம் தான் என்றால் தங்களை தாழ்த்திக்கொண்டு உங்களின் கால்களில் விழும் இல்லறவாசிகளை ஏன் அனுமதிக்கிறீர்கள். அவர்களை விட நீங்கள் எந்த வகையில் உயர்ந்து விட்டீர்கள்?.


ஹ ஹ ஹ ஹ ஹா நல்ல கேள்வி. இல்லறத்தில் உள்ளவன் அந்த இறைநிலை பற்றிய சிந்தனையே இல்லாமல் இல்லறக்கடமைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர்கள். துறவிகளோ ஆன்மீகத்தில் லயித்து இறைவனையே நிணைத்து படித்து அழுது இறைநிலைக்காக ஏங்குபவர்கள். எந்த உண்மையான துறவியும் தன்னை வணங்கும் ஒருவனை அவன் தனக்கு மரியாதை கொடுக்கிறான் என்று எண்ண மாட்டார்கள். அவனுடைய பணிவு, வணக்கம், பக்தி எல்லாமே இறைவனைச்சார்ந்தவை என்று அவனுக்குத் தெரியும். எனவே அந்த வணக்கத்தின் மதிப்பை எப்போதும் தன் உள்ளத்தில் வைத்து கர்வம் கொள்ள மாட்டான் அதை அப்படியே இறைவனுக்கு அனுப்பி விடுவான்.



சரி அப்படியே இருக்கட்டும். தன்னைத் தாழ்த்தி வணங்கும் ஒருவனைத்தான் இறைவன் ஏற்றுக்கொள்வானா? எந்த நேரத்திலும் அவனையே நிணைத்து அவனைப்பாடும் ஒருவனுக்குத்தான் நீங்கள் சொல்லும் மோட்சம் அல்லது இறையை அடையும் பாக்கியம் கிடைக்குமா? சாதாரணமாக தன் இல்லறக் கடமையை சரியாய் முடித்து செத்துப்போகும் இல்லறவாசிக்கு உங்கள் பதில்?. இறைவனும் பாராபட்சம் பார்க்கும் ஒரு வியாபாரியாய்த் தான் இருப்பானா?. நீங்கள் அவனுக்கு ஜால்ரா அடிக்கும் கோஷ்டியாகத்தான் இருப்பீர்களா?





....continue

Wednesday, August 18, 2010

நானும் எனது தேடல்களும்

எனக்கு தேடல் பற்றி அதிகம் ஞானம் இல்லை. தேடல்கள் பற்றி முழுவதுமாக தெரிந்திருக்கவும் இல்லை. பின் ஏன் என் கதையை எழுதுகிறேன் என்று ஆச்சரியமாகதான் இருக்கிறது.


எனது முதல் தேடல் ஏழுவயதில் ஆரம்பித்தது. அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். (எல்லோருமே ஏழுவயதில் இரண்டாவது தான் படிப்பார்கள் என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. சத்தியமாக நானும் இரண்டாவதுதான் படித்தேன்). தொலைந்து போன சிலேட் பென்சிலை கண்டுபிடிக்காமல் வந்தால் இனி உனக்கு பென்சிலே கிடையாது என்று என் அம்மா சொன்னபிறகு எனது பென்சில் தேடல் அவசியமானது. உட்கார்ந்திருந்த இடம், விளையாடிய இடம், நண்பனின் பை என்று எந்த இடத்திலும் அது இல்லை.


என்னால் பார்க்க முடியவில்லை, எனக்குத் தெரியவில்லை, என்னால் உணரமுடியவில்லை என்பதால் அது அங்கே இல்லை என்று சொல்ல முடியவில்லை. அது அங்கேதான் இருக்கிறது என்றும் அறிய முடியவில்லை.


இந்த குழப்பமான நிலையில் வீட்டிலேயே ஒரு இடத்தில் கண்டறிந்தபின் தான் நிம்மதியடைந்தேன்.



பின்னர் எனது பதினேழு வயதில் நான் ஓட்டிக்கொண்டிருந்த மிதிவண்டியை தொலைத்து விட்டேன். தேடலின் இரண்டாவது கட்டம் கொஞ்சம் அபாயகரமானதாய் இருந்தது. வீட்டில் உருவிய பெல்ட்டோடு நிற்கும் என் அப்பாவை நினைத்து பார்க்கவே முடியவில்லை. பழகின இடங்களுக்கெல்லாம் பாதயாத்திரையாக சென்று தேடினேன். இருந்தாலும் அது ஒரு முடிவில்லாமலேயே இருந்தது. கடைசிவரை அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.


இல்லாத ஒன்றை எத்தனை நாளைக்கு எப்படித் தேடினாலும் கிடைக்கவா போகிறது? இருக்கிற என்னையே தேடமுடியாதபோது?.


பின்னர் என் தேடல் பொருள்களுக்கானதாய் இல்லாமல் வாழ்க்கைக்கானதாக மாறியது.


அவளுக்கு அழகிய முகம், சிவந்த விழிகள் (மெட்ராஸ் ஐ அல்ல). புருவத்திற்கிடையே மெல்ல எட்டிப்பார்க்கும் ஒரு மச்சம் மேகத்திற்கிடையே மறையும் முழுநிலவு போல்(இது மச்சத்திற்கான தேடல் இல்லை). அவள் சிரித்தால் அருவியின் ஓசை( அருவியை பார்த்த்தில்லை, குழாய் தண்ணியையே அப்படி கற்பனை செய்து கொள்வேன்). மொத்தத்தில் அவளிடம் ஏதோ எனக்கான தேடல் மிச்சமிருப்பதாய் தெரிந்தது. பார்த்து பழகி, பேசி மகிழ்ந்து, ஊர் சுற்றி, அவளைக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக்கொடுத்து (சுரண்டி சுரண்டி பாக்கெட் ஓட்டையாகி அதில் கிணறு தோண்டி நீரெடுத்து விட்டாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்) என்ன செய்தும் அவளுக்கான எனது தேடல் நிறைவு பெறாமலேயே காலம் கடந்தது.


இது ஒரு வித்தியாசத்தேடல். நான் தேடும் பொருள் எதிரிலிருந்தும் அதில் நான் தேடுவது எது என்று புரியவில்லை.


முடிவில்லாமல் சென்ற அந்தத் தேடலும் ஒரு முடிவுக்கு வந்தது அவள் கல்யாணப்பத்திரிக்கை வடிவில்.




வாழ்க்கை வெறுத்துப்போய் சாமியாராகும் முடிவுக்கு வந்து விட்டேன் (என்ன ஒருமாதிரி பார்க்கிறீர்கள். சத்தியமாக அப்படியெல்லாம் இல்லை. இது உண்மையிலேயே சாமியார் நம்புங்கள்), என்னுடைய ஆண்மீகத் தேடல் (சாரி.. ஆன்மீகத் தேடல் திருத்தி வாசிக்கவும்) ஆரம்பமானது (இப்போது தான் உண்மையான தேடல் ஆரம்பிக்கறது. கைதட்டுங்கள் ஏனென்றால் கடவுளைத் தேடுவது தான் தேடல் என்று எனக்குச் சொன்னார்கள்), கோயில், குளம், குட்டையெல்லாம் அலைந்தேன். கையில் திருவோடு, கழுத்தில் உத்திராட்சம், இடுப்பில் காவி.


காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்தப்பையடா


என்று பாடித்திரிந்தேன். இதற்காகவே பட்டிணத்தார், அழுகனி சித்தர், பத்திரகிரியார், இடைக்காடர் என்று எல்லோருடைய பாடல்களையும் முன்பே வாங்கி மனப்பாடம் செய்து கொண்டேன். சாமியார் உடை அணியும் முன்பே இதை prepare செய்து விட்டேன் (பரிட்சைக்கு படித்திருந்தால் கூட IAS. IPS மாதிரி ஏதாவது ஆகியிருப்பேன்).


காசி முதல் ராமேஸ்வரம் வரை நடந்தேன். பல திருத்தலங்களை தரிசித்தேன். எல்லா இடங்களிலும் அதற்கென்று பிரத்யேகமாக உள்ள சந்நியாசிகள், ஞானிகளை சந்தித்து தெளிவு பெற்றேன்.(அடுத்தநாளே என்ன சொன்னார்கள் என்று புரியாமல் குழம்பினேன்). என்ன செய்தும் என் தேடல் முடிவடையவில்லை. கடைசியில் கடவுளையாவது தரிசித்து விடலாம் என்று நம்பினேன். நீ தான் கடவுள் என்று சொல்லிவிட்டனர் (முகம் பார்க்கும் கண்ணாடி வாங்கி வைத்திருக்கிறேன். கடவுளை அடிக்கடி பார்க்க).


இந்த்த் தேடலில் முடிவும் இல்லை, பொருளும் இல்லை என்று நான் முடிவு செய்த போது என் பெற்றோர் என்னை கண்டுபிடித்து கூட்டிச் சென்று விட்டனர். உடனே ஒரு கல்யாணமும் செய்து வைத்து விட்டனர். ஒரு வழியாக இந்தத் தேடல் முடிவிற்கு வந்தது.


என் மனைவி சொன்னாள் உங்கள் தேடல்களையெல்லாம் கேள்விப்பட்டேன். நீங்கள் தேடியது எதுவும் கிடைக்காமல் எவ்வளவு வேதனைப்பட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன். இனி உங்களுக்கென்று எதுவும் தேடலே இருக்காது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.


அன்றிலிருந்து எனக்கான தேடல்கள் நின்று போனது.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...