Tuesday, August 23, 2011

ஒரு யானையும் சில எறும்புகளும்



ஒரு காட்டில் எறும்பு கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒரு முறை மதம் பிடித்த யானை ஒன்று அந்த வழியாக தாறுமாறாக ஓடி வந்தது. எல்லா எறும்புகளும் தலை தெறிக்க ஓடியது உயிர் பிழைக்க. ஆனாலும் நிறைய எறும்புகள் யானையின் காலடியில் பட்டு இறந்து போனது. ஒருசில எறும்புகள் யானையின் மீதே ஏறின. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் முதுகு வரை சென்றது. அந்த எறும்பைப் பார்த்து கீழே இருந்த எறும்பு கத்தியதாம் “டேய் மாப்ளே விடாதடா போட்டு அமுக்குடா அவனை” என்று. இந்த ஜோக்கைப் பத்திரிக்கையில் படிக்கும் போது எல்லோருக்கும் சிரிப்பு வருவது போல எனக்கு வரவில்லை. மனதின் ஊடே ஒரு வலி நிரந்தரமாய் ஆக்கிரமித்து இருந்தது.

வலிமை மிகுந்தவர்கள் எதையும் மதிக்காமல் தான் செய்வதே சரியென்று மதம்கொண்ட யானையைப் போல அலைவதும், வலிமையற்றவர்கள் அவர்கள் பிடியில் சிக்கி அப்பாவிகளாய் மடிந்து போவதும் எப்போதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது.

என் அம்மா சாகப்போகிறாள். வீட்டின் முன்கூடாரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். இன்னும் இரண்டு நாட்களா, மூன்று நாட்களா தெரியாது. ஆனால் அவ்வளவு தான் என்று டாக்டர் சொல்லிவிட்டார். சின்னம்மாவிற்கு சொல்லிவிட்டார்கள். ஆனால் இன்னும் வரவில்லை. நான் அம்மா என்று சொல்வது என் பெரியம்மாவை. சின்னம்மா என்று சொல்வது தான் எனக்கும் என் தங்கைக்கும் உண்மையான அம்மா.

மாறிவிட்டது, எல்லாம் மாறிவிட்டது. பணம் எண்ணும் பேய் ஒரு மனிதனை பிடித்து விட்டால் அது மலம் திண்ணும் பன்றியைப் போல வதவதவென குட்டிகளைப்போட்டு ஒவ்வொரு செல்லிலும் பரவி மூளை மனம் உடம்பு எல்லாவற்றையும் அரித்து விடுகிறது.

எங்களை படிக்க வைத்தது வளர்த்தது எல்லாமே எங்கள் பெரியம்மா தான். அம்மாவின் நிழலைக்கூட நாங்கள் அதிகம் தீண்டியதில்லை. அத்தனையும் வேதனை.

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து சென்றனர். அப்பா பெரியம்மாவின் பக்கத்திலேயே மிகுந்த துக்கத்துடன் அமர்ந்து கொண்டிருந்தார்.

என் பெரியம்மாதான் அப்பாவின் முதல் மனைவி. பெரியம்மாவை கல்யாணம் செய்து வந்தபோது அப்பாவிற்கு ஒரு பாரம்பரிய வீடு மட்டுமே இருந்த்து. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பெரியம்மா டீச்சர் டிரெயினிங் முடித்து வேலைக்கு காத்திருந்தார்.

கல்யாணத்திற்கு பின்னால் வேலை போய்விட்டது. மிகுந்த சிரமத்திற்கிடையே என் பாட்டி அப்பாவிடம் அம்மாவின் நகைகளை விற்று சமாளிக்கலாம் என்று சொன்னார். அப்பாவும் அம்மாவிடம் நகைகளைக் கேட்க, அம்மாவோ எல்லாவற்றையும் தருகிறேன், ஆனால் அதை விற்று நம் வீட்டின் முன்னால் ஒரு மளிகைக்கடை வையுங்கள். பின்னர் சம்பாதிக்கும் போது அதை திருப்பி செய்து கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அப்பாவும் தலையை ஆட்டிவிட்டு நகைகளை விற்று மளிகைக் கடை ஆரம்பித்தார். ஓரளவு வருமானம் வர ஆரம்பித்த்து. ஆண்டுகள் ஓடின.

ஆனால் பிரச்சனை வேறு விதத்தில் முளைத்தது. நான்கு வருடங்களாக குழந்தையில்லை. மருத்துவத்தில் பெரியம்மாவிற்கு கரு தங்காது என்று சொல்லிவிட்டார்கள். நாட்டு வைத்தியம், கோயில், குளம் என்று சுற்றி எதுவும் நடக்கவில்லை. பாட்டி இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். அப்பா முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் தனக்கு ஒரு பேரப்பிள்ளை வராதா என்று புலம்பியபடி சோறு தண்ணி இல்லாமல் இரண்டு மூன்று நாட்கள் கிடந்து ஜெயித்து விட்டாள்.

பெரியம்மா ஒப்புக்கொள்ள என் அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அப்பா. அம்மா அவர்கள் குடும்பத்தில் நாலாவது பெண். ஒரு பெண் இருந்தாலே முடியாத வறுமையில் எப்படியோ மூன்று பெண்களை தள்ளிவிட்ட தாத்தா, நான்காவது பெண்ணை இரண்டாம் தாராமாக்க முடிவெடுத்தார்.

பிறப்பிலிருந்தே வறுமையை கண்ட என் அம்மா எல்லாவற்றிலும் பணம் பணம் என்று அலைந்தாள்.அம்மாவிற்கு மூன்று விஷயங்கள் மிகவும் பிடிக்கும். முதலாவது விஷயம் பணம். இரண்டாவது பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள். மூன்றாவது பணம் சம்பாதிக்கத் தேவையான விஷயங்கள்/மனிதர்கள். அதைத்தவிர மற்றவையெல்லாம் அனாவசியம். பணம் என்றால் ஒரு வெறி. அந்த மதம்பிடித்த யானையைப்போல எதையும் பார்க்காமல் துவம்சம் செய்துவிடுவாள்.

திருமணமான கையோடு மளிகைக்கடைக்கு சென்று அமர்ந்துவிட்டாள். வியாபாரத்தில் அப்பாவிற்கு உதவி என்று போனவள் எல்லா முடிவுகளையும் அவளே எடுக்க ஆரம்பித்தாள். பின் நிர்வாகம் முழுமையும் ஆக்ரமித்துவிட்டாள். பெரியம்மாவோ காலையில் ஆரம்பித்து எல்லா வீட்டு வேலைகளையும் இடுப்பொடிய செய்வதுடன் என்னையும் தங்கை கீதாவையும் நன்றாக பார்த்துக்கொண்டார். கடையை சாத்திவிட்டு வரும் என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சாப்பாடு போட்டு கழுவி வைத்துவிட்டு பெரியம்மா படுத்து உறங்கும் நேரம் யாருக்குமே தெரியாது.

எப்படி இருந்தாலும் என்னிடமோ தங்கையிடமோ துளிகூட முகம் சுளிக்கமாட்டாள். எல்லா வேலைகளும் போக எங்களுக்கென்று தனியாக நேரம் ஒதுக்குவாள். அதிலே படிப்பு, விளையாட்டு, பாட்டு, கதைகள் என்று எவ்வளவு இனிமையான நேரங்கள் அவை.

எங்கள் அம்மாவுடன் நன்றாக பேசவேண்டும் என்றால் அது ஞாயிற்றுகிழமைகளில் தான் முடியும். மற்ற நாட்களில் நாங்கள் எழும் முன கடைக்கு சென்றால் நாங்கள் உறங்கியபின் தான் வருவாள்.

அம்மாவின் பிறந்த வீட்டு வறுமை அவளுக்கு பணத்தையே பிரதானமாகக் காட்டியது. பணத்தை பெரிதாக கருதியவர்களுக்கு குடும்பம் பெரிதாக அமையாது.

என் அம்மாவின் எண்ணம் போலவே பணம் சேர்ந்தது. ஒரு காலியிடம் நல்ல விலைக்கு வந்ததை தன் பேருக்கு வாங்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றாள் அம்மா. அப்பாவோ பெரியம்மாவிற்கு நகை செய்து போடவேண்டும் மறுபடியும் நிலம் வாங்கிக் கொள்ளலாம் என்றார். இருவருக்கும் பெரிய சண்டையாயிற்று, பெரியம்மாவோ வாய் திறக்கவேயில்லை.

ஆனால் அம்மாவோ முடிவெடுத்து விட்டாள். பெரியம்மா இனி இங்கிருந்தால் அவளுக்கென்று தனியாக எதுவும் செய்ய முடியாதென்று. அதற்கு ஒரு காரணமும் அமைந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை என்னையும் தங்கையையும் தன் பிறந்த ஊருக்கு அழைத்தாள். நாங்களோ பெரியம்மாவுடனே இருக்கிறோம். நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்று சொன்னோம். அம்மாவிற்கு கோபம் தலைக்கேறியது. கத்தத் தொடங்கிவிட்டாள்.

“அந்த மலடி சிறுக்கி சொல்லறதத்தாண்டா எல்லாரும் கேக்கறீங்க, பெத்த அம்மா நான் சொல்றத யாராவது கேக்கறீங்களா? அப்படி என்னதான் சொக்குபடி போட்டு வைச்சுருக்கிறாளோ தெரிய்லையே. நான் சொன்னா இந்த வீட்டு நாய்கூட மதிக்கமாட்டேங்குது. கடவுளே இதற்கெல்லாம் ஒரு முடிவு காலமே வராதா?” என்ற ஊரையே கூட்டிவிட்டாள்.

கடைசியில் நகை முடிவு தள்ளிப்போய் அம்மாவின் பெயரில் நிலம் வாங்க முடிவெடுக்கப்பட்டது. அதோடு அம்மா சமாதானம் ஆகவில்லை. “ஒன்னு இந்த வீட்டில அவ இருக்கனும் இல்லைன்னா நான் இருக்கனும். இப்பவோ முடிவு பண்ணிடுங்க” என்று பஞ்சாயத்து வைத்தாள்.

குடும்ப மானமே பெரிதென்று பெரியம்மா தனியாக போக முடிவெடுத்தாள். அப்பாவால் தடுக்க முடியவில்லை. இறுதியாக மாதம் இரண்டாயிரம் செலவிற்கு கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அம்மா அந்த இரண்டாயிரத்திற்கு அரை மனதோடு சம்மதித்தாள். ஒரு நல்ல நாளில் பெரியம்மா தனியாக ஒரு வாடகை வீட்டிற்கு சென்றாள்.

நல்லவர்கள் தனியாக செல்லும்போது தெய்வம் கூடவே வருமாம். பெரியம்மாவிற்கு அரசுப்பள்ளியில் வேலை கிடைத்த்து. அந்த செய்தி தெரிந்ததும் மாதம் இரண்டாயிரத்தை கொடுக்க கூடாது என்று அம்மா சொல்லிவிட்டாள். “அவதான் சம்பாரிக்கிறா இல்ல. அவளுக்கென்ன புள்ளையா குட்டியா. இங்க இருந்து எதுக்கு வெட்டியா இரண்டாயிரம்” என்று நிறுத்திவிட்டாள்.

பெரியம்மா எதற்கும் அஞ்சவில்லை. ஒரு வருடத்தில் தையல் இயந்திரம் வாங்கினாள். தைக்க ஆரம்பித்தாள். கூடை பின்னினாள். பள்ளி நேரம் போக என்ன்னென்வோ சிறு தொழில்கள் அனைத்தும் செய்தாள். வருடங்கள் ஓடின. அவள் சொந்த சம்பாத்தியத்தில் இடம் வாங்கி பெரிய வீடாக கட்டினாள். நானும் தங்கையும் சென்று தங்கினால் தனித்தனி அறைகள். புத்தக அலமாரி, கேம்ஸ், கம்ப்யூட்டர் என அசத்தினாள். நான் கல்லூரிக்கு சென்றவுடன் பைக், தங்கைக்கு ஸ்கூட்டி என்று வாகணங்கள் வேறு. ஆனால் கடைசி வரை பெரியம்மா நகை அணியவே இல்லை. அப்பாவாலும் வாங்கித்தர முடியவில்லை. பெரியம்மாவும் தனியாக எதையும் வாங்கவில்லை. எதை வாங்கினாலும் எங்களுக்கே கொடுத்தாள்.

அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணம் ஆகாசத்தில் சுற்றிவிட்டு அவர்கள் வீட்டுக்கே திரும்ப வருமாம் கொள்ளி வைக்க. அம்மாவின் சம்பாத்யம் இடம் வாங்கியதோடு முடிந்து போனது. ஊரில் நாலைந்து மளிகைக் கடைகள் வந்து விட்டது. அம்மாவின் வியாபாரம் குறைந்து விட்டது. வருமானமும் குறைய ஆரம்பித்த்து. அம்மா என்னென்னவோ செய்து பார்த்தாள். ஆனாலும் முடியவில்லை. பாட்டி இறந்து போனாள்.

நாங்கள் பெரியம்மா வீட்டிலேயே தங்க ஆரம்பித்தோம். அம்மா எரிமலையானாள். எங்கள் உறவே வேண்டாம் என்று கோபித்துக் கொண்டு ஊருக்கு சென்று விட்டாள். அப்பாவும் ஒருமுறைகூட சென்று கூப்பிடவே இல்லை. அவள் ஊருக்கு சென்ற உடன் கடையை மூடிவிட்டு அப்பா வேலைக்குப் போனார். தானே சமையல் செய்தார், துணி துவைத்தார். அவர் வேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்தார்.

பெரியம்மா எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மாவை போய் கூப்பிட மறுத்து விட்டார். பெரியம்மா வீட்டிற்கு வந்து தங்கவும் சம்மதிக்கவில்லை. பெரியம்மாவே போய் அம்மாவை கூப்பிட்ட போது கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள். அவள் சென்ற அடுத்த வருடத்திலேயே தங்கைக்கு நல்ல வரன் வந்தது. பெரியம்மாவே எல்லாம் பேசி முடித்து விட்டாள். அம்மாவை போய் அழைத்து வரும்படி அப்பாவிடம் கேட்டாள் பெரியம்மா. அப்பா மறுத்து விட்டார். மீண்டும் ஒருமுறை அம்மாவிடம் போய் கூப்பிட்டு அவமானப்பட்டே திரும்பினாள். ஆனாலும் தங்கையின் திருமணத்தை வெகு சிறப்பாக ஊரே மெச்சும்படி நடத்திக்காட்டினாள். நானும் கல்லூரி முதுகலைப் பட்டம் பெற்று வேலைக்கு போக ஆரம்பித்தேன். ஐந்து வருடங்கள் ஓடியது,

இறைவன் எப்போதும் நல்லவர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவானாம். பெரியம்மாவிற்கு எங்கிருந்தோ வந்த இரத்தப் புற்று நோய் அவளை படுக்கையில் வீழ்த்தியது. இப்போது மரணப்படுக்கையில் இருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ தெரியாது. சொல்லி அனுப்பியும் இரண்டு நாட்களாக வராத அம்மா மூன்றாவது நாள் தயங்கித் தயங்கி வந்தாள்.

உறவினர்கள் அம்மாவைச் சூழ்ந்து கொண்டு அழ ஆரம்பித்தனர். அம்மாவும் அழுதாள். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்த்து. ஆனால் அங்கிருந்து வந்த பக்கத்து வீட்டு அத்தை உண்மையை புட்டு வைத்தாள். இங்கேயிருந்து எடுத்துச் சென்ற பணத்தில் இரண்டு வருடம் அம்மா சமாளித்திருக்கிறாள். ஆனால் பணம் கரைந்த்தும் பிறந்த வீட்டிற்கே பாரமாகி போய்விட்டாள். அங்கே யாரும் அவளை மதிக்கவில்லை. அப்பாவும் சென்று கூப்பிடாததால் இங்கே வரவும் முடியவில்லை. நன்றாக சாப்பாடு கூட கிடைக்காதாம். அந்த அத்தை சொன்னபோது எனக்கே பரிதாபமாகப் போய்விட்டது. ஆம் அம்மா ரொம்பவே மெலிந்திருந்தாள்.

அம்மா உள்ளே வந்தவுடன் கோபமாக அப்பா வெளியே சென்றார், என்ன செய்வாரோ என்று எங்களுக்கெல்லாம் பயம். வெளியே சென்றவர் அரைமணி நேரத்தில் திரும்பினார். கையில் ஒரு பை. வந்தவுடன் கண்களை மூடிப்படுத்திருந்த பெரியம்மாவை ஆவேசமாக எழுப்பினார். “மணி எழுந்திரு, எழுந்திரு மணி” என்று எழுப்பினார். பெரியம்மா மெதுவாக கண்விழித்தாள். உடனே அதே கோபத்தோடு போய் அம்மாவை இழுத்துவந்து பெரியம்மா முன் அமர வைத்தார். பின்னர் பையில் இருந்து வெளியே எடுத்தார். அத்தனையும் நகைகள். வளையல், கொடி, நெக்லஸ், தோடு என்று. “இந்த திருட்டு சிறுக்கி முன்னாடிதான் அத்தனையும் குடுக்கனும்னு நெனைச்சேன். நானே சொந்தமா வேலைக்குப்போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. போட்டுக்கோடா. இதில யாரும் பங்கு கேக்க அருகதையே இல்லை” என்று கண்ணீர்விட்டு அழுதபடி எல்லா நகைகளையும் தானே போட்டு விடவும் செய்தார். பெரியம்மா அமைதியாக புன்னகைத்தாள். ஒரு கண்ணாடியை எடுத்த வரச்சொன்னார். கண்ணாடியில் கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னர் அப்பாவைப் பார்த்து சொன்னாள். “நான் என்ன செஞ்சாலும் கோவித்து கொள்ள மாட்டீங்களே” என்றாள்.

அப்பா அழுதார். “உன்னை கோவிச்சுக்க எனக்கு அருகதையே இல்லடா செல்லம்” என்று மறுபடியும் கதறினார்.

பெரியம்மா மறுபடியும் “எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க, நான் என்ன செய்தாலும் ஒத்துக்கறேன்னு.” என்றாள்.

அப்பா தன் தலையில் அடித்து சத்தியம் செய்தார்.

பெரியம்மா புன்னகையுடன் அம்மாவை அருகில் அழைத்தாள். எல்லா நகைகளையும் கழற்றி அம்மாவை அணியச் சொன்னாள். அம்மா மறுத்தாள். அழுதாள்.

ஆனால் பெரியம்மா “என்னுடைய கடைசி ஆசை சில விஷயங்கள் இருக்கு. நான் யாருகிட்டயும் எதையும் கேக்கலை. ஆனால் உன்னிடம் கேக்கிறேன். இதை எப்படி வேனும்னாலும் வைச்சுக்க. எனக்காக நான் சொல்றதை செய்ய முடியுமா. மறுபடியும் இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு நான் இருக்கமாட்டேன். முதலும் கடைசியும் கேக்கிறேன் செய்வியா”. பெரியம்மா கெஞ்சினாள் அம்மாவிடம்.

அம்மாவோ முதல் முறையாக “அக்கா நான் உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு செறுப்பில அடிங்க வாங்கிக்கறேன். செத்துபோயிடுன்னு சொல்லுங்க இப்பவே ஆத்திலேயோ குளத்திலேயோ விழுந்துடுறேன். இதையெல்லாம் போட்டுக்க எனக்கு மனசு வருமாக்கா . இதைப்போட்டுக்கிட்டா நீ எழுந்து உட்கார்ந்திடுவேன்னு சொல்லு இப்பவே போட்டுக்கறேன்” என்று கதறினாள்.

ஆனால் பெரியம்மவோ இந்த ஒரு தடவை நான் சொல்றதை செய்யமாட்டயா என்று மீண்டும் கெஞ்சினாள். நானும் சென்று அம்மாவிடம் அணிந்து கொள், என்று சொன்னேன். பெரியம்மா முகத்தை பார்த்தபடியே எல்லா நகைகளையும் அணிந்து கொண்டாள். என்னை அழைத்து அம்மாவின் பீரோவில் உள்ள ஒரு பைலை எடுத்து வரச்சொன்னாள். நான் சென்று பெரியம்மா சொன்ன அடையாளமிட்ட பைலை எடுத்து வந்து கொடுத்தேன். அதில் இருந்து சில டாக்குமெண்டுகளை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள். “மல்லிகா கவனமா கேட்டுக்கோ, இதில் இந்த பெரிய வீடு, இந்த வீட்டில இருக்கிற அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள், அதில்லாம இரண்டு பெரிய காலியிடத்தினோட பத்திரம், பேங்க் டெபாசிட் எல்லாம் எனக்கு அப்புறம் உன் பேருக்கு மாத்தி எழுதியிருக்கேன். பையனுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்திட்டேன். பொண்ணுக்கு நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி வைச்சிட்டேன். அவருக்கு அவர் பூர்விக இடமும் கடையும் போதும். நான் சம்பாதித்த சொத்தில யாரும் பங்குக்கு வரமாட்டாங்க, மனுசங்க பணத்துக்கு ஆசைப்படறது இயல்புதான், உன்னை குறை சொல்லமாட்டேன். ஆனா நான் உங்கிட்ட ஒன்னு எதிர்பார்க்கிறேன். செய்வியா”, என்றாள்.

அம்மா முகம் வெளிறிப்போயிருந்தாள். முகம் களையற்று போய் ஒரு ஜடம் மாதிரி இருந்தாள். தலையை மட்டும் அசைத்தாள்.

அம்மாவின் முகம் பார்த்தபடி பெரியம்மா சொன்னாள், “நம்ம குடும்பத்தை விட்டுப்பிரியாம கடைசிவரைக்கும் எல்லோரும் ஒத்துமையா இருக்கனும். இதை மட்டும் எனக்காக செய்வியா”,

திடீரென உணர்வு பெற்றவள் போல “ ஐயோ அக்கா கண்டிப்பா செய்யறேன். நான் திருந்திட்டேன். எனக்கு சொத்தெல்லாம் எதுவும் வேண்டாம், நம்ம குடும்பத்தோட ஒன்னா இருக்கிற பாக்கியம் கிடைக்காதான்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன். எல்லாத்தையும் கொடுத்துட்டு நீ இப்படி படுத்திட்டியே அக்கா”, என்று அம்மா ஓலமிட்டு அழுதாள்.

அம்மாவின் அழுகை பெரியம்மாவின் செவிகளில் விழுந்தோ என்னவோ பார்வை அப்படியே உறைந்து போனது. வீடே அதிர்ந்த்து. எல்லோரும் கதறி அழுதனர். என் குரல் ஓங்கி ஒலித்தது, “அம்மா நீ சாகவில்லை, நீ சாகவில்லை, நீ எனக்கு மகளாக பிறப்பாய், நிச்சயம் மகளாகப் பிறப்பாய். வாழ்க்கை ஒரு சக்கரம். நீ எனக்காக வந்தேதான் ஆகவேண்டும்” மயங்கி சரிந்தேன்.



•••••••••§§§§§§§§














  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...