Tuesday, March 15, 2011

மழை வலுத்து விட்டது

மழை மேலும் வலுத்து வரும்போல் தோன்றியது. ஜில்லென்று ஈரக்காற்று மண் மனத்தோடு கலந்து உடல் முழுதும் பூசிச் சென்றது.

வீட்டின் வாயிற்படியில் நானும் என் மகளும் அமர்ந்திருந்தோம்.

அப்பா... அப்பா.... என்று இரண்டு முறை என்மகள் அழைத்த குரல் என்னை மாய எண்ண உலகில் இருந்து இழுத்து வந்தது.

என்னம்மா!!! என்றேன்.

“அப்பா மழை எங்கிருந்து வருகிறது?”, என்றாள் மெதுவாக.

“அது வானத்திலிருந்து வருகிறதம்மா”, என்றேன்.

“அங்கே எப்படி அப்பா மழை சென்றது”, என்றாள்.

“கடலில் இருக்கும் நீர் வெப்பத்தால் ஆவியாகி மேலே செல்கிறது. பின்னர் அது காற்றால் குளிர்விக்கப்பட்டு மேகமாகி பின்னர் மழையாக பொழிகிறது”, என்றேன்.

“அப்படின்னா அன்னைக்கு வருண பகவான் அருளால் தான் மழை பொழிகிறதுன்னு சொன்னீங்க”. என்றாள்.

கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். எங்கேயோ ஏடா கூடமாக மாட்டிக் கொண்டோமோ என்று யோசித்தபடி “ அது நம்முடைய நம்பிக்கை அம்மா, ஆனால் உண்மையில் மழை கடல்நீர் ஆவியாவதால் தான் உருவாகிறது நீ அறிவியல் மூலம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சி செய்”, என்றேன்.

“அப்படியென்றால் நம் நம்புவது எல்லாம் பொய் தானா அப்பா?. கடவுள் வந்து எதையும் செய்யமாட்டார் தானே? என்றாள்.

அதிர்ச்சியாக அவளைப் பார்த்தேன்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாதம்மா, நம்முடைய கடின உடல் உழைப்போ, உண்மையான நேர்மையான முயற்சியோ ஏதும் பலிக்காத சில சிக்கலான தருணங்களில் இறைவனை நம்புவதைத் தவிர வேறு வழியில்லையம்மா”.

“போன வாரம் ஆத்தாவக்கு உடம்பு சரியில்லாதப்போ நீங்க எத்தனை டாக்டரைப் பார்த்து என்னனென்வெல்லாம் செஞ்சீங்க. கடவுளே அவங்கள கூப்பிட்டுக்காதேன்னு கதறி அழுதீங்களே அப்பா, ஆனா மறுபடியும் ஆத்தா சாமிகிட்ட போயிட்டாங்கன்னு சொன்னீங்களே. அப்ப நீங்க உண்மையா முயற்சி ஏதும் செய்யலையாப்பா, இல்லை நீங்க சொல்லியும் கேட்காம கடவுள் ஆத்தாவ வரச்சொல்லிட்டாராப்பா” என்றாள்.

படீரென்று ஒரு இடி இடித்தது போல் இருந்தது. மனம் விக்கித்துப்போய் அமர்ந்து விட்டது. கொஞ்ச நேரம் ஏதும் பேச முடியவில்லை. அவள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனக்கே சந்தேகமாகப் போய்விட்டது. உண்மையிலேயே என்னுடைய முயற்சி நேர்மையானதாக இல்லையா அல்லது என் மகள் சொல்வது போல் கடவுள் ஏதும் செய்வதில்லையா?. மனம் அமைதியுறாமல் தத்தளித்தது. காலம் காலமாய் போற்றிப் பாதுகாத்து வந்த நம் மத நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் முட்டாள்தனமாய் பின்பற்றப் பட்டது தானா?. தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கையில் நம்மையெல்லாம் காக்க இறைவன் வருவான் என்று நம்பும் நாம் எல்லோரும் முட்டாள்களா? . கடவுள் அங்கிங்கெனாதாடி எங்கும் நிறைந்திருக்கிறான். காற்றை காண முடியாதது எப்படியோ அதுபோல அவனை காண முடியாது. உணரத்தான் முடியும் என்றெல்லாம் சொல்கிறார்களே எல்லாமே இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தானா?. யாருமே இல்லாத ஒரு காட்டில் தனியாக மாட்டியிருக்கும் ஒருவன் மேலே நடப்பதற்காக நம்மை விட மிகப்பெரும் சக்தி நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தைரியமாக நடக்கிறானே, அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவும் பயத்தை போக்கவும் ஒரு கைத்தடியாக மட்டுமே கடவுள் இருக்கிறாரா?. உண்மை தான் என்ன?. நிலை கொள்ளாமல் எண்ணங்கள் அலைந்த படியே இருக்க மீண்டும் என்னை நினைவுலகிற்கு அழைத்து வந்தாள் என் மகள்.


“அப்பா....அப்பா....அப்பா.... இங்க பாருங்கப்பா... ஆத்தா சாமிகிட்டப்போயிட்டாங்கன்னு சொன்னீங்களே, மறுபடியும் எப்ப வர்றேன்னு சொல்லியிருக்காங்க, எப்படியாவது பரிட்சை லீவு ஆரம்பிச்ச உடனே வரச் சொல்லுங்கப்பா எனக்கு நிறைய பாட்டு சொல்லித் தரேன்னு சொல்லியிருக்காங்க”. என்றாள்.

மனம் குமுறியது. கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்ததை அடக்கியபடி. சொன்னேன் “இனி ஆத்தா இங்க வரமாட்டாங்கடா. சாமிகிட்ட போய்ட்டா அவரு அவங்கள திருப்பி அனுப்ப மாட்டார்டா” என்றேன்.

“என்னப்பா சொல்லறீங்க. சாமி அவ்வளவு மோசமானவரா அப்பா, அவங்கள திருப்பி அனுப்பவே மாட்டாராப்பா”. என்றாள் சோகமாக.

இப்போது நான் விழித்துக்கொண்டேன். தெரியாத விஷயங்களைத் தெரியாது என்று சொல்வதை விட, 'அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம்' என்று தப்பித்துக் கொள்வது புத்திசாலித்தனம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“கடவுள் நல்லவரா மோசமானவரான்னு எனக்குத் தெரியலைம்மா, ஆனால் அவரு கூப்பிட்டு போயிட்டாங்கன்னா திருப்பி அனுப்பமாட்டார்டா?” என்றேன்.

“சரிப்பா, அவரு எப்படியோ இருந்திட்டு போகட்டும், லீவுக்கு ஆத்தவப் பாக்க நாம அங்க போலாமா?” என்றாள்.

இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. இல்லை நாம் தான் எதையும் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்றும் தெரியவில்லை.

“அங்கெல்லாம் அவரு கூப்பிட்டாத்தான் போகனும், நாமாப் போக முடியாதும்மா”. என்றேன்.

“என்னப்பா சொல்லறீங்க, மறுபடியும் நான் எப்பத்தான் ஆத்தாவ பார்க்கிறது” என்று சினுஙகினாள்.

“கடவுள் நம்மையும் ஒரு நாளைக்கு கூப்பிடுவாரு அப்ப போய் பார்த்திக்கலாம்டா” என்றேன்.

“என்ன சொல்லறீங்கன்னே புரியலைப்பா” என்றாள் பரிதாபமாக.

எனக்கும் தான் ஏதும் புரியவில்லை மகளே. எந்த விஷயமும் புரிந்து கொள்ளும் நிலையில் இங்கே வைக்கப்படவில்லை. எல்லாமே குழப்பமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் புரிந்து கொண்டதாய் நாம் அடிக்கும் தம்பட்டங்களை நாமும் நம்பி அடுத்தவரையும் நம்ப வைத்து எதையோ செய்து கொண்டிருக்கிறோம். மருத்துவம் முன்னேறி விட்டது என்று மருத்துவத்தை நம்பி அம்மாவை இழந்தாகி விட்டது. அறிவியல் முன்னேறி விட்டது என்று அறிவியலை நம்பினாலும் இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நம்முடைய முன்னேற்றங்களுக்கு எப்போதும் ஒரு எல்லை இருந்து கொண்டே இருக்கிறது. அதை உடைக்கும் போது இன்னொரு எல்லை வநது விடுகிறது. சிந்தனை தாறுமாறாக ஓடிக் கொண்டே இருந்தது,

என் நீண்ட அமைதியைக் கண்டதும் மேலும் என்னை தொந்தரவு செய்யாமல் எழுந்து உள்ளே சென்று விட்டாள் விடையறியாக் கேள்விகளுடன்.

நாமும் அலைகிறோம் நிறையக் கேள்விகளுடன் ஒரு குழந்தையின் ஞானம் கூட இல்லாமல்.

மிக வேகமான காற்றுடன் மழை வலுத்து விட்டது.

19 comments:

Yaathoramani.blogspot.com said...

நம்பிக்கை இன்றி வாழ்க்கை இல்லை
நம்பிக்கையை எது தருகிறதோ
அதை நம்பலாம்
அது கடவுளாய் இருந்தாலும் தப்பில்லை
கடவுள் மறுப்பானாலும் தப்பில்லை
இரண்டுக்கும் இடையில் உலவுவதுதான் சிக்கலானது
சிந்தனையைத் தூண்டும்நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

இந்த வாழ்க்கையின் ரகசியங்கள் நமக்கே புரிவதில்லையே!இதற்காக எத்தனை நூல்களைப் படிக்க,எத்தனை சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டி யிருக்கிறது!பின்னரும் முழுப் பயன் கிடைக்கிறதா?நாம் எப்படிக் குழந்தையின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது?
சிக்கலான ஒரு பிரச்சினையை எடுத்திருக்கிறீர்கள்!

DR.K.S.BALASUBRAMANIAN said...

மனதை தொட்ட பதிவு. கண்கள் கசிந்தன.

vasu balaji said...

அதுதான் வித்தியாசம். அவள் புரியவில்லை என்று போக முடிந்தாற்போல் நம்மால் முடியாது. புரியவில்லை எனத் தெரிந்தாலும் எதையாவது ஒப்பேத்தி ஆறுதல் தேடவோ, நம்பிக்கை கொள்ளவோ அல்லது குறைந்த பட்சம் திட்டவோ தோணும். நல்ல கேள்விகள்.

மதுரை சரவணன் said...

//நாமும் அலைகிறோம் நிறையக் கேள்விகளுடன் ஒரு குழந்தையின் ஞானம் கூட இல்லாமல். //
..really super. vaalththukkal.

ஹேமா said...

எங்களுக்குள்ளும் நிறையக் கேள்விகள்.ஆனால் குழந்தைகள்போல நேர்மையாகக் கேட்க மறுக்கிறோம்.உண்மையை ஒத்துக்கொள்வதுமில்லை !

Pranavam Ravikumar said...

நல்லாருக்கு..பகிர்விக்கு நன்றி!

அரபுத்தமிழன் said...

இந்த மழைக்குப் பின் அமைதி திரும்பட்டும். அருமையான பதிவு.
ஒரு குழந்தையைப் போல் திறந்த மனதுடன் அறியும் ஆவலுடன்
எதையும் கேள்வி கேட்போமானால் பதில் கிடைக்கும். ஆனால்
சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்க‌ மிகத் தாமதமாகும்.

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

VELU.G said...

நன்றி ரமணி

நன்றி சென்னை பித்தன்

நன்றி drbalas

நன்றி வானம்பாடிகள்

நன்றி மதுரை சரவணன்

நன்றி ஹேமா

நன்றி Pranavam Ravikumar a.k.a. Kochuravi

நன்றி அரபுத் தமிழன்

VELU.G said...

நன்றி ஷர்புதீன்

செல்வா said...

அண்ணா ரொம்ப அருமையா இருக்கு. எல்லாத்தையும் தெரியும்னு நாமளாதான் நினைச்சிக்கிறோம். ஆனா உண்மைலேயே நமக்கு தெரிஞ்சது ரொம்ப கம்மி அப்படிங்கிற விசயம் மட்டும் நமக்குத் தெரியுறது இல்ல ..

கடவுள் நம்பிக்கையும் அப்படியே .. தெரியலைனா தெரியலைன்னு சொல்லிடலாம் .. ஆனா அப்படி இப்படின்னு நம்மளோட கற்பனைகளை சொல்லும்போதுதான் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறோம் :-)

ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா ..

குட்டிப்பையா|Kutipaiya said...

//நாமும் அலைகிறோம் நிறையக் கேள்விகளுடன் ஒரு குழந்தையின் ஞானம் கூட இல்லாமல்//

எவ்வளவு உண்மை!!

இராஜராஜேஸ்வரி said...

நாமும் அலைகிறோம் நிறையக் கேள்விகளுடன் ஒரு குழந்தையின் ஞானம் கூட இல்லாமல். //
True.

ஷர்புதீன் said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!

:)

மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

ரிஷபன் said...

அந்தக் குழந்தையின் மனோபாவம் தொலைத்ததால்தான் நம் வாழ்வில் பல சிக்கல்கள்..
அருமை!

நிலாமகள் said...

நாமும் அலைகிறோம் நிறையக் கேள்விகளுடன் ஒரு குழந்தையின் ஞானம் கூட இல்லாமல். //

வ‌ள‌ர்ந்த‌தால் வ‌ந்த‌ வினைக‌ளில் இதுவுமொன்று! என்ன‌ செய்ய‌...?

arul said...

arumayana pathivu

Unknown said...

அருமை நல்ல பதிவு

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...