
உலக வெப்பமாதல் குறித்து வியத்தகு மாநா(டகம்)டு ஒன்றை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வெற்றிகரமாக நடத்தி கலைந்துள்ளன உலக நாடுகள்(இந்தியா உட்பட). முடிவாக எனக்குத் தெரியாது, எங்களால் முடியாது, நாங்கள் பொறுப்பல்ல, அப்படியெல்லாம் செய்யமுடியாது என்பன போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி அரங்கேற்றியுள்ளனர்.
அண்ணன் அமெரிக்காவும் இதை போன்ற நிலைகளுக்கு சீனா மற்றும் இந்திய மக்கள் தொகையே காரணம், எனவே அவர்களுக்கே முழுபங்கு என்று ஒரு மிகப்பெரிய உண்மையை உலகுக்கு சுட்டி காட்டியுள்ளது.
திருவாளர் ராஜபக்க்ஷே போன்ற சில பொதுநலவாதிகள் மட்டுமே மக்களைக் கொன்று கார்பன் டை ஆக்ஸைடு உருவாகமல் தடுத்து தனது பங்களிப்பை தந்துள்ளனர். நச்சுவாயு வெளியேற்றம் தான் மிகப்பெரிய காரணமென்றும் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதையும் அடுத்த நாடுகள் தான் அதை செய்யவேண்டும் என்றும் எல்லா நாடுகளுமே வலியுறுத்தியுள்ளன.
உலக வெப்பமாதலை கண்டுபிடித்த, அறிந்த, அளவிட்டு கொண்டிருக்கிற விஞ்ஞானிகள் மற்றும் அளவிள்ளாத பௌதீக அறிஞர்களை கொண்டுள்ள உலக நாடுகள் அவர்களை வைத்தே மாற்று வழிமுறைகள், சிக்கன நடவடிக்கைகளை கண்டறியாமல் அவர்களை வீட்டில் அமர்ந்து மாநாட்டு காட்சிகளை டீ.வி.யில் பார்க்கச் சொல்லி விட்டு, இவர்கள் அமைச்சர் அளவில் மாநாடு, பெரிய தலைகள் மாநாடு என்று கூல்டிரிங்ஸ் குடித்து விட்டு மக்களின் மனதில் கடல் நீரை வார்த்திருக்கிறார்கள்.
மக்களும் பாதியிலேயே டீ.வி. நிகழ்ச்சிகளை ஆப் செய்து விட்டு இவர்கள் ஏதாவது சாதித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு விஜய்யின் வேட்டைக்காரன் சினிமாவிற்கு சென்றுவிட்டனர்.
பூமி தான் வெறுமனே சூடாகிக்கொண்டேயிருக்கிறது.