
நான்முப்பது நாளில் செத்துப்போய்விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
அதிர்ச்சியாய் இருந்த அந்த செய்தியில் உறைந்து போனேன். துக்கம் தொண்டையை அடைத்த்து, மீண்டும இந்த உலகை பார்க்கவே முடியாதா? . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ? என்ற பயம் ஆட்டிப் படைத்தது.
விடுபடவே முடியாத துக்கம் நீண்டு கொண்டே சென்றது. கண்ணீர் விட்டு அழுதேன். காட்சிகள் வெறுமையாய் இருந்த்து. எதைப்பார்த்தாலும் இனி மறுபடியும் இதைப்பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது.
அப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது. இப்போது தான் என்மகனின் குழந்தை பள்ளிக்கு செல்கிறான். மகளின் பெண் பூபெய்தி 10 நாட்கள் தான் ஆகிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் முடியும் வரையாவது இருக்கலாம் என்றால் இந்த பாழாய்ப்போன வியாதி வந்து எல்லாம் கெட்டது. ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் பற்றி என்ன நினைப்பான்? வயதாகி முடியாமல் தளர்ந்து போனபின்பே இறப்பு வரும் என்று தானே நிணைக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டி, வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி நாளைக்கு செத்து விடுவாய் என்று என்னமோ நாளைக்கு பஸ் பிடித்து ஊருக்கு போய்விடு என்பது போல சொல்லி விடுகிறார்கள்.
என் வாழ்க்கை இப்படி ஒரு சின்ன வட்டத்திலேயே முடிந்து விடுமா?. எந்த ஊரையும் முழுதாக்க்கூட பார்க்க முடியவில்லையே. டில்லியில் தாஜ்மஹால் அற்புதமாய் இருக்கிறதாம். என்னால் சென்னையைக்கூட சுற்றிப்பார்க்க முடியவில்லை.
கடவுளே எனக்கு கடலைபருப்பி என்றால் கொள்ளை பிரியம். அதையாவது அடிக்கடி சாப்பிடலாமா என்னவோ தெரியவில்லை.
ஐயோ ரோட்டில் போகும் இந்த நாய்கூட என்னை பரிதாபமாக பார்க்கிறதே. என்ன கொடுமை எனைப்படைத்த இறைவனே இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டு வைக்கமாட்டாயா?. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா?.
மனிதனுக்கு ஆசைகள் அதிகம் தான். எனக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஏதுமில்லையே? மனம் துக்கப்பட்டு துக்கப்பட்டு வெம்பிப் போயிருக்கிறது. யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருக்க ஆசைப்படுகிறது.
கடந்த பத்து நாட்களாய் உள்ளேயே புளுங்கிக்கொண்டிருந்த என்னை கட்டாயப்படுத்தி வெளியே சென்று காலர நடந்துவிட்டு வரும்படி என் மகன் அனுப்பினான்.
ஒரே இடத்தில் புலம்பி கொண்டிருப்பதை விட வீதியில் கொஞ்சம் போய் வேடிக்கை பாருங்கள் அப்பா மனம் இலேசாகும் என்று என் மகளும் சொன்னபிறகு தனியே வெளியே வந்தேன்.
சில்லென்று மழைக்காற்று அடித்துக் கொண்டிருந்த்து. மாலை நேரம் வீதிகளில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடக்க நடக்க இறப்பு குறித்தான பயம் மறந்து போனது.
ஒரு பைத்தியக்காரன் வழியில் கிடந்த பேப்பரை பொறுக்கிய படியும் அதை தூக்கி எறிந்தும் யாரையோ திட்டினான். பின்னர் சிரித்தான். அன்று ஏனோ அவன் என்னைக் கவர்ந்தான். அவனையே கவனித்தபடி சாலை ஓரபெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.
குதித்து குதித்து சிரித்தபடி ஓடினான். பின்னாலேயே ஒடிவந்தான். எதையோ கீழே இருந்து எடுப்பது தூக்கி எறிவது, யாரையோ பார்த்து சிரிப்பது என கொண்டாட்டமாய் இருந்த்து அவன் வாழ்க்கை.
அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பைக், குறுக்கே ஓடிவந்த அந்த பைத்தியத்தின் மீது மோதி துக்கி எறிந்தது. பைக்கில் வந்தவன் கீழே விழுந்தான். கூட்டம் கூடிவிட பைக்கை தூக்கி அவனை எழுப்பி விட்டனர். மெதுவாக எழுந்தவன் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்த பைத்தியத்தை நோக்கி கத்தத் தொடங்கினான். “சாவு கிராக்கி, எங்கேயோ போய் பஸ்ல கார்ல விழாம என் பைக்தான் கிடைச்சுதா பொறம்போக்கு”, என்று வசைபாட என்கவனம் பைத்தியத்தின் மீது சென்றது.
அதுவரை அமைதியாக படுத்திருந்த பைத்தியம் மெதுவாக எழுந்து பைக்கையும், பைக்காரனையும் பார்த்த்து. மெதுவாக சிரித்தது. பின் வாய்விட்டு வேகமாக சிரித்தபடி கீழே கிடந்த பேப்பரை தூக்கி போட்டபடி குதித்து ஓட ஆரம்பித்தது.
ஒரு கணம் அதிர்ந்தேன். மரணத்தை எதிர்நோக்கிய சிரிப்பு. அகங்கராமாய் ஒரு பார்வை. திடீரென உலகம் சுழன்றது போல இருந்த்து எனக்கு. முன்பிருந்த உலகம் இப்போது அப்படியே மாறிவிட்டதோ என்று தோன்றியது.
மரணத்தை மேலே பட்ட குப்பையை தட்டுவது போல தட்டிவிடும் தைரியம். இறப்பு, இருப்பு என்பது பற்றின நிணைவு அகற்றி தைரியம். இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும் தைரியம். என்ன விந்தை இது. எனக்கு முன் போவோர் வருவோரெல்லாம் சிநேகமாய் பார்க்கிறேன். ஒருவரிடமும் எனக்கு போட்டியில்லை. இனி போட்டிபோட்டு அடையும் உச்சநிலை எனக்கு என்ன இருக்கிறது.
பஸ்ஸில் என்னைத்தள்ளி ஏறமுயன்றவனுக்கு ஒதுங்கி வழிவிட்டேன். சில்லறை இல்லையா என்று திட்டிய கண்டக்டரை சிநேகமாக பார்க்கமுடிந்த்து. எந்த வரிசையிலும் பொறுமையாக நிற்க முடிந்த்து. இந்த காத்திருத்தல் ஒவ்வொன்றையும் அனுபவித்தேன். என் குழந்தை, என் பேரன் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாரட்டும் மனம் வந்த்து.
முடிவாகிவிட்டது. இனி புலம்பினாலும் புலம்பாவிட்டாலும் அதுதான் எனும்போது எதுவும் எனதில்லை, எதையும் தூக்கி செல்ல வேண்டியதில்லை எனும் போது இனி நான் எதை காக்க போரட வேண்டும்?. மனதில் ஒரு நிரந்தர அமைதி தோன்றியது.
உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.
அந்த அதிசய நிலை எனக்கு இனி இல்லை.
ஒரு நண்பரை சந்திப்பதைப்போல என் மரணத்தை சந்திக்க, வரிசையில் என் முறைக்காக காத்திருக்கிறேன்.
எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?