
ஆடுகளோ
புல் மேயும் மாடுகளோ
அன்றி
இரைதேடும்
விலங்குகள் போக
மிஞ்சிய
மனிதர் மேய்வர்
மனிதரையே
இப்புவியில்......
ராணுவத்தில் ஆளெடுக்க...
போய் சேர்ந்தான் தங்கராசு
ஆறடி உயரம் அகலக்கணக்கெல்லாம்
முடிஞ்சு
கண்பார்வை சரிபார்த்து
ஓடச்சொல்லி ஒளியச்சொல்லி
எல்லாம் முடிஞ்சு
எழுத்துத் தேர்வாம் கடைசியிலே...
ரிசல்ட்டில் பாசாகி
கவர்ண்மென்ட் ஆர்டரிலே
வேலைக்குப் போனான் பார்டரிலே..
அடுத்த மாச சம்பளத்தில்
ஆரணிப் பட்டெடுக்க
தோரணையோடு போனான்....
நாப்பது பேர் செத்தாங்கன்னு
சண்டைக்கு போச்சு ஒரு குரூப்பு
அதோடு போச்சு இவன் ட்ரூப்பு
பத்தாநாள் காத்தால பன்னென்டு
குண்டு பட்டு
பொட்டியிலே போனான் ஊருக்கே திரும்ப
இப்படியாக
ரானுவத்தில் ஆளெடுக்க
போய் சேர்ந்தான் தங்கராசு
மெல்லிய சிறகொன்று ஒரு
பறவையின் இறகிலிருந்து பிரிந்து
காற்றில் வரையும் ஓவியம் போல்
என் அறையெங்கும் நிறைகிறாய்.....
தொலைந்ததாய் தேடும் என்முன்
வந்தமர்கிறாய்.....
இதைத்தானே தேடுகிறாய்
இல்லை இதையா தேடுகிறாய்
என்பதாய்
இருக்கும் எல்லாவற்றையும்
எடுத்தென் முன்னெங்கும் நிரப்புகிறாய்...
அம்மா அழைக்கிறாள் என்று
அவசரப்படுத்துகிறாய் அடுத்தகணம்
சும்மா சொன்னேன் என்று
சிரிக்கிறாய்......
கண்டுபிடிக்க சொல்லி என்
கண்முன் மறைகிறாய்.......
வெளித்தெரியும் கைகளும்
மறைந்து நோக்கும் கண்களுமாய்
எனைத்தானே தேடுகிறாய்
எனையா தேடுகிறாய் என்று உருகுகிறாய்...
கணப்பொழுதில் வந்தென்
கால் தழுவுகிறாய்
காற்றாய் மாறி என்உயிர் நிறைக்கிறாய்...
அரிசியில் பருப்பை
எண்ணெயில் நீரை ஊற்றியதோ
குளிக்க மறுத்து தரையில்
குதித்து அடம் பிடித்ததோ
அக்காவின் நோட்டில் கிறுக்கி
அடுப்பில் போட்டதோ
அப்பாவின் சட்டையை கிழித்து
குப்பை துடைத்ததோ
சாப்பிட பிடிக்காமல்
தட்டை உதைத்ததோ
என்னை அதட்ட
அம்மாவிற்கான காரணங்கள்
ஆயிரம் இருந்தும்
அழத் தயாராகும் என் முகம் கண்டதும்
செல்லமே என
ஆரத் தழுவிக்கொள்வாளே
எங்கு காண்பேன் அவளை
இனி இப்பூதளத்தில்
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...